செய்திகள் :

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

post image

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த மூன்று மாதப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன.

கடந்த ஒரு மாதமாக நடந்த திரை மறைவுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஆரம்ப கட்ட ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த இரு தரப்புகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பு வெளியானது.

முதலில் வந்த செய்திகள் இந்த வரைவுப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( Draft MOU) பற்றி இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதில் இரு நாட்டுத் தலைவர்களும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நாளை வெள்ளிக்கிழமை ( ஜூன் 19) சந்தித்து கையெழுத்திடுவார்கள் என்றும் கூறின.

ஜி-7 நாடுகளின் மாநாடு

ஆனால் பிரான்சில் ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு நாள் முன்னதாகவே , இரான் அதிபரை சந்திக்காமலே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாக தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன. இது போல, இந்த ஒப்பந்தத்தில் இரான் அதிபர் மசூத் பெஸஷ்கியனும் இரானிலிருந்தபடியே புதன்கிழமையே கையெழுத்திட்டுவிட்டதாகத் தெரிகிறது.

தன்னுடைய சமூக ஊடகமான Truth Socialல் கடந்த ஞாயிறன்று இதைப் பற்றி அறிவித்த டிரம்ப், அமெரிக்காவும் இரானும் போரை நிறுத்த சம்மதித்துள்ளன என்று கூறி, இனி ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுங்க வரி செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படும், “ இனி எண்ணெய் வர்த்தகம் பெருகட்டும்” என்றார்.

டிரம்ப்பின் இந்தப் பதிவு, அவர் தனது 80வது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்த அதே நாளில் வந்தது.

வரைவு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி இரு நாடுகளும் கூட்டாக இதுவரை எதையும் சொல்லாவிட்டாலும், பிரான்சில் ஜி 7 நாடுகள் மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்த வரைவு ஒப்பந்த விவரங்களை வெளியிட்டதாக பிபிசி உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

மொத்தம் 14 பத்திகளைக் கொண்டதாகக் கருதப்படும் இந்த வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இவைதான்.

லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் அமெரிக்க-இரான் போர் நிறுத்தப்படும் — உடனடியாக மட்டுமல்ல, நிரந்தரமாக.

இறுதி ஒப்பந்தம் ஒன்றை பேசி நிறைவு செய்ய அமெரிக்காவும், இரானும் அதிக பட்சம் 60 நாட்களில் முயற்சி செய்யும். இந்த காலக்கெடு இரு தரப்புகளின் உடன்பாட்டுடன் மேலும் விஸ்தரிக்கப்படலாம்.

இரானைச் சுற்றி அமெரிக்கா செய்த கடற்படை முற்றுகை அடுத்த 30 நாட்களுக்குள் அகற்றப்படும். இந்த காலகட்டத்தில், அப்பகுதி வழியாக எண்ணெய், எரிவாயு மற்றும் பிற கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர இரான் அனுமதிக்கும். இரானுக்கு அருகே நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இறுதி ஒப்பந்தம் ஏற்பட்ட 30 நாட்களுக்குள் அகற்றப்படும்.

இந்த 60 நாள் கால கட்டத்தின் போது, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் எந்த வித சுங்கவரிகளுமின்றி சென்று வர இரான் அனுமதிக்கும். இந்த நீரிணையின் மேலாண்மை பற்றி, ஒமானுடன் மட்டுமல்லாது பிற வளைகுடா நாடுகளுடனும் இரான் ஒரு பரந்து பட்ட, நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும்.

போரினால் பெரும் அழிவை சந்தித்த இரானின் மீள் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்தது 300 பிலியன் டாலர் ஒரு நிதி உதவியை அமெரிக்கா, அதன் பிராந்தியக் கூட்டாளி நாடுகளுடன் ஏற்படுத்திச் செய்ய உறுதியளிக்கிறது.

இரான் மீது விதிக்கப்பட்ட அனைத்து விதமான தடைகளையும் ( பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல) விலக்கிக்கொள்ள அமெரிக்கா உறுதியளிக்கிறது. இதற்கான கால அட்டவணை பற்றி உடன்பாடு இனி காணப்படும்.

இரான் அணு ஆயுதங்களை ஒரு போதும் பெறாது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற அணு ஆயுதங்களைத் தயாரிக்க உதவும் பொருட்களை சர்வதேச அணுசக்தி முகமை ( International Atomic Energy Agency) மேற்பார்வையில் அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்கா முடக்கி வைத்திருந்த இரானின் பணம் மற்றும் அசையாச் சொத்துக்களை இரானுக்கு திரும்பத் தர உறுதியளிக்கிறது.

