செய்திகள் :

`அணையின் இறுதி கல்... கட்டுமான முறை, வளர்ச்சி; கட்டிடக்கலை அம்சங்கள்; நிர்வாக அமைப்பு' | அணை ஓசை 29

post image

ஒவ்வொரு மாதமும் கட்டுமானப் பணியினைப் பற்றிய விவரங்களை விளக்கமாக தந்தால் மிகுந்த திகைப்பை அளிக்கும். அந்த அளவுக்கு அளவில் பிரம்மாண்டமான பணி நிகழ்ந்தேறியது. இவ்வளவு நீளமான பெரிய கட்டுமானத்தில் இடத்திற்கு தகுந்தாற்போல், சமயத்திற்கு ஏற்றவாறு பல கட்டுமான வழிகள் பின்பற்றப்பட்டன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக பார்ப்போம்.

முக்கியமாக, இரண்டு விதமான முறைகள் பின்பற்றப்பட்டன என்று கூறலாம்!

அணையின் இடது புறத்திலிருந்து 615 ஆம் அடியில் தொடங்கி 2800- வது அடி வரை இரண்டு பெரிய கான்கிரீட் கோபுரங்களை வைத்து கட்டடம் கட்டப்பட்டது. இதை நாம் முன்பே சிவப்பு மற்றும் கருப்பு கோபுரங்கள் என்று வாசித்தோம். அணையின் வடக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி சுவர்களில் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து பூசும் வேலையும், கான்கிரீட் போடும் வேலையும் ஒரே சமயத்தில் நடைபெற்றது.

கான்கிரீட் கோபுரங்களை நகர்த்தி வேலை செய்யும் போது அதை நகர்த்த அரை நாள் வீணாகிறது என்பதால், முடிந்தவரை குறைந்த அளவில் கோபுரங்களை நகர்த்த வேண்டிய அளவிற்கு திட்டமிடப்பட்டு வேலைகள் பிரித்தளிக்கப்பட்டது. பெரிய கான்கிரீட் கோபுரங்கள் மட்டுமின்றி அரை, முக்கால் மற்றும் ஒரு (1/2, 3/4, 1) கன அடி கொள்ளளவு கொண்ட கலவை இயந்திரங்கள் இந்தத் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை மிகச் சிறப்பான அளவில் பங்களிப்பு செய்தது.

கான்கிரீட் கோபுர கட்டமைப்பு

இந்த இயந்திரங்கள் மூலம் கலவை கலந்து அணையின் பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால் வெகு விரைவாக கட்டடம் எழுப்பும் பணி சாத்தியமாயிற்று. இரண்டு கான்கிரீட் கோபுரங்கள் எட்ட முடியாத, நீளமுடியாத இடங்களிலெல்லாம் இந்த கலவை இயந்திரங்கள் மூலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

முதன் முதலாக 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு “முதல் டிவிஷன்” என்று பெயரிடப்பட்டது. அந்த வருட இறுதியில் 8,14,335 கன அடி கான்கிரீட் மற்றும் மேஷனரி வேலைகள் (கட்டட) முடிக்கப்பட்டன.

மார்ச் 1929-ல் இதன் இரண்டாவது பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

முதல் பிரிவு, கட்டுமான பிரிவு மேற்புறம் (Division west) என்ற பெயரில் அணையின் நடுவில் இருந்து வலது புறம் கட்டி செல்லப்பட்டது. இரண்டாவது பிரிவு கட்டுமான பிரிவு -கிழக்கு (Division- East) என்ற பெயரில் அணையின் ஆற்றுப்பகுதியில் இருந்து கிழக்கே சீத்தாமலை வரை கட்டிச் செல்லப்பட்டது. 1929 ஆம் வருட முடிவில் முதல் பிரிவு 35,22,247 கன அடி மற்றும் இரண்டாவது பிரிவு 14,91,335 கன அடி அளவுள்ள கட்டுமானம் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு பிரிவுகளும் சேர்ந்து சற்றொப்ப 50 லட்சம் கன அடி கட்டுமானம் எழுப்பப்பட்டிருந்தது.

