உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்தி...
"அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்றன" - ஷாலின் மரியா
வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் எழுதிய ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியானது. இந்நூலை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி வெளியிட்டார்.

தன்னுடைய புத்தகம் குறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் விகடனிடம் பேசுகையில்,
“இது எனது நான்காவது புத்தகம். இதில் இரண்டு புத்தகங்கள் தீவிர பெண்ணியத்தைப் பேசும் நூல்கள். இப்போது வெளியாகும் இந்தப் புத்தகம் கூடுதல் சிறப்பானது என்பதற்குக் காரணம், இதில் நான் அம்பேத்கரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
இதுவரை என் புத்தகங்களில் அம்பேத்கரைச் சேர்க்காதது எனக்கே ஒரு அவமானமாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இவ்வளவு நல்லது நடந்ததற்குக் காரணமே அம்பேத்கர்தான். அம்பேத்கர் அமைச்சராக இருந்து ராஜினாமா செய்ததும் பெண்களுக்காகத்தான்.
இந்தப் புத்தகம் பல விஷயங்களைப் பேசுகிறது. மோசமான திருமணங்களில் இருந்து, நச்சுத்தன்மை நிறைந்த காதல் உறவுகளில் இருந்து பெண்கள் எப்படி வெளியில் வர வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருக்கிறேன். காதல், காமம் என எல்லா உறவுகளிலும் சுயமரியாதை அவசியம். இந்திய அரசியலமைப்பு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறது.
திருமணப் பலாத்காரம் இன்றுவரை குற்றமாகக் கருதப்படவில்லை. ஆனால் அம்பேத்கர் அப்போதே அது குற்றம் என்று கூறியவர்.
இந்தப் புத்தகம் அம்பேத்கரை ஒரு பெண்ணியவாதியாக மறு அறிமுகம் செய்கிறது. ஆண்களும் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு அம்பேத்கர். அவர் பெண்களை அரசியல்படுத்தினார். இன்றைய அரசியல் தலைவர்கள் பெண்களைச் சேர்க்காமல் எப்படி அரசியல் பேச முடியும் என்று அம்பேத்கரைக் காட்டி கேள்வி கேட்கலாம்.

பெரியாரும் பெண்ணியம் பேசினார், அவரும் முக்கியமானவர்தான். ஆனால் சட்டங்களை இயற்றி, அவற்றை நடைமுறையில் கொண்டு வந்தவர் அம்பேத்கர். உலகம் முழுவதும் கருக்கலைப்பு உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய முடிகிறது.
அதற்குக் காரணம் அம்பேத்கரும் இந்திரா காந்தியும்தான். பெரியாரை பெண்ணியவாதியாக நிறையப் பேசியிருக்கிறோம். இப்போது அம்பேத்கரைப் பேச வேண்டும்.
சுரங்கங்களில் வேலை செய்த பெண்களைப் பார்த்துதான் அம்பேத்கர் எட்டு மணி நேர வேலை நேரம் முதல் மகப்பேறு மசோதா வரை கொண்டு வந்தார். பெண்களுக்கான சட்டங்களை அம்பேத்கர் கொண்டு வரவில்லை என்றால், இந்தியா ஒரு ஆப்கானிஸ்தான் அல்லது இன்னொரு ஈரான் ஆகி இருக்கும். சரோஜினி நாயுடு கூட, அம்பேத்கர் குடும்ப அமைப்பை ஒழிக்கிறார் என்று விமர்சனம் செய்தார்.
ஒருமுறை, ஓரினச்சேர்க்கை ஜோடியின் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக அம்பேத்கர் வாதாடினார். அன்றைக்கு அவர் தோற்றுவிட்டார். ஆனால் அவர் முன்வைத்த வாதங்களை அடிப்படையாக வைத்துதான் இன்று செக்ஷன் 377 குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கழிப்பறையைக் கட்டாயமாக்கியதும் அம்பேத்கர்தான். இவ்வளவும் செய்தது அம்பேத்கர்தான் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

1950லேயே ஒருவர் இவ்வளவு செய்ய முடிந்தால், 2026ல் நம்மால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். நமக்கான சட்டங்கள் உருவாக வேண்டும். உதவித்தொகை மட்டும் போதாது. இன்றைய பெண்ணியம் கேட்கும் பல கேள்விகளுக்கான பதில்கள் வரலாற்றிலேயே இருக்கின்றன.
பெரியாரே ஒரு இடத்தில், ‘அம்பேத்கர்தான் எனது தலைவர்’ என்று கூறியிருக்கிறார். காரணம், இருவரும் சமத்துவத்தை நம்பியவர்கள். ஆனால் அம்பேத்கர் சட்டமியற்றி, சமத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு படி முன்னே சென்றவர். மகாத்மா புலேவுக்குப் பிறகு பெண்களுக்காக இவ்வளவு உறுதியாக பாடுபட்டவரை நான் பார்க்கவில்லை” என்றார்















