கடலூர்: GRT ஜுவெல்லர்ஸின் புதிய பிரம்மாண்ட ஷோரூம்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச...
ஆசை 1x ; மகிழ்ச்சி 10x ! - 90'ஸ் கிட் தொலைக்காட்சி அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
80ஸ்-90ஸ் கிட்ஸ் மட்டுமே அனுபவித்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் - 'தூர்தர்ஷன்' தொலைக்காட்சி!
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... எங்கள் தெருவில், மூன்றாவதாக தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய பெருமை எங்களுடையது!
அழகிய வீடு. பெரிய டி.வி. அறை. அடுப்படியிலிருந்தும் சமைத்துக் கொண்டே டி.வி. பார்க்கலாம்! அதற்கடுத்தாற்போல் மிகப் பெரிய நடுவாசல் (முற்றம்).
டி.வி. அறைக்கு நேர் மேலே மொட்டை மாடியில் ஆண்டெனா பொருத்தி இருந்தோம். உங்களுக்குத் தான் தெரியுமே! ஆண்டெனா கம்பி சற்று திசை மாறி இருந்தாலும் போச்சு! டி.வி. திரை இங்கே தடுமாற ஆரம்பித்துவிடும்!
சரி. எப்படி ஆண்டெனா அது பொருத்துப்பட்ட திசையிலிருந்து திரும்பும்?! என்கிறீர்களா? அது லேசான அலுமினியம் கம்பிதான் என்பதால், பெரும்பாலும் காற்றின் வேலை. மற்ற நேரங்களில் குரங்கின் லீலை! இல்லை, இல்லை... நான் என் அண்ணனைச் சொல்லவில்லை! உண்மையான விலங்கு வகையராவைச் சொன்னேன்.

நாங்கள் டி.வி. வாங்கிய பொற்காலத்தில் தான், தூர்தர்ஷனில் இராமாயணம் பட்டாபிஷேகக் கட்டத்தை எட்டியிருந்தது. "இதை விட ஒரு நல்ல சகுனம் இருக்க முடியுமா?!" என்று மெய்சிலிர்த்தாள் எங்கள் அம்மா.
இதுநாள் வரை இராமாயணத்தை வாய்வழியாக எங்களுக்கு கடத்தி வந்தவள். கொள்ளுப் பாட்டியில் துவங்கி, பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, மாமா அனைவரும் எங்கள் செவிகளுக்கு விருந்தாக்கிய இராமாயணக் காவியம் இப்போது எங்கள் விழிகளுக்கும் விருந்தாகக் காத்திருக்கிறது.
சரி. பட்டாபிஷேகம் அடுத்த வாரம் தான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?! என்கிறீர்களா? இதோ ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்!
கதையின் ஆரம்பத்தில் நான் கூறியது போல, எங்கள் தெருவில், நாங்கள் மூன்றாவதாகத் தான் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி இருந்தோம். அதற்கு முன்னால் வாங்கிய பெருமை, எழில் அண்ணா, ரம்யா அக்கா வீட்டிற்கு வரிசைப்படிச் செல்லும்.
இராமர் காட்டிற்குப் போகும் வரை எழில் அண்ணா வீட்டில்தான் இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தோம் நாங்கள் அனைவரும்(எங்கள் தெருவில் வசிக்கும் 16 குட்டீஸ் + 2 பாட்டீஸ்!).
பிறகு ரம்யா அக்கா வீட்டில் டி.வி. வாங்கியதும், அது புதிது என்பதால், உடனடியாக அங்கு தாவி விட்டோம்!
ஒவ்வொரு ஞாயிறு காலையும் 9:45 க்கே தயார் ஆகி விடுவோம்.
"நிலா, தலைய பின்னு. பொட்டு வை". "வேலா, நீயும் டிபன் சாப்டா தான் அனுப்புவேன்", என்று அம்மா பிறப்பித்த ஆணைகளை எல்லாம் சிரமேற்கொண்டு முடித்துவிட்டு, பான்ட்ஸ் பவுடரை அள்ளிப் பூசிக் கொண்டு கிளம்பி விடுவோம் நானும் அண்ணனும்!