1930-ம் வருடம், ஜூன் மாதத்தில் இருந்து மூன்றாவது பிரிவு தொடங்கப்பட்டு, இடதுபுறத்தில் கரை ஓரமாக உள்ள இடத்தில் தேவைப்பட்ட அதிகப்படியான வேலைகளை பார்த்துக் கொண்டது. ஆக மொத்தம் 1930 இறுதியில் மூன்று பிரிவுகளும் சேர்ந்து ஒரு கோடியே 30 லட்சம் கன அடி கட்டட வேலைகளை கட்டி முடித்திருந்தார்கள் என்ற தரவுகள் மிகப் பிரம்மாண்டமான இந்த வேலையின் ஆரம்பத்தை நமக்கு உணர்த்துகிறது.

கட்டுமான வளர்ச்சியை காட்டும் வரைபடம்

1931-ல் மிகப் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் 3 கோடியே 5 லட்சம் கன அடி கட்டட வேலைகள் கட்டி முடிக்கப் பெற்றன. அந்த வருடத்தின் மே மாதம் மட்டுமே 17,70,939 கன அடி வேலை முடிக்கப்பட்டது. மொத்த கட்டுமான பணி 1931-ன் இறுதியில் 4,64,06,553 கன அடி என்ற அளவில் கட்டட வேலைகள் முடிக்கப்பட்டன.

இந்த நேரத்தில் அணையின் நீளம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அணையின் மேல் புறம் அமைக்க வேண்டிய சாலை பணி மட்டுமே அப்பொழுது பாக்கி இருந்தது. அணையின் உயரம் மேலே எழும்ப எழும்ப முடிக்கப் பெறும் கட்டட வேலையின் அளவு குறைய ஆரம்பித்தது. ஏனெனில் வேலை நடக்க வேண்டிய இடங்கள் குறுகலாகி போனதும் காரணமாகும்.

1933- ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கூறிய மூன்று பிரிவுகளும் கீழ்க்கண்டவாறு மொத்தமாக கட்டுமானப் பணியை முடித்து இருந்தார்கள்.

முதல் டிவிஷன் - 3,29,32,913 கன அடி.

இரண்டாவது டிவிஷன் - 1,48,25,619 கன அடி

மூன்றாவது டிவிஷன் - 59,26,009 கன அடி

ஆக மொத்தம் 5,36,84,541 கன அடி கட்டுமானம் கட்டி முடிக்க பெற்றிருந்தது.

1933-ம் வருடம் செப்டம்பர் மாதம் கட்டடப் பிரிவின் மூன்றாவது பிரிவு மூடப்பட்டது.

1934-ம் வருடம் ஜூன் மாதம் ஒன்றாவது பிரிவும், ஜூலை மாதம் இரண்டாவது பிரிவும் தங்கள் பணிகளை நிறைவு செய்தன. அணையின் மொத்த கட்டடப் பரப்பளவு 5,46,20,050 கன அடி. (சுமார் ஐந்தரை கோடி கன அடி).

அணையின் மேல்புறத்தில் அமைந்த தடுப்புச் சுவரில் 1934-ம் வருடம் ஜூலை மாதம் 14ஆம் தேதி கடைசி கல்லை வைத்து சம்பிரதாயமாக அணை வேலைகளை முடித்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சூப்பரின்டெண்டன்ட் ஆக இருந்த பொறியாளர் "பார்பர்" அவர்களின் மனைவியின் கைகளால் கடைசி கல்லை வைத்து வேலைகளை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மேற்பார்வை பொறியாளர் "பார்பர்" அந்த சமயத்தில் அனைத்து திட்டத்தின் முழு பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஏனெனில், 1933-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தலைமைப் பொறியாளர் (Engineer in chief) என்ற அணைத் திட்டத்தின் உயர் பதவியை மெட்ராஸ் மாகாண அரசு ஒழித்து விட்டது.

அணையின் மேல்புறம். டிராம்வே ரயில் பாதையுடன்

இந்த கடைசி கருங்கல்லில், இதுவே இறுதியாக பொருத்தப்பட்ட கல் எனவும், தேதியும் செதுக்கப்பட்டு அங்கே நிலை நிறுத்தப்பட்டது. இது ஆற்றின் மட்டத்திலிருந்து நேர் மேலாக அதிகபட்ச உயரத்தில், கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டதை இன்றும் நம்மால் காண இயலும்.

