அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | ...
அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.
இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தியதால் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொந்தரவாக இருந்துள்ளதாம்.

அதனால், நிகழ்ச்சியை நிறுத்துமாறு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறியுள்ளனராம்.
அப்போது அதனை ஏற்க மறுத்த மாரிக்கண்ணன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கும் தகவல் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேஷ்வரனை விழா நடைபெறும் இடத்திற்கு வர விடாமல் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் வரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
”எங்க ஊருக்குள்ள நீ வரக்கூடாது” எனக் கடும் வாக்குவாதம் செய்ததுடன் "ஏ போலே போ..'' என ஒருமையில் பேசி தள்ளி விட்டு அவரைத் தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதை எடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவியாளரைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸார் முனீஸ்வரன், அழகுமுத்து ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனர். கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை புதிய தமிழகம் கட்சியினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