அங்கு வாசலில் ரம்யா அக்காவின் அப்பா அவரின் நண்பர்களுடன் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவர் மற்றவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அந்த கேப்பில் உள்ளே நுழைந்து விடலாம் என்று நாங்கள் திட்டமிடுவோம். தோல்வி அடைவோம்!
அவர் எங்களை கையும் களவுமாகப் பிடித்துவிடுவார். ஏதாவது வம்பு இழுத்து விட்டோ அல்லது கிண்டல் செய்து விட்டோ தான் உள்ளே அனுப்புவார்.
திருதிருவென்று முழித்தும், உலறிக் கொட்டியும் நாங்கள் எதைச் செய்தாலும் அது அங்கு உள்ள அனைவரையும் மிகுந்த சிரிப்பில் ஆழ்த்தும். இந்த கேப்பில் குடுகுடு வென்று தப்பித்தோம் பிழைத்தோம் என உள்ளே ஓடி விடுவோம்.
உள்ளே சென்றால் எங்களுக்கு முன்பாகவே ஒரு கூட்டம் தயார் நிலையில் இருக்கும். நான் எப்போதும் ஒரு புறம் வேலா அண்ணன் மறுபுறம் உமா அக்கா என இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொள்வேன்.
அது ஒரு நீண்ட அறை. வெயில் சூடு தெரியாமல் இருக்கவும், ஒரு திரையரங்கு உணர்வை ஏற்படுத்தவும் போர்வையோ, மெல்லிய சீலையோ போட்டு ஜாலிகளை(சிமெண்ட் ஜன்னல்கள்) மறைத்திருப்பார்கள்.
டி.வி. யை ஆன் செய்து, லூஸ் கனெக்ஷனிலிருக்கும் ஸ்டெபிலைசரை அழுத்திப் பிடித்துப் போராடிக் கொண்டிருப்பார் ரம்யா அக்கா.
"அக்கா, இவ என்ன இடிச்சுட்டே இருக்கா", "அக்கா எனக்கு சுமனோட தல மறைக்குது. டி.வி. யே சுத்தமா தெரில", "அக்கா எனக்கு தண்ணி வேணும்" என நச்சரித்துக் கொண்டிருப்போம் நாங்கள்.
எல்லாம் 9:59 வரை தான். "போட்டான், போட்டான். எல்லாரும் வாய மூடிட்டு அமைதியா பாக்கணும். சத்தம் போட்டீங்க...எங்க அப்பா உள்ள வந்து டி.வி.ய ஆஃப் பண்ணிடுவாங்க. நம்ம அப்றம் ஒண்ணும் பாக்க முடியாது!", என்ற ரம்யா அக்கா விடுக்கும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்துளிகளுக்கு (விளம்பர இடைவெளி வரைதான்!) அறை அமைதி அடையும்!
இராமர்-சீதையைக் கண்டு உருகி, மருகி, ஹனுமனின் லீலைகளை ரசித்து, பத்துத் தலை இராவணனின் கர்ஜனைக்கு நடுநடுங்கி பார்த்துக் கொண்டிருப்போம்.
கூட்டத்தில் பாதி பேருக்குத் தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியும். புரியும்! ஏனெனில், இராமாயணம் ஹிந்தியில் அல்லவா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் தமிழில் டப்பிங்கும் கிடையாது. சப் -டைட்டிலும் கிடையாது. புரிவது பாதிதான். எனினும், தெரிந்த கதை தான் என்பதாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் இயல்பான நடிப்பினால் சொல்ல வந்ததை கடத்தி விடுவதாலும், எங்களுக்கு...ஏன் அந்த பாட்டீஸுக்கும் கூட புரிந்து விடும்.
அந்த அறையில் இருக்கும் குட்டீஸில் சிலர் ஹிந்தி டியூஷன் சென்று கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். பிரவேஷிக்காவில் இருவர், மத்தியமாவில் மூவர், ஏழு கடல் தாண்டிய பண்டிட்டாக ஓரிருவர்.
அந்த மத்தியமா படித்த மூவரில்...அடியேனும் ஒருத்தி! அந்த பெரிய வசனங்களுக்கு, நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களாகி விடுவோம். நாங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடும் அந்தக் கூட்டம்! தப்பா சொன்னா தெரியவா போகுது? என்ற தெனாவெட்டில், நாங்கள் எங்களை கம்பன் ரேஞ்சுக்கு நினைத்துக்கொள்வோம்!