இந்த "இறுதி கல்" வைக்கும் நிகழ்ச்சி அங்குள்ள பொறியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆடம்பரம் இல்லாத சாதாரண நிகழ்வாக நடந்தேறியது!

இவ்வாறான உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக அமைந்த மேட்டூர் அணை திட்டத்தின் கட்டுமானப்பணி என்ற வகையில் நிறைவு பெற்றது. ஆனால், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. அவற்றை காண்போம்.

அணையின் புறத்தோற்றம் குறித்த விடயங்களை இப்போது பார்ப்போம். ஆரம்ப கால திட்டபடி அணையின் உயரமான மேல் பகுதியில் வளைவுகளைக் கொண்டதான கைப்பிடி சுவர் அமைக்க பெறுவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இறுதியில் அவை யாவும் நீக்கப்பட்டு எளிய தோற்றம் கொண்டதாகவும் அணையின் மேல் புறம் மொத்த அகலம் 18 - 20.5 அடி உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டது. இதில் கைப்பிடிச் சுவர் 2 அடி 3 அங்குலம் அளவு போக, அணையின் மேலே போடப்பட்ட பாதை 16 அடிக்கு கிடைத்தது.

மதகுகளை கொண்டு செல்ல அதன் மேல் "டிராம்வே" ரயில் பொருத்தப்பட்டு சுலபமாக அதன் பராமரிப்புக்கு அணையின் ஓரப் பகுதிக்கு கொண்டு செல்ல போதுமான இடம் உறுதி செய்யப்பட்டது. மதகுகளை மேலேற்றி, கீழிறக்க உதவும் கியர்கள் அணையின் சுவற்றின் உட்பக்கத்தில் அமைக்கப்பட்டது. ஒரு நபர் அங்கு சென்று மேலிருந்து பார்த்தால் மட்டுமே சுவற்றில் உட்புறம் இந்த அமைப்பு இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதனால், அணையின் அழகு சீராக மிளிர்ந்தது எனலாம்!

அணையின் மேல்புறம். பாதுகாப்பு சுவற்றுடன்

இந்த இடத்தில் அமையப்பெற்ற உயர் மட்ட கால்வாய் மதகுகளை சமீப ஆண்டுகளாக ஜுன்-12ம் தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு திறந்து விடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகள் முதல், அமைச்சர், முதலமைச்சர் வரை நீர் திறந்து விடுவது அணையின் இந்த மேற்புறத்தில் இருந்து தான்!

மேலும், அணை சுவற்றின் தெற்கு பகுதியில் அடி பாகத்தில் இருந்து மனிதர்கள் ஏறிச் செல்ல சிறிய அளவிலான இரும்பு படிக்கட்டுகள் கைப்பிடி வசதியுடன் அமைக்கப்பட்டது. இவை அணையின் வெளித்தோற்றத்தை கிஞ்சித்தும் குறைக்கவில்லை.

அணையின் உள் மற்றும் வெளிச் சுவர்களில் கற்களுக்கு இடையே, சிமெண்ட் கலவை வைத்து பூசப்பட்டு ஒரே மட்டத்தில் கற்களின் அமைப்பை சீர் செய்ததால், இவ்வளவு பெரிய அணையின் சுவர் மென்மையானதாக தோற்றமளித்தது. முன்பே தயார் செய்து வைக்கப்பட்ட "ப்ரீ காஸ்ட்" (pre cast concrete blocks) கான்கிரீட் பிளாக்ஸ் அணையின் மேல் புறத்தில் கைப்பிடிச் சுவரில் பயன்படுத்தப்பட்டது. அணையின் மேல் புறச்சுவர் எப்போதும் வெயில் படும் படியும், வெவ்வேறு காலச் சூழலுக்கு ஈடு கொடுக்க வேண்டிய அவசியமும் உள்ளதாக இருந்ததால், மேல்புறம் சிறந்த முறையில் பாதுகாப்பு செய்யப்பட்டது. சில இடங்களில் மட்டும் வளைவுகளை அமைத்து அணையின் அழகு மெருகூட்டப்பட்டது.