இந்த வரைவு ஒப்பந்தத்தை இரு தரப்புகள் தங்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கொண்டாடுகின்றன. இரான் அணு ஆயுதங்களை ஒரு போதும் பதயாரிக்காது என்று ஒப்புக்கொண்டதையும், ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரான் ஒப்புக்கொண்டதையும் டிரம்ப் தனது வெற்றியாகக் காட்டிக்கொள்கிறார்.

இரான் தரப்பு, தனது பங்கிற்கு, உலகின் மிகப்பெரிய வல்லரசைத் தான் தன்னந்தனியாக எதிர்த்து நின்று மூன்று மாதங்கள் போராடி, தலை வணங்காமல் நின்றதைத் தனக்கு வெற்றியாகக் கூறிக்கொள்கிறது.

ஹோர்மூஸ் நீரிணை

ஹோர்மூஸ் நீரிணையை திறந்ததை டிரம்ப் ஒரு வெற்றியாகச் சொல்லிக்கொள்வது சர்வதேச அளவில் பெரும் கேலிக்குரியதாகவே பார்க்கப்படும். ஏனென்றால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு வரை இந்த நீரிணை சர்வதேசக் கப்பல்கள் போக்குவரத்துக்கு திறந்துதான் இருந்தது. அந்த நிலையை மாற்றியது அமெரிக்காவின் தாக்குதல் தான்.

டிரம்ப்பின் தாக்குதலுக்குப் பின்னர், இரான் தன்னிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ஹோர்மூஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற நிலைப்பாட்டை உணர்ந்து , கப்பல்கள் மீது வரி விதிக்க ஆரம்பித்தது என்பதைப் பார்க்கும்போது டிரம்ப்பின் இந்த நிலைப்பாடு, உள் நாட்டில் தனது ஆதரவாளர்களிடையே தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ளும் ஒரு யுக்தியாகவே பார்க்கப்படும்.

அது போல போருக்கு மற்ற பல முக்கிய காரணங்களை டிரம்ப் முன்வைத்திருந்தார். இரான் அணு ஆயுத வல்லமை பெற்றுவிடும் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக, அமெரிக்காவாலும், அதன் பிராந்தியக் கூட்டாளியான இஸ்ரேலாலும் பார்க்கப்பட்டது. ஆனால் இரான் தனது அணு சக்தித்திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது என்றாலும், அணுசக்தி முயற்சி என்பது சிவில் திட்டம்தான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்பதை பல முறை இரான் சொல்லிவந்திருக்கிறது. போரின் முதல் நாள் தாக்குதலில் கொல்லப்பட்ட அயோதுல்லா கமேனி இது பற்றி ஒரு மத ஆணை ( fatwa) மூலம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

மேலும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து ஒபாமா காலத்தில் இரான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திலும், இரான் தனது அணுசக்தித்திட்டத்தினை சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வைக்குள் கொண்டுவர ஒப்புக்கொண்டது.

ஒபாமா நிர்வாகத்தின் முயற்சியால் 2015ல் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்துதான் டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் , 2018ல், தன்னிச்சையாக அமெரிக்காவை விலக்கிக்கொண்டு , இரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கத் தொடங்க, இரானும் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தற்போதைய இந்த ஒப்பந்தம், தனது நிர்வாகம் 2015ல் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை விட குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமானதாகவோ அல்லது மேம்பட்டதாகவோ இருக்கும் என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக, அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

போர் தொடங்கிய போது, இரானின் ஏவுகணைத் திட்டத்தை அழிப்பது, இரானில் ஆட்சி மாற்றம் என்றெல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்புகளால்பேசப்பட்டது. இந்த வரைவு ஒப்பந்தம் அந்த வகையில் பார்த்தால் அமெரிக்காவுக்கு ஒரு ராஜீய ரீதியான சறுக்கல் என்றே சொல்லலாம்.

அரசியல் லாப நட்டக் கணக்குகள் எப்படி இருந்தாலும், ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டால், அது பிராந்திய அமைதிக்கு ஓரளவு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதிலும் பல கேள்விகள் இருக்கின்றன.