இப்படியாக பல வாரங்களாக, மாதங்களாக ரம்யா அக்கா வீட்டில் பார்த்துக் கொண்டிருந்த போது, கிட்டத்தட்ட யுத்தம் முடிந்து இராமன் அயோத்தி திரும்பும் நேரம் வந்து விட்டது.
அப்படி ஒரு நாளில் தான் எங்கள் அப்பா, "நிலா, எழில் கிளம்புங்க. சுவாமி & சன்ஸ் கடைக்குப் போய்ட்டு வரலாம் என்றார்.
"எதுக்குப் பா? என்னம்மா வாங்கப்போறோம்?" என்று சட்டை மாற்றுவதற்குள் நச்சரித்துவிட்டோம்.
அம்மா மனமிறங்கி, "அந்த மொட்டத் தலையன் கொம்பு வச்சுகிட்டு விளம்பரம் வருமே பேப்பர்ல..." என்று முடிப்பதற்குள், புத்திசாலி அண்ணன் கத்திவிட்டான்! "ஹேஹஹ! ஒனிடா டி.வி. டீ!"
"டி.வி. வாங்கப் போறோமா?!" என்று வாயைப் பிளந்தவள் மூட இரண்டு நாட்கள் ஆயிற்று! "கலர் டி.வி.", என்று அப்பா சொன்னதும், "ஹய்யோ, தெருவுலயே நம்ம வீட்ல தான் ஃபஸ்டு 'கலர்' டி.வி.!" என்று அண்ணன் கத்தியது, கடைசி வீட்டுக் கார்த்தியின் காது வரை எட்டியது!
இந்த நற்செய்தி கேட்டதும், எங்கள் முகங்கள் எப்படி இருந்தன தெரியுமா? காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தந்தையும், கைகேயி அன்னையும் சொன்ன போது இருந்த இராமன் முகம் போல... ஆம், "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்ததம்மா!"
டி.வி. வந்து, ஆண்டெனா கனெக்ஷன் எல்லாம் கொடுத்தாகி விட்டது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால், இரவு 7 மணிக்கு 'ஒளியும், ஒலியும்' பார்த்துவிடலாம் என்ற கனவோடு பள்ளியிலிருந்து வீடு திரும்பினோம்.
ஆனால் எங்கள் பாட்டி ஒரு ட்விஸ்ட் வைத்தார்களே பாக்கணும்! "இராமயணத்துல இந்த வாரம் பட்டாபிஷேகமாம். முதமுதல்ல டி.வி. வாங்கி இருக்கோம். ஃபஸ்ட்டு பட்டாபிஷேகம் பாப்போமே" என்றார்!
அம்மாவும் வழக்கம்போல், "அட, ஆமா அத்த. அதுவும் இது புரட்டாசி மாசம் வேற..." என்று வழிமொழிந்தாள்!
நேற்று அன்றலர்ந்த தாமரையாய் இருந்த எங்கள் முகம், இன்று மூக்கறுந்த சூர்ப்பனகை போல் கோவம் பாதி, சோகம் மீதி என்றானது!
சரி. இன்னைக்கு ஒளியும், ஒலியும் ரம்யா அக்கா வீட்ல தான் என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டோம். அன்று இரவு ஒளியும் ஒலியும் பார்த்த பிறகு, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் நாங்கள் வாசித்த தலைப்புச் செய்தி இதுதான் - "எங்க வீட்ல புதுசா ஒனிடா டி.வி. வாங்கி இருக்கோமே!"
புது டி.வி. வாங்கினால் என்னவாகும்? ஆம். அதே தான்! மொத்தக் கூட்டமும் ஞாயிறு காலை 9:45 க்கு எங்கள் வீட்டில் சப்ஜாடாக ஆஜர்!
எங்கள் பாட்டி டி.வி. க்கு சந்தனமும் குங்குமமும் வைத்ததைப் பார்த்து நானும் அண்ணனும் பதறினோம்!