காவிரி டெல்டாவில் கடலின் முகப்பிலிருந்து தோற்றம்.(1911)

"ப்ரீ காஸ்ட்" கற்கள் செய்வதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட மேஸ்திரி வைத்து, தரம் உறுதிப்படுத்தப்பட்டு அதைக் கொண்டு பல வேலைகளை விரைவாக செய்து முடிக்கப்பட்டன! அணையின் இடது புறக்கரையில் மலை உச்சியில் "பெவிலியன்" என்றழைக்கப்படும் "மாடம்" முழுவதும் "ப்ரீ காஸ்ட்" மட்டுமே வைத்து எழுப்பப்பட்ட கட்டடமாகும். அங்கு தான் மேட்டூர் அணை கட்டுமானம் முடிந்த பிறகு திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடத்தை சாதாரண முறையில் கட்ட முயற்சித்து இருந்தால் ஆணை பிறப்பிக்கப்பட்ட நான்கு மாதங்களில் இந்த பணி முடிவடையாமல் போயிருக்கலாம். இந்த பெவிலியன் கட்ட அடித்தள பணி நடக்கும் போது அதன் மற்ற எல்லா பகுதிகளும் "ப்ரீ காஸ்ட்" முறையில் அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. திறப்பு விழா குறித்த விவரங்களை அடுத்த பதிவுகளில் காண்போம்.

அணையின் இரண்டு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள மின்சாரக் கம்பங்கள் இந்த "ப்ரீ காஸ்ட்" மூலம் செய்து பொருத்தப்பட்டு அழகான தோற்றத்தை கொடுத்தது.

அணையின் மேல் புறத்தில் அமைந்த சாலை மிகத் தரம் வாய்ந்த கான்கிரீட் மூலம் போடப்பட்டது. அங்கு தளம் போட அரை அங்குலம் அளவுக்கு ஜல்லிகள் தயார் செய்து கலக்கப்பட்டன. இந்த சாலையின் மீது "டிராம்வே" ரயில் பாதை அணையின் முழு நீளத்துக்கும், மேற்கு கரையிலிருந்து கிழக்கு கரை வரை மற்றும் அவசரகால மதகுகள் பழுது பார்க்கும் இடம் வரையிலும், மேலும் அங்கிருந்து ரயில் நிலையம் வரையில் நீட்டப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. பணிமனைகளும் இணைக்கப்பட்டன.

இந்த ரயில் தண்டவாளங்கள் தரையோடு சமமாக பொருத்தப்பட்டன. இதனால் மிகுந்த பாதுகாப்புடன் அந்த சாலையில் மோட்டார் வாகனங்களும் இயக்கப்பட்டன. மழை பெய்யும் நேரங்களில் அணையின் மேல் புறத்தில் சாலையில் விழும் நீர் வடிந்து ஓடுவதற்கு நான்கு அங்குல உருளை குழிகள் அமைக்கப்பெற்று சீரான 32 அடி இடைவெளியில் அணையின் இரண்டு பக்கங்களில் வழிந்தோட வழிவகை செய்யப்பட்டது.

இந்த நேரத்தில், கால அளவில் நாம் சற்று பின்னோக்கி பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அணை கட்டுமான திட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை தெரிந்து கொள்வது அவசியம். முன்னதாக, திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதி அளித்த கையோடு புதிய அலுவலகம் "காவிரி- மேட்டூர் சர்க்கிள்" என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. 1925 -ம் வருடம் மே மாதம் 21ஆம் தேதி முதல் இந்த "சர்க்கிள் ஆபீஸ்" (CIRCLE OFFICE) பணி செய்ய துவங்கியது.

இதன் அலுவலகம் முதலில் கோயம்புத்தூரில் இயங்க ஆரம்பித்து, பிறகு ஈரோட்டுக்கு இடம்பெயர்ந்தது. இதனால் வேலை நடக்கும் மேட்டூருக்கு அருகில் அலுவலகம் அமையும் வாய்ப்பு உண்டானது. அந்த நேரத்தில் மேட்டூரில் அலுவலகத்துக்கென்று எந்த கட்டடமோ அல்லது இடமும் கூட தேர்வு செய்யப்படாத நிலை இருந்தது. மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு புதிய பகுதி திறக்கப்பட்டு காவிரி மேட்டூர் அணை திட்டத்திற்கு வரவேண்டிய இயந்திர பாகங்கள் மற்றும் இதர பொருட்கள் அங்கு பெறப்பட்டு இறக்கி வைத்து, சாலை மூலம் ஈரோடு- பவானி வழியாக மேட்டூர் கொண்டு செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. "ஹெட் ஒர்க்ஸ்" (Head works) எனப்படும் அணைக்கட்டு கட்டுமான பிரிவின் ஒரு அலுவலகம் தனது தலைமை அலுவலகத்தை பவானியில் ஏற்படுத்தியது.

