போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நட...
`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
போர் எப்போது முடியும் என்பது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஈரானை முடிக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இது தவிர ஈரானை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று கூறினார்.

ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது குறித்தும் அமெரிக்கா பயப்படுகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, "அவர்கள் எப்போதும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சிலர் இறந்துவிடுவார்கள். போருக்குச் செல்லும்போது, சிலர் இறக்கத்தான் செய்வார்கள். தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவை அணுகுகிறது.
ஆனால் அவர்கள் கோரிக்கை தாமதமாக வந்தது. அமெரிக்கா இப்போது அவர்கள் செய்வதை விட அதிகமாக போராட விரும்புகிறது. அமெரிக்க ராணுவம், இஸ்ரேல் படையுடன் இணைந்து ஈரானின் ஏவுகனை மற்றும் ட்ரோன்களை அழிக்க எந்நேரமும் பணியாற்றி வருகிறது. முதலில் ஈரானை முடிக்க விரும்புகிறோம். அதனை முடித்துவிட்டு கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக" அவர் தெரிவித்தார்.
கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமெரிக்கா வழங்கிய ஏவுகணை பாதுகாப்பு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ரேடார்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















