'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!
மாசிலா என்ற கற்பனை நகரத்தில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் ராஜ் கிரண். எம். ஜி.ஆர் மறைந்த அதே நேரத்தில் அவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறான். பேரனுக்கு ராமேஸ்வரன் எனப் பெயர் வைத்து, நேர்மையான போலீஸ் ஆக வளர்க்க நினைக்கிறார்.
ஆனால், தாத்தாவை ஏமாற்றி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் எனக் கெட்ட போலீஸாக 'நம்பியார்' மோடில் இருக்கிறார் ராமேஸ்வரன்.

இந்நிலையில், 'மஞ்சள் முகம்' என்ற பெயரில் இயங்கும் இணைய மர்ம கும்பல், பரபரப்பான அரசியல் வீடியோ ஒன்றை வெளியிட, அக்கும்பலைப் பிடிக்கும் பணியில் களமிறங்குகிறார் ராமேஸ்வரன்.
மறுபுறம், ராமேஸ்வரனின் உண்மை முகம் ராஜ் கிரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் பிரச்னைகள் வர, ஒரு பக்கம் 'வாத்தியாரும்' சாட்டையை எடுக்க, இவற்றை எல்லாம் ராமேஸ்வரன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் கதை.
வழக்கமான தன் சுட்டித்தனம், தெனாவட்டு உடல்மொழி எனக் கலகல முகத்தில் கவர்வதோடு, எம்.ஜி.ஆரின் உடல்மொழி, முக பாவனை, நடனம், சண்டை போன்றவற்றிலும் கூடுதல் மெனக்கெடலைப் போட்டு, அக்கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் கார்த்தி.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரது தோற்றத்திலேயே வந்து கலகலப்பையும், எமோஷனையும் கடத்துகிறார் ராஜ் கிரண். ஜி.எம்.குமார், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்ய, நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், கருணாகரன் ஆகியோர் தாக்கம் தராமல் கடந்து போகிறார்கள். அரசியல்வாதியாக ஜெய் கிருஷ்ணா அந்த போன்கால் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
கற்பனை நகரத்தின் திகட்டாத வண்ணம், நேர்த்தியான சண்டைக்காட்சிகள், புதுமையான ஃப்ரேம்கள் எனப் படத்திற்குத் தேவையான ரகளையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.

கச்சிதமான கட்களால் காட்சிகளைச் செறிவாக்கியிருக்கும் படத்தொகுப்பாளர் வெற்றி கிருஷ்ணன், காதல் காட்சிகளிலும், காதல் பாடல்களிலும் சாட்டையைச் சுழற்றத் தவறுகிறார். வாத்தியாரும் ராமுவும் பேசும் கட்களில் மட்டும் நேர்த்தி!
சந்தோஷ் நாராயணன் இசையில், 'கிரேட்டஸ்ட் ஆஃப் தி கிரேட்டஸ்ட்', 'யார் மனிதன்' பாடல்கள் கதையைப் பேசுகின்றன. சண்டைக் காட்சிகள் உட்பட முக்கியமான காட்சிகளில் தன் ரகளையான பின்னணி இசையால் அட்டகாசம் செய்திருக்கிறார் சந்தோஷ்! எம்.ஜி.ஆர் படப்பாணி இசையும் கதைக்குப் பக்கபலம்.
நடன இயக்குநர்கள் சாண்டி மற்றும் எம்.ஷெரிஃப் தனது கோரியோவிலும் ஃபேண்டஸியைச் சேர்த்திருக்கிறார்கள். கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்நுட்பக் குழுக்களின் உழைப்பை எல்லா ஃப்ரேம்களிலும் உணர முடிகிறது.

எம்.ஜி.ஆர் மரணத்திலிருந்து தொடங்கும் திரைக்கதை, ராஜ் கிரண் பேரனின் பிறப்பு, அவரின் ஆசை, ராமேஸ்வரனின் குணம் என நிதானமாக காட்சிகளை விவரித்தபடியே நேர்க்கோட்டில் செல்கிறது.
மெதுவாக துணை கதாபாத்திரங்கள், மையக்கதைக்கான முன்னுரை எனக் கதையை நோக்கி நகர்ந்தாலும், கார்த்தியின் கதாபாத்திரத்தையும், கற்பனை உலகத்தையும் விவரிப்பதிலேயே முதல் பாதியின் பாதி செலவாகிறது.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு இடைவேளையில் கதையை எட்டிப் பிடிக்கிறது திரைக்கதை. நிதானமாக இடைவேளை ட்விஸ்ட்டை விவரிக்கும் விதமும் அதற்கான திரையாக்கமும் நச்!
இரண்டாம் பாதியில், ஆக்ஷன், சமூகக் கருத்து எனக் கமெர்சியல் மீட்டரை ஏறி மிதிக்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதிக்கான ஐடியாவைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது திரைக்கதை.
மாறி, மாறி பேசும் கார்த்தி, தண்ணீர்த் தொட்டி ஐடியா போன்றவை ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆரை, கார்த்தி கதாபாத்திரத்தோடு இணைத்த விதம் அட! ஆனால், சிறிது நேரத்திலேயே வழக்கமான ஹீரோயிஸ பாதையில் குதிரை ஓட்டத் தொடங்குகிறது திரைக்கதை.
லாஜிக் மீறல்கள், பயமுறுத்தாத வில்லன், முழுமையில்லாத கதாநாயகி கதாபாத்திரம், சோதனை மேல் சோதனையாக இழுக்கும் காதல் அத்தியாயம் எனச் சுவாரஸ்யத்தைச் சிதறவிட்டபடியே செல்கிறது படம்.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றிய படமா இல்லை எம்.ஜி.ஆர் காலப் படமா என எண்ண வைக்கிறது திரைக்கதை! பரபரவென முடியும் இறுதிக்காட்சியிலும் எமோஷனோ, சுவாரஸ்யமோ கூடி வரவில்லை.
கதையின் ஐடியாவும், கார்த்தியின் நடிப்பும் சுவாரஸ்ய சாட்டையைச் சுழற்றினாலும், திரைக்கதையில் இன்னும் கச்சிதத்தையும் புதுமையையும் சேர்த்திருந்தால், ரத்தத்தின் ரத்தமாக இன்னும் உற்சாகத்தோடு 'வா வாத்தியாரை' வரவேற்றிருக்கலாம்.



















