பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோ...
`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' - எடப்பாடி சூளுரை
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று பங்கேற்றிருந்தார். கட்சியினர் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த தேர்தலில் அ.தி.மு.க 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றோம். இதற்கு காரணமாக வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

வெற்றி தோல்வி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். அ.தி.மு.க கூட்டணி ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 1996-ல் வெறும் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது 47 இடங்களில் வென்றிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். 2021-ல் 75 இடங்களில் வென்றோம். 2 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று தி.மு.க ஆட்சியமைத்தது. இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க மீண்டும் வென்று ஆட்சியமைக்கும். 1980-ம் ஆண்டு 2 இடங்களில் மட்டுமே பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம்.
ஆனால், மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் பெரும்பான்மையான இடங்களை பெறவில்லை. 8 மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட த.வெ.க வெற்றி பெறவில்லை. பல்வேறு கட்சிகள் ஆதரவில்தான் த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியமைத்துள்ள நான்கு கால்களில் 2 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. அந்தக் கால்கள் எப்போது நகர்ந்தாலும் நிலைமை மாறிவிடும். தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகள் தான் த.வெ.க ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க என்பது பீனிக்ஸ் பறவையைப் போன்றது. மீண்டும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும். அ.தி.மு.க- வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது. நான்கு எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு விலை பேசி பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். அதிமுக கட்சித் தொண்டர்கள் ரத்தத்தை வியர்வை சிந்தி உழைத்து வெற்றி பெற வைத்தார்கள். விரலில் மை காயும் முன் விலை போய்விட்டார்கள். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. கட்சித் தொண்டர்களுக்கும், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டார்கள். உங்களை வரலாறு மன்னிக்காது" என்றார்.















