திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்...
உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained
இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது.
ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது.
இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை.
அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா?
சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும்.
கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது.

இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் .
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை.
நெருக்கடி தந்த ட்ரம்ப்
இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார்.
எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப்.
தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார்.

பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது.
அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது.
இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.
அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா.
பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார்.
இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது.
பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன.
இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல.

காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா.
இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது.
இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான்.
ரூட்டை மாற்றிய சீனா
இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான்.
ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது.
இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது.
ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது.
இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது.
ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது.
அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது.
ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர்.
இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.
இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை.
விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன.
முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி.
இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது.
மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும்.
அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும்.

மூன்றாவது, சீன நாணயமான யுவானின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இது சீனாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
சீனப் பொருள்களை வாங்கும் பிற நாடுகள், குறைந்த மதிப்பைக் கொண்ட யுவானால், குறைவான விலைக்கு வாங்குகிறார்கள்.
இது பிற நாட்டுப் பொருள்களை வாங்குவதை விட, சீனப் பொருள்களுக்கு மிக குறைந்த விலையே.
இதனாலேயே, சீன அரசு மிக கவனமாக யுவானின் விலையை வீழ்ச்சியில் வைத்திருக்கிறது.
பிற நாடுகளுக்கு சிக்கல்
இதெல்லாம் சரி தான்… சீனாவின் இந்த வர்த்தக அபரிமிதத்தால் பிற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆம்… சீனா இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும். சீனாவின் பொருள்களின் தரம் பெரும் கேள்விக்குரியது.
ஏற்றுமதி அதிகரிப்பதால், உலக மக்களின் கைகளில் கிடைக்கும் பொருள்களின் தரம் கேள்விக்குறி ஆகும்.
இப்போது உலகமே தொழில்நுட்பத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சீனா பெரும்பாலும் எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த பொருள்களையே ஏற்றுமதி செய்து வருகிறது.
தரம் குறையும்போது, விலையும் குறையும். இதனால், பிற நாடுகளில் வேலை இழப்பு, உற்பத்தி குறைவு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம்.

பொருளாதார பிரச்னை?!
ப்ளூம்பெர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, சீனாவிற்கு வர்த்தகத்தில் அபரிமிதமாக கிடைத்த பணம் சீனாவின் மத்திய வங்கிக்கு போகவில்லையாம்.
அவை அனைத்தும் சீன முதலீட்டாளர்கள், சீன பணக்காரர்களின் கைகளுக்கு செல்கிறது.
இந்தப் பணத்தை அவர்கள் சும்மா வைத்திருக்கமாட்டார்கள் அல்லவா. அவர்கள் அதை உலக சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பிற நாடுகளின் பத்திரத்தை வாங்குகிறார்கள்.
ஒருவேளை, அவர்கள் ஒரேடியாக அந்த முதலீடுகளை விற்றால், உலகப் பொருளாதாரத்தின் நிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறும்.
உற்பத்தியிலும் சீனாவை நம்பி… பொருளாதாரத்திலும் சீனாவை நம்புவதாக இருந்தால் அது பெரும் பிரச்னை.
சீனாவின் வர்த்தக நிலைமையைப் பார்த்தோம். இப்போது இந்தியாவின் வர்த்தக நிலை குறித்து பார்ப்போமா?
இந்திய அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு 96.58 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது.
2024-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 88.43 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இருந்துள்ளது.
சீன பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாதது தான். ஆனால், இந்திய அரசு இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சீக்கிரம் எடுக்க வேண்டும்.
சீனா ஒவ்வொரு கட்டம் முன்னேறும்போது, இந்தியாவிற்கு ஏதோ ஒரு விதத்தில் சிக்கல். அதை இந்திய அரசு சீக்கிரம் கவனத்தில் கொள்ள வேண்டும். !
















