'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
'சாரிடான் மாத்திரைதான் மிச்சம்' - பராசக்தி படத்தைக் கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி கார்த்தி் சிதம்பரம் விமானம் கோவை நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது நம்முடைய அரசியல் சாசனத்திற்கும், நம் ஆட்சி முறைக்கும் எதிரானது.

அடிக்கடி தேர்தல் நடைபெறும் போது, மக்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள். இல்லையென்றால் மெத்தனப்போக்கோடு இருப்பார்கள்” என்றார்.
அப்போது “பராசக்தி படம் பார்த்தீர்களா” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கார்த்தி சிதம்பரம், “சாரிடான் மாத்திரை தான் மிச்சம். நான் பராசக்தி, ஜனநாயகன் ஆகிய 2 படங்களையும் பார்க்க போவதில்லை. திரைப்படத்தின் மூலம் தமிழ்நாடு அரசியலை நிர்ணயம் செய்ய நினைத்தால் தவறு. பராசக்தி படம் வரலாற்று படமா.
சரித்திரத்தைப் படித்தவர்களும், ஆராய்ச்சி செய்தவர்களும் தான் இந்த படத்தை எடுத்துள்ளார்களா. பராசக்தி படக் குழுவினர் டெல்லி பொங்கல் விழாவில் கலந்து கொள்ளட்டும் அல்லது ஆஸ்கர் விருதுக்கு கூட பரிந்துரைக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்று தேர்தலில் நிற்கிறார்கள். அதற்காக தானே தேர்தலில் நிற்கிறார்கள். நியாயமான பிரச்னை எதுவாக இருந்தாலும் ராகுல் காந்தி ஆதரவளிப்பார். விஜய்க்கு ஓட்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.
அது சீட்டாக மாறுமா என்று சொல்லத் தெரியாது. தமிழக வெற்றிக் கழகத்தினர் ரசிகர் மன்றமாக இருப்பதால், ரசிகர்களாகத்தான் வருகிறார்கள். கொள்கை பிரகடனத்தை கேட்பதற்காக கூட்டம் வரவில்லை. அரசியல் கட்சிகளின் மேடை பேச்சுகளை கேட்பதற்கு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை” என்றார்.

















