“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது...
புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சித்து அவ்வப்போது நகர்ப்பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருவார்.
அதன்படி, `புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருக்கும் வண்ணான் மடு என்ற நீர்நிலையை மீட்க வேண்டும்' என்று சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். ஆனால் கோபால் குறிப்பிட்டிருந்த அந்த இடம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அரசால் கையகப்படுத்தப்பட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இணைப்புச் சாலையாக போடப்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கும் அந்தச் சாலை, புதுச்சேரி மக்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலைகளில் ஒன்று. அதில் கடுப்பான சென்னை உயர் நீதிமன்றம், `மனுதாரர் குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்பட்டு, 30 ஆண்டுகளாக அது மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
அதனால் இத்தனை ஆண்டுகள் கழித்து திடீரெனத் தொடரப்பட்ட இந்த வழக்கு தேவையற்றது என்பதுடன், மிகவும் அற்பமானது' என்று கடுகடுத்தது. அத்துடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரர் கோபாலுக்கு ரூ.1,00,000 அபராதம் விதித்து, அதனைத் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்குச் செலுத்த உத்தரவிட்டிருந்தது. இந்தச் செய்தியை புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் கோபமடைந்த கோபால், காயத்ரி ஸ்ரீகாந்தின் பெண்மையை இழிவு செய்யும் விதமாகவும், கொலை மிரட்டலும் விடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் காயத்ரி ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபாலைக் கைது செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார்.
அதன்பிறகு ஜாமீனில் வெளியில் வந்த கோபால், காயத்ரியை பழிவாங்க முடிவெடுத்து ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, பெரியகடை என மூன்று காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார்களை அளித்தார். அதில், `காயத்ரி ஸ்ரீகாந்த் இரவு நேரத்தில் , தன்னை உல்லாசத்துக்கு கைகாட்டி அழைத்தார்' என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய்ப் புகார்களை அளித்திருக்கும் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மூன்று காவல் நிலையங்களிலும் புகாரளித்தார் காயத்ரி ஸ்ரீகாந்த்.

அந்தப் புகார்களின் மீது போலீஸார் நடத்திய விசாரணையில், கோபால் பழிவாங்கும் நோக்கில் பொய்ப் புகார்கள் அளித்ததை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தனர். ஆனால் கோபால் அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், அமைதியாக அவரை விசாரணைக்கு அழைத்து அப்படியே கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இந்தக் கைதுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைத்தும், ஆபாசமாகவும் பேசியும் கோபால் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கோபால் மீது புகாரளிக்கத் தயாராகி வருகிறார்களாம்.

















