“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது...
”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" - கருப்பு முருகானந்தம்!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். டெல்டாவில் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தேசிய அளவிலான பல பா.ஜ.க தலைவர்களுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர். கடந்த சட்டமன்ற தேர்தல் உட்பட பல தேர்தல்களில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் கருப்பு முருகானந்தம்.

இந்நிலையில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் கருப்பு முருகானந்தம் உடனடியாக கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கருப்பு முருகானந்தம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. திருச்சியில் வசித்த பெண் ஒருவர் கருப்பு முருகானந்தம் மீது கட்சி தலைமைக்கு புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் பா.ஜ.க-வினர் மட்டுமின்றி டெல்டாவில் அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் கருப்பு முருகானந்தம் தனதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கிய எனது இந்த நெடிய பயணம், பாரதிய ஜனதா கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் புகாருமின்றித் தூய்மையான முறையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்த ஒன்றாகும்.

இத்தகைய சூழலில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜி, மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி ஆகியோரிடத்தில் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.















