Vaa Vaathiyaar Movie Review| Karthi, Krithi Shetty | Nalan Kumarasamy | Santhosh...
ஆசிரியர் தற்கொலை: ``திமுக செய்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்" - அரசியல் தலைவர்கள் கண்டனம்
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில், தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் இருந்து வந்தவர்களை கைது செய்து வானகரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கண்ணன், இன்று (14.1.2026) உயிரிழந்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்தில் விவாதமாகியிருக்கிறது.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி, ``பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என, கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, திரு. கண்ணன் என்ற ஆசிரியர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை கடினமான சூழலில் வாழ்க்கை இருந்திருந்தால், தற்கொலை என்ற மிக மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்கு, ஆசிரியர் திரு. கண்ணன் தள்ளப்பட்டிருப்பார் என்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, எந்தக் கவலையும் இல்லை. பணி நிரந்தரம் கோரிப் போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற பெயரில், வெறும் ₹2,500 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருக்கிறது திமுக அரசு.
பகுதி நேர ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மட்டுமே. ஆனால், அதைக் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டு காலம் காத்திருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு, திமுக செய்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும், வாழ்க்கையும் எப்படிப் புரியும்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமுமுக தலைவர் டிடிவி தினகரன், ``பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு - தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்."















