“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது...
The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் - ஆனாலும் சொதப்புவது எங்கே?
25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 'டார்க் ஹெவன்' புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள்.
அங்கே அவருக்கு மேக்கரையின் சாபம் குறித்தும், ஒரு கட்டத்தில் அங்கே நிகழ்ந்த தொடர் மரணங்கள் குறித்தும் பிளாஷ்பேக்காகச் சொல்லப்படுகிறது.
அதில், ஊருக்குப் புதிதாக வரும் காவல் ஆய்வாளர் (சித்து), அந்த ஊர் மக்களின் மூடநம்பிக்கைகளை நம்ப மறுக்கிறார். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை அங்கே வனமங்கையின் சாபம் காரணமாக ஆண்கள் இறப்பது தொடர்ச்சியாக நிகழும் நிலையில், இந்த வருடமும் அது நடந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் மக்கள்.

இதனிடையே கேரளத்திலிருந்து தப்பிய தொடர் கொலைகாரன் ஒருவன், மேக்கரையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் பரவ, அடுத்தடுத்து மரணங்களும் நிகழ்கின்றன. இந்தக் கொலைகளுக்குக் காரணம் வனமங்கையின் சாபமா, தொடர் கொலைகள் நிகழ்த்தும் ஒருவனா என்பதை சித்து கண்டறியும் துப்பறியும் படலமே கதை.
தனக்குச் சரியென பட்டதைத் தைரியமாகச் செய்யும் அப்பழுக்கற்ற நாயகன் வேடத்தில் சித்து, காக்கிக்குள் டைட்டாகப் பொருந்துகிறார். ஆனால், ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே உணர்வில் அந்தக் கதாபாத்திரம் பயணிப்பதால் நடிப்பில் பெரிய வேலையில்லை.
முக்கியமான வேடத்தில் ரித்விகா, நல்லவரா, கெட்டவரா என்ற புதிரை இரண்டாம் பாதியில் சரியாகப் பின்னியிருக்கிறார். மற்றொரு பிரதான வேடத்தில் கான்ஸ்டபிளாக பிரதீப்பின் நடிப்பு பலம்! சித்துவின் மனைவியாக தர்ஷிகா, மேக்கரையின் முகங்களாக வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார் ஜானகிராமன், சாப்ளின் பாபு, ஆர்த்தி எனப் பலரும் தங்களின் பணிகளைச் சரியாகவே செய்திருக்கின்றனர்.

தென்காசி - திருநெல்வேலி பகுதியில் வரும் மேக்கரையின் எழிலையும், காடுகளின் அமானுஷ்யத்தையும் தேவையான அளவு திரைக்குக் கொண்டு வந்திருக்கிறது பி.கே.மணிகண்டனின் கேமரா.
முதல்பாதியில் வேகத்தைக் கூட்டிப் பரபரப்பைக் கொண்டு வரும் ராஜா ஆறுமுகத்தின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியின் லாஜிக் கேள்விகளால் வேகம் இழந்து தடுமாறியிருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையில் பின்னணியில் வரும் பாடல்கள் சில இடங்களில் உதவினாலும், பின்னணி இசையில் இன்னுமே மேஜிக்கை நிகழ்த்தியிருக்கலாம்.
பேய், அமானுஷ்யம், கடவுளின் சாபம் என்று தொடங்கி, பின்னர் முழுநீள விசாரணை த்ரில்லராக மாறும் படத்தை முடிந்தளவு கரையேற்றப் போராடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி. கதையாக இதை எழுதிய விதம் பாராட்ட வைத்தாலும் அதைத் திரைக்கதையாக மாற்றுவதில் போதாமைகளும் குழப்பங்களுமே எட்டிப் பார்க்கின்றன.
பேய், சாபத்தை நம்பும் மக்கள், பகுத்தறிவுவாதியாக நாயகன் என்ற காம்போ தொடக்கத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காணாமல் போனவர் பற்றிய விசாரணைக் காட்சிகள், அதன்பிறகு நிகழும் தொடர் கொலைகள் என அந்த எபிசோடே நன்றாக எழுதப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அங்கே கிடைத்த வேகத்தை இரண்டாம் பாதியில் தொலைக்கிறது திரைக்கதை.

நடக்கவிருப்பதைச் சொல்லும் அமானுஷ்ய புத்தகம், பெண் கடவுளின் சாபம் என்றெல்லாம் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, அந்தப் பக்கமே செல்லாமல் சாதாரண ட்விஸ்ட்களை அடுக்கி த்ரில்லைக் காலி செய்கிறது படம். கொலையாளி(கள்) யார் என்று வெளிப்படும் இடமும் எந்தவித அதிர்ச்சியோ, ஆச்சர்யத்தையோ கடத்தவில்லை என்பது ஏமாற்றமே!
அந்தப் புத்தகம், அதனுடன் முன்கதையாகச் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இந்தப் படத்துக்கு எதற்கு, கொலையாளிக்குத் தொடர்புடைய ஒரு பாத்திரம் உண்மையில் இறந்தது எப்படி, கொலையாளிகள் வித்தியாச முகமூடி அணிந்துவந்து, வயலின் வாசித்துக் கொல்வதற்கான காரணம் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடைகளில்லை. எல்லாவற்றுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை என்று சொல்லுவது போங்காட்டமே!
நல்லதொரு கதைக் களமும், துப்பறியும் படலமும் இருந்தாலும், இரண்டாம் பாதியின் தடம் புரளலால் வெளிச்சம் தராமலே ஏமாற்றியிருக்கிறது இந்த 'தி டார்க் ஹெவன்'.















