செய்திகள் :

தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4

post image

1965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அது ஒரு குடியரசு தினம். அன்றைய தினத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அண்ணாவின் தலைமையில், தி.மு.க-வினர் அவரவர் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டது.  

கருமருந்து!

1937-ம் ஆண்டு பள்ளிக்கூடங்களில் கட்டாய இந்தியை ராஜாஜி கொண்டுவந்தபோது, மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்துக்கு பெரியார் தலைமை ஏற்ற பிறகு, போராட்டம் வீரியம் பெற்றது.

1960-ளிலும், ஆரம்பத்தில் தமிழறிஞர்களால்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு தமிழுணர்வை ஊட்டிய காரணத்தால், அது மிகப்பெரிய போராட்டமாக வடிவம் பெற்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கான கருமருந்தைத் தயாரித்தது தமிழறிஞர்கள் என்றால், அதில் தீவைத்து வெடிக்கச் செய்தவர்கள் மாணவர்கள்.

1960-களில் இந்தி எதிர்ப்புக்கான பரப்புரையைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் தமிழறிஞர் கி.இலக்குவனார். 1963-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதற்காக சிறை சென்று திரும்பியிருந்தார் அண்ணா. அப்போது, சீன ஆக்கிரமிப்பு விவகாரம் இந்திய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில், மதுரை தியாகராசர் கல்லூரியில் உரையாற்ற அழைக்கப்பட்டார் அண்ணா.

இந்தி என்ற அரக்கி

அந்த மேடையில் பேசிய பேராசிரியர் கி.இலக்குவனார், ‘விலைவாசியைக்கூட சமாளித்துவிடலாம். ஆனால், அதைவிட ஒரு கொடுமை நம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அதுதான், இந்தி என்ற அரக்கி. அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும்’ என்றார்.

அதைக் குறிப்பிட்டுப் பேசிய அண்ணா, ‘பேராசிரியர் சரியான நேரத்தில் நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எங்கள் கட்சி ஜனநாயகத் தன்மை கொண்டது. எனவே, கட்சிப் பொதுக்குழுவில் இது பற்றி விவாதித்து முடிவெடுப்போம்’ என்றார். அதைத் தொடர்ந்து, சட்ட நகலை எரித்து ஒரு பிரிவினர் போராடுவது, மற்றொரு பிரிவினர் இந்தி எதிர்ப்புக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது என்று தி.மு.க முடிவெடுத்தது.  

அறிஞர் அண்ணா

பேராசிரியர் கைது

1965-ம் ஆண்டு, இந்தி வருவதற்கு முன்பே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் முடிவுசெய்தனர். மதுரையில் பிப்ரவரி முதல் நாளே மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.இலக்குவனார் கைது செய்யப்பட்டார். போராட்டத்தை மீண்டும் தொடங்க முயற்சி செய்வதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், கல்லூரி பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

கல்வித்துறை இயக்குநரிடமிருந்து வந்த கடிதத்தில், கி.இலக்குவனாரின் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் பக்தவத்சலம்தான் தன்னை பணியிலிருந்து நீக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கி.இலக்குவன் பின்னாளில் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் கல்லூரியிலிருந்து நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. போராட்டம் தீவிரமடைந்தது. அண்ணாவின் வேண்டுகோள்படி தி.மு.க-வினர் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதனால், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டு கோபமடைந்த பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.

தேசிய பாதுகாப்புச் சட்டம்!

தஞ்சையில் மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கரந்தை தமிழ்க் கல்லூரி, மாயவரம் கல்லூரி என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்த கா.காளிமுத்துவும், பின்னாளில் திரைப்பட  பாடலாசிரியராக இருந்த நா.காமராசனும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது மாணவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக நாம் தீக்குளிப்போமா’ என்று தங்களுக்குள் ஆலோசித்தனர்.

அதை அறிந்த சக மாணவர்கள், அவர்களிடம் பேசி மனதை மாற்றியிருக்கிறார்கள். பின்னர், மதுரையில் கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயப்பிரகாசம் உள்ளிட்டோர் கட்டாய இந்திக்கான சட்ட நகலை எரித்ததால் கைது செய்யப்பட்டனர். மதுரை வடக்கு மாசி வீதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அவர்கள் மீது காங்கிரஸார் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். போராட்டம் மேலும் தீவிரமடைந்ததால், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

அதற்கு முன்பு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள்தான் கைது செய்யப்பட்டனர். ஆனால், மொழிப் போராட்டத்தின்போது, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற கொடுமையான சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ராணுவம் வந்தது!

கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது. பேருந்துகளை தீவைத்துக் கொளுத்துவது, தண்டவாளங்களைப் பெயர்த்தெடுப்பது என்று போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. ஆகவே, ராணுவம் வரவழைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அது தொடர்பாக செய்திகள் காங்கிரஸ் அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

1966-ம் ஆண்டு மே மாதம், ம.நடராசன் முன்முயற்சியில் தஞ்சாவூரில் அகில இந்திய அளவிலான ஒரு மாணவர் மாநாடு நடைபெற்றது. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், ஜி.டி.நாயுடு, காயிதே மில்லத், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்திக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, போராட்ட மையமாக சென்னை பச்சையப்பன் கல்லூரி விளங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பச்சையப்பன் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து, போலீஸார் தடியடி நடத்தினர். அதனால், தமிழகத்தில் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. முழு கடையடைப்பு, ரயில் நிலையங்கள் முற்றுகை என்று எரிமலையாக மாறியது தமிழ்நாடு.