கடைசி கல்- சமீபத்திய புகைப்படம்- பின்புறம் காவிரி ஆறு

"கேனல் டிவிஷன்" எனப்படும் பாசனக் கால்வாய் பிரிவின் தலைமை அலுவலகம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு இறுதியில் பண்டகசாலை (Stores) மற்றும் சோதனை செய்யும் பிரிவு (Testing Division), மேட்டூரில் உருவாக்கப்பட்டது.

தொழில்நுட்ப வேலைகள் தவிர்த்து இதர ஆரம்ப வேலைகளை கவனிக்க இந்தியன் சிவில் சர்வீஸ் (ICS) படித்த ஒரு மூத்த அலுவலர் இந்த திட்டத்தின் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நிர்வாக வேலைகளுக்கு பொறுப்பாளராகவும், அரசுக்கு நேரடியாக ரிப்போர்ட் செய்பவராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய முக்கிய வேலை இந்தத் திட்டத்திற்கு தேவைப்படும் நிலங்களையும், குடியிருப்புகளுக்கு தேவைப்படும் நிலங்களையும் கையகப்படுத்துவதாகும். தொடர்ந்து, காவிரி -மேட்டூர் அணை திட்டத்திற்கு முழு பொறுப்பாளராக "தலைமைப் பொறியாளர்" என்ற பதவி உருவாக்கப்பட்டு அப்போதைய பொதுப்பணித்துறையில் (PWD) தலைமை பொறியாளர் பதவிக்கு சமமான பதவியாக ஒருவர் மே 1ஆம் தேதி 1927 ஆம் வருடம் நியமிக்கப்பட்டார்.

உடனடியாக கமிஷனர் நீக்கப்பட்டு அவர் கவனித்து வந்த பொறுப்புகள் அனைத்தும் (தலைமைப் பொறியாளர்) “என்ஜினீயர் இன் சீஃப்” வசம் ஒப்படைக்கப்பட்டது. "ENGINEER IN-CHIEF" பொறுப்புக்கு பொறியாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகு இந்தத் திட்ட பணிகள் வெகு வேகமாகவும், முழுமூச்சுடன் செயல்பட ஆரம்பித்தது.

செயல் பிரிவுகள் பல ஏற்படுத்தப்பட்டன. முக்கிய அணைக்கட்டு பகுதியில் பண்டகசாலை மற்றும் சோதனை பிரிவாக செயல்பட்டு வந்த பிரிவு, அதிகளவு சுண்ணாம்பு படிவங்கள் கிடைக்குமிடம் மேலும் மணல் மற்ற பொருட்கள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று தேடுதல் வேலையை செய்து வந்தது. அதோடு சேர்ந்து பிறகு சாலைகள் வடிவமைப்பு, குடியிருப்புகள் மற்றும் குடிநீர் வழங்குதல் இவற்றோடு சாக்கடை வசதிகள் போன்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தது.

கல்லணை மற்றும் கால்வாய்களின் வரைபடம்

மேலும் நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றுள் இரண்டு பிரிவுகள் அனைத்து கட்டுமானத்தையும், குடியிருப்புகளை கட்டவும் மற்றும் பணிமனை, (workshop) இயந்திரங்கள் செயல்பாடு பிரிவாகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தேவையான சிறப்பு இயந்திரங்களின் வடிவமைப்பு, கொள்முதல் செய்தல் மற்றும் அவற்றை நிர்மாணிப்பதற்கென்று "சிறப்பு மேற்பார்வை பொறியாளர் மெஷினரி" என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு ஒரு பொறியாளர் அதற்கென்று நியமிக்கப்பட்டார் (Superintendenting Engineer).

