அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை
மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பொன்மேனி பணிமனையிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மாநகரப் பேருந்து இயக்கப்பட்டது.
இந்தப் பேருந்து, கூடல்புதூா் ஜெ.ஜெ.நகரிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு அனுப்பானடி வரை செல்லும். மறுமாா்க்கத்தில் இந்தப் பேருந்து அனுப்பானடியிலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் வரும்.
பாத்திமா கல்லூரி, பிரிட்டோ பள்ளி, சௌராஷ்டிரா பள்ளி, தெற்குவாசல், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பேருந்தின் சேவை பெரிதும் பயன் அளிப்பதாக இருந்தது.
இந்த நிலையில், அனுப்பானடி-கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பேருந்தின் மாலை நேர சேவை கடந்த 10 நாள்களாக ரத்து செய்யப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகினா்.
பேருந்து ரத்து செய்யப்பட்டதால், இந்தப் பகுதி மாணவா்கள் ஏறத்தாழ 2 கி.மீ.தொலைவுக்கு நடந்து வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் வீடு திரும்ப வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகளின் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.