தென் தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர் எல்.கணேசன். மொழிப்போராட்டத்தில் ஆங்காங்கே தலைமை வகித்த தளபதிகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்தவர் வை.கோபால்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்தை தமிழர்கள் நடைமுறைப்படுத்தினர். 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்த் தியாகம் செய்தனர். 1964, 1965 காலக்கட்டத்தில் வேறு வடிவத்தில் உயிர்த்தியாக சம்பவங்கள் நிகழ்ந்தன.

1964-ம் ஆண்டு ஜனவரி மாதம். சென்னை மாகாண முதல்வர் பக்தவத்சலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வருகிறார். அவருடைய காலில் விழுந்த ஓர் இளைஞர், ‘இந்தியை நுழையவிடாதீர்கள். தமிழைக் காப்பாற்றங்கள். நீங்களும் தமிழர்தானே..’ என்று கெஞ்சுகிறார். அப்போது பக்தவத்சலம் தன் பாதுகாவலர்களிடம், ‘இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்’ என்று எரிச்சலுடன் உத்தரவிடுகிறார்.

அந்த இளைஞரின் பின்னணியை காவல்துறை விசாரித்தது. அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அவர், அரியலூர் அருகே கீழப்பளுவூரைச் சேர்ந்தவர். அவருக்கு 27 வயது. விவசாயியான அந்த இளைஞர்களுக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்’ என்பதை காவல்துறை அறிந்துகொள்கிறது.

சின்னச்சாமி, ஒரு வாரம் கழித்து திருச்சி ரயில் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர் தீயில் கருகினார்.  அவர் தன் உயிரை தமிழுக்காக மாய்த்துக்கொண்ட ஜனவரி 25-ம் தேதிதான், ‘மொழிப்போர் தியாகிகள் தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது.

‘சின்னச்சாமியைப் போல பத்து தமிழனாவது உயிர்நீத்தால்தான், நம் தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கமும் ஒழியும்’ என்று தன் நண்பர்களிடம் உணர்ச்சிவயப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம். இந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சிவலிங்கம், தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

கோடம்பாக்கத்தில் சிவலிங்கத்தின் உடலைப் பார்த்து பதறிப்போனார் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அரங்கநாதன். பின்னர், அவரும் தீக்குளித்து உயிரிழந்தார். திருமணமான அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். ‘தமிழுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்’ என்று அண்ணாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முத்து, பட்டறை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு 23 வயது. திடீரென அவர் தீக்குளித்து உயிழந்தார். உடல் தீயில் கருகி, அனத்தியபடி இருந்த அவர் ஒரு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘தமிழ் மாணவர்கள் தாக்கப்படக்கூடாது. தமிழினம் வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டார். புதுக்கோட்டை அருகே கீரனூரைச் சேர்ந்த முத்து, ‘இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’ என்று முதல்வர் பக்தவத்சலத்துக்கு கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி உயிரிழந்தார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த  தலைமை ஆசிரியரான வீரப்பன், தன்னுடைய பள்ளி மாணவர்களை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். ‘தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார் வீரப்பன்.

திருச்சியை அடுத்த விராலிமலையைச் சேர்ந்த சண்முகம் மளிகைக்கடையில் வேலை செய்தார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை நடத்திவந்தார். அவர், அண்ணாவுக்கு ஐந்து கடிதங்கள் எழுதினார். அதில், ‘இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுக்கிறோம். தமிழைக் காக்க கடைசிவரை போராடுங்கள்’ என்று எழுதினார். அவர், பூச்சிமருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது உடல், சின்னச்சாமியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

பழைய தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஏ.வி.சி கல்லூரி மாணவர் சாரங்கபாணி பி.காம் முதலாமாண்டு படித்துவந்தார். இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், தீக்குளித்து இறந்தார். 

1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியைவிட, இந்த பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சி மிகத் தீவிரமாக இருந்தது என்று ஆங்கில ஏடுகள் எழுதின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் சுமார் 60 நாட்கள் நடைபெற்றன. ‘அதில், அரசின் கணக்குப்படி 65 பேர், பத்திரிகைகளின் கணக்குப்படி 150 பேர் இறந்தனர். ஆனால், எங்கள் கணக்குப்படி 500 பேர் உயிரிழந்தனர்’ என்கிறார் மொழிப்போரில் பங்கெடுத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.

தாய்மொழியாம் தமிழுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த அந்த மகத்தான தியாகிகளின் குடும்பங்களைத் தேடிச்சென்று நான் சந்தித்தேன். அவர்களின் பரிதாபகரமான நிலையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை உலுக்கியெடுத்தன. அடுத்த பகுதியில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.!

- அடுத்த பகுதியுடன் முற்றுப்பெறும்!

"நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்" - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் ... மேலும் பார்க்க

"ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.... மேலும் பார்க்க

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPSஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்... மேலும் பார்க்க

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

கட்டுரையாளர்: கப்பிகுளம் ஜெ.பிரபாகர்அரசியல் ஆடுபுலி 1 - 1977 தேர்தல்2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்த... மேலும் பார்க்க

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

உறுமும் சிறுத்தைக் கட்சியினர்!தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்...வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.... மேலும் பார்க்க