பாசனக்கால்வாய் திட்டப் பணிகளுக்கு ஒரு மேற்பார்வை பொறியாளர் தனியாக நியமனம் செய்யப்பட்டார். அவருக்குக் கீழ் மூன்று கட்டுமான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு கால்வாய் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் நான்காவது பிரிவாக சிறப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்தி பாசனக் கால்வாய்களின் எல்லை நிர்ணய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் சமயங்களில் பிரிவுகளை ஒவ்வொன்றாக குறைத்து, உட்பிரிவு அலுவலகங்களையும் எண்ணிக்கையில் குறைத்து, குறைந்தபட்ச நபர்களை மட்டும் அங்கே நிலை நிறுத்தினர். பாசனக் கால்வாய் மேற்பார்வை பொறியாளர் பதவி விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு மேட்டூர் திட்ட தலைமை பொறியாளர் அவர்கள் அந்த வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார்.

அணைக்கட்டுமானத்தின் கடைசி கல் (14 ஜுலை 1934)

1933-ம் ஆண்டு, ஓரளவுக்கு திட்ட பணிகள் அனைத்தும் முடிந்து அணை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தலைமைப் பொறியாளர் பதவியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு அனைத்து வேலைகளையும் "மேற்பார்வை பொறியாளர் - காவிரி மேட்டூர் திட்டம்" என்ற பதவியில் ஒருவர் மட்டும் நிலை நிறுத்தி அவர் நேரடியாக சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர், பாசன வசதி அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1934-ம் வருடம் செப்டம்பர் மாதம் அணையின் எல்லாவித கட்டுமானங்களும் முடிந்த பிறகு மேற்பார்வை பொறியாளர் கட்டுமான பிரிவு குறைக்கப்பட்டு ஒரே ஒரு பிரிவு மற்றும் செயல்பட அனுமதித்து Head works Division என்ற அந்த பிரிவு கோயம்புத்தூர் வட்டத்துடன் இணைக்கப்பட்டது. பாசன பிரிவுகள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டு அதுவும் தஞ்சாவூர் வட்டத்தில் இணைக்கப்பட்டது.

இவை அனைத்தும் நிர்வாக வசதிகளுக்காக மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக கல்லணை வாய்க்கால் பிரிவு (Grand Anicut Canal) என்ற பிரிவின் பெயரால் ஒரு பிரிவு மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த கட்டுமான காலத்திலும், தேவையான குறைந்த அளவு ஆட்களை வைத்து அதிக திறன் கொண்ட அளவில் வேலைகள் செய்து முடிக்கப்பட்டது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்!

கல்லணைக் கால்வாயின் ரெகுலேட்டர்

முக்கிய அணைக்கட்டுப் பகுதிகளில் நடந்த பணிகள் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை பெரும் வண்ணம் திட்டமிட்டு செயல்படுத்தியதின் விளைவு, குறைந்த செலவில் பணியை நிறைவடையச் செய்ய முடிந்தது என்றால் அது மிகையல்ல! குறிப்பிட்ட கால அளவைவிட சுமார் ஒரு வருட காலம் முக்கிய அணைக்கட்டுப் பகுதி முன்னதாக கட்டி முடிக்கப்பட்டது. கட்டுமானம் செய்ய தாமதம் ஏற்பட்டிருந்தால், அதே போல பாசனக் கால்வாய் கட்டி முடிக்க சுமார் இரண்டு வருட காலம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், செலவானத் தொகை என்ற அளவில் கணக்கிடும் போது அது பெரிய இழப்பாக இருந்திருக்கும்.

அதைத் தவிர்த்து, மேற்குறிப்பிட்ட சீரிய நிர்வாகத் திறன் காரணமாக பெருமளவு தொகை சேமிப்பு ஏற்பட காரணமாக அமைந்தது என்பது கவனமாக கண்ணுற வேண்டிய விடயமாகும்.

திட்டமிட்ட தொகை-ரூபாய்

முக்கிய அணைப்பகுதி மட்டும் 48,71,500

சேமிப்பான தொகை-ரூபாய் - 11,04,000

திட்டமிட்ட தொகை-ரூபாய்

பாசனக் கால்வாய் மட்டும் 25,55,400

சேமிப்பான தொகை-ரூபாய் - +90,228

பாசனக் கால்வாய் கட்டி முடிக்க இரண்டு வருட கால தாமதம் ஆனதால் சொற்பத் தொகை மட்டுமே அதிகமானது.

சலுகைகள்:-

அணைக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அலுவலர்கள், அதிகாரிகளுக்கு சில சலுகைகள் அப்போது வழங்கப்பட்டன.