இந்தப் போரே, இரானின் அணு ஆயுத வல்லமை பற்றியும், ஹமாஸ், ஹெஸ்பொல்லா, ஹூத்திகள் போன்ற இஸ்ரேலுக்கு எதிரான பிராந்திய இணை ராணுவ சக்திகளுக்கு இரான் அளித்து வந்த ஆதரவு பற்றியும், இஸ்ரேலுக்கு, குறிப்பாக பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, இருந்த அச்சங்கள் மற்றும் கவலைகள் காரணமாக , இஸ்ரேலால் தூண்டப்பட்டு அமெரிக்கா நடத்திய போர் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இவைகளில் அணு ஆயுத விஷயம் தவிர, மற்ற எதுவும் இந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ,இந்த ஒப்பந்தமே , அமெரிக்காவுடன் இணைந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேலை ஒரு தரப்பாக சேர்க்காமல் கையெழுத்தாக இருக்கிறது என்பதும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. இஸ்ரேல் இதை எப்படிப் பார்க்கப்போகிறது, அதன் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே இந்த வரைவு ஒப்பந்தத்தினால் மட்டும் பிராந்திய அமைதி ஏற்பட்டுவிடுமா என்ற கேள்விக்கு விடை அமையும்.

இந்த வரைவு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வரும் நாளன்று லெபனானின் ஹெஸ்பொல்லா படையினர் இருக்கும் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல்களை நடத்தியது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடும் கோபம் கொள்ளச் செய்தது.

பெஞ்சமின் நெதன்யாகு “சில சமயங்களில் சற்று உணர்ச்சிவசப்படக்கூடியவர்” என்று வர்ணித்த டிரம்ப், இஸ்ரேல் இந்த விஷயத்தில் இன்னும் சற்று நல்ல முறையில் நடந்துகொள்ளலாம் என்று ஜி 7 மாநாட்டின் பின்னர் குறிப்பிட்டார்.

ஆனால் நெதன்யாகுவின் இந்த கடும்போக்கு நிலைப்பாடு அவருக்குள்ள உள் நாட்டு அரசியல் பிரச்சனைகளால் உருவாகிறது என்று இஸ்ரேலிய பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள். இரானுடனான எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவர் கூட்டணி அரசில் பங்கேற்கும் சிறிய வலதுசாரித் தீவிரவாதக் கட்சிகள் விரும்புவதில்லை.

எனவே, இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக வெளிப்படையாக நெதன்யாகுவால் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் சிறிய கூட்டணிக் கட்சிகள் அரசிலிருந்து விலகி அரசு கவிழக்கூடிய நிலை ஏற்படும். அப்படி கவிழ்ந்தால், ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நீதிமன்ற விசாரணைகளை சந்தித்துவரும் நெதன்யாகு மேலும் பல சிக்கல்களுக்கு தயாராக வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் கடந்தாலும் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கின்றன.

இஸ்ரேலில் சமீப ஆண்டுகளில் நடந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம், தொடர்ச்சியாக நெதன்யாகுவின் செல்வாக்கு சரிந்து வந்ததையே காட்டின. ஆனால் 2023 அக்டோபரில் இஸ்ரேலில் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பின் , நெதன்யாகு ஹமாஸுக்குப் பதிலடி என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளாக நடத்திய காசா போர் மூலம், ஒரு இஸ்ரேலிய பாதுகாப்பு விஷயத்தில் தான் ஒரு பலமான ஆட்சியாளராகக் காட்டிக்கொண்டு வந்தார்.

அடுத்து இரான் விஷயத்திலும் நெதன்யாகு காட்டும் கடும்போக்கும் உண்மையில் ஒரு உள் நாட்டு அரசியல் கணக்கின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்கிறார்கள் மத்தியக்கிழக்கு அரசியல் பகுப்பாய்வாளர்கள். வரும் தேர்தலில் அவர் வெல்வாரா என்பது தன்னை ஒரு போர்க்காலத் தலைவராக சித்தரித்துக் கொள்வதிலேயே இருக்கிறது என்பது அந்த ஆய்வாளர்களின் கருத்து.

ஆனால் இரான் அமெரிக்க ஒப்பந்தம் என்பது நெதன்யாகுவின் அரசியல் நிர்ப்பந்தங்களினால் சிக்கலுக்குள்ளாவதை டிரம்பே விரும்பமாட்டார் என்று தோன்றுகிறது. ஏனெனில், டிரம்ப் ஒரு வியாபாரி. உலகப் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்திய ஹோர்மூஸ் நீரிணை மூடல் போன்ற மற்றொரு நெருக்கடியை அவர் சந்திக்கத் தயாராக இருக்கமாட்டார். தனது நீண்டகாலக் கூட்டாளியான இஸ்ரேலை சற்று அடக்கி வாசிக்கச் சொல்வார் என்பதே தற்போதைய கணிப்பாக இருக்கிறது. !

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க

தவெக எதிர்ப்பு: ``இதைக் கடந்த ஆட்சியில் செய்திருக்கணும்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது விவாதமானது. அதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' - தி.மு.க வேட்பாளர் வழக்கு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளி... மேலும் பார்க்க

Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அன்சாரி

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத்த... மேலும் பார்க்க

``முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" - பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற... மேலும் பார்க்க