மேட்டூர் திட்டம் வராத ஆரம்ப காலத்தில் மேட்டூர் கிராமம் வாழத் தகுதியற்ற, ஆரோக்கிய சூழ்நிலை குறைந்த மலை மற்றும் காடுகள் சூழ்ந்த சாதாரண குக்கிராமமாக கருதப்பட்டு “ஸ்பெஷல் லோக்கல் அலவன்ஸ்” எனப்படும் "படித்தொகை" அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலை இருந்தது. பின்னாளில், சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மேட்டூர் வாழத் தகுந்த ஆரோக்கியமான நகராக உருமாற்றம் அடைந்ததினால் இந்த சிறப்பு அலவன்ஸ் பின்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இலவச வீடு, இலவச மின்சாரம், ஃபேன் மற்றும் தண்ணீர் வசதி, இலவச பிரயாண வசதி என்ற அளவில் முதலில் ஈரோட்டில் இருந்து மேட்டூருக்கு, பிறகு மேட்டூரிலிருந்து மேட்டூர் ரயில் நிலையத்திற்கும் அளிக்கப்பட்டது.

அரசு பணியாளர்களுக்கு எரிபொருள் அதன் அடக்க விலைக்கே அளிக்கப்பட்டது. இது போன்ற, பல சிறப்புத் தள்ளுபடி மற்றும் இலவச வசதி அளித்ததால் மேட்டூர் அணை கட்டுமான பிரிவுகளில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சொந்த செலவு குறைந்த அளவில் மட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பணியாளர்கள் நலனை மேம்படுத்த, அவர்களின் வசதியைப் பேண அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அவர்களை மகிழ்வுடன் வைத்துக் கொள்ள முனைந்தது மிகவும் பாராட்டத்தக்க அம்சமாகும்.

பயணிப்போம்....

காவிரி நன்னீர் சிறப்பு

காரைக்குடி அருங்காட்சியகம்: காலத்தைக் கடந்த 2500+ அரிய வரலாற்றுப் பொருள்! | Photo Album

UPSC இலக்கு... புற்றுநோயாளிகளுக்கு உதவி... வியக்கவைக்கும் காரைக்குடி சிகையலங்கார கலைஞர்! மேலும் பார்க்க

F-SADDLE: உபரி நீர் வெளியேற்ற அமைப்பு; வெள்ளப்பெருக்கு சவால்; சாதனையாக்கிய தொழிலாளர்கள் | அணை ஓசை 28

திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தில் சேர்ப்புF-Saddle (F-சாடில்) உபரி நீர் வெளியேற்ற அமைப்புஆரம்ப காலத்தில் "கர்னல் எல்லீஸ்" வடிவமைத்த மேட்டூர் அணை திட்டத்தில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2... மேலும் பார்க்க

அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?

பழமையான பொருட்கள் மக்களின் பார்வைக்கு...வெள்ளலூர் அகழாய்வுகோவையின் வெள்ளலூரில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், சங்ககால வணிகத் தொடர்புகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. கு... மேலும் பார்க்க

வரலாற்றுச் சின்னமாக அழகுற காட்சியளிக்கும் எல்லீஸ் மதகுகள் (16 கண் பாலம்) கட்டுமானம் | அணை ஓசை 27

நீர் மின்சக்திகாவிரி-மேட்டூர் அணைத்திட்டத்தில் கட்டுமான பணி செய்யும்போது தற்காலிகமாக ஆற்றிலிருந்து நீர் வெளியேற்றம் செய்வதற்கு ஆரம்ப காலங்களில் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த அணையில் சேம... மேலும் பார்க்க

மேட்டூர் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பும்; நிதிப் பற்றாக்குறை விவாதமும் | அணை ஓசை 26

சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார் (1874 - 1937 ).மெட்ராஸ் மாகாண சட்ட கவுன்சில் கூட்டங்களில் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர் சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார். காவிரி - மே... மேலும் பார்க்க

தென்காசி: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு- தமிழக தொல்லியலில் மைல்கல்

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தான் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், தமிழர்களின் தொன்மை நாகரிக வரலாற்றை உலகிற்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கும் வகையில் முக்கியமான தொல்ல... மேலும் பார்க்க