"இராமர் நம்ம டி.வி. ல வரப்போறாரு. சும்மா இருங்க!", என்று அதட்டினார்கள். பின்னாலேயே என் அம்மா தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு செம்பருத்திப் பூவை டி.வி. யின் தலையில் வைத்தாள்! எனக்கென்னவோ அந்த ஒனிடா விளம்பரத்தில் வரும் மொட்டைப் பேய்க்கு பூ வைத்த மாதிரியே ஒரு ஃபீலிங்!
ஆனால் சற்று நேரத்தில் புது டி.வி. யை தொட்டுப் பார்க்க விரும்பிய குட்டீஸை விலக்கிவிடும் போது, "நெய்பர்ஸ் என்வி, ஓனர்ஸ் ப்ரைட்!" என்று அந்த மொட்டைப் பேய் விளம்பரத்தில் கூறும் வசனம் தான் நினைவுக்கு வந்தது!

பூவோடும் பொட்டோடும் அலங்கரிக்கப்பட்ட அந்த புதுப்பெண்ணிற்கு...அடுத்து தூபக்காலும் தயார் நிலையில் இருந்தது! பட்டாபிஷேக நேரத்தில் டி.வி. யில் வரும் இராமர்-சீதைக்கு காட்ட வேண்டும் என்று சூடம், தீப்பெட்டியுடன் பாட்டி!
சரியாக காலை பத்து மணி. இராகு காலம், எமகண்டம் எல்லாம் பட்டாபிஷேக விழாவால் தள்ளுபடி ஆனது! டி.வி. போட்ட விநாடி, "ஹேஹஹஹ..." என்று அறை அதிரச் சத்தம்!
இராமாயணம் தொடங்கியதும், பாட்டிக்கு ஒவ்வொரு வரியாய் மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டிருந்தேன் நான். பெருமிதம் தாளாது, "என் பேத்தி ஹிந்தி படிச்சிருக்கா. அப்டி அழகா சொல்றா" என்ற உடனிருந்த மத்த பாட்டிகளிடம் அகமகிழ்ந்து கூறினாள்.
பட்டாபிஷேகம் ஒளிப்பரப்பான போது, அந்த அறையைக் கோயிலாக மாற்றினார்கள் பாட்டியும் அம்மாவும்! பூவைத் தூவி, மணி அடித்து, தீபாராதனை காட்டி "ஜெய் ஸ்ரீ ராம்!" என உரக்கக் கூறி கண்ணத்தில் போட்டுக் கொண்டதோடு நிற்காமல், அம்மா அடுப்பங்கறை சென்று அனைவருக்கும் செய்து வைத்திருந்த பால் பாயாசத்தைக் கொண்டு வந்து டி.வி. முன்னாடி வைத்து படைத்தாளே பார்க்கணும்!!
இத்துடன் ஃபளாஷ் பேக் இனிதே முடிந்தது! நம்ம பழைய கதையைத் தொடருவோமா?
இப்படி நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்களின் புது கலர் டி.வி. அவ்வப்போது பரிதவிக்கத் தொடங்கியது. பெரும்பாலும் ஆண்டெனா திரும்பிக் கொள்ளும் காரணம்தான்...
ஆண்டெனா கம்பியை மீண்டும் சரியான நிலைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே! அந்த முக்கியப் பணியாற்ற ஒரு கூட்டு முயற்சி அவசியம் தேவைப்படுகிறது.
காலையில் அம்மா சட்டியில் இருவருக்கும் கலந்து வைத்திருந்த ரஸ்னாவை, இரண்டு பூப் போட்ட கண்ணாடிக் கோப்பையில் ஊற்றும் போது இரண்டிற்கும் போக ஒரு வாய் மீதம் இருந்தது. தியாகித் தாயிடம், பாசத்தைக் காட்டிலும், சண்டையைத் தவிர்க்கும் யுக்தியாய், "அம்மா, அத நீயே குடிச்சுரு", என்றேன்.
"ஐ லவ் யூ ரஸ்னா!" என்று ரஸ்னா விளம்பரத்தில் வரும் க்யூட் பேபியின் பன்ச் லைனை சொல்லிவிட்டுக் குடிப்பது என் வழக்கம். சொல்லி முடிப்பதற்குள், அண்ணன் தன் வேலையைக் காண்பித்து விட்டான். அந்த எக்ஸ்ட்ரா ஒரு வாயை, 'டபக்' என அவன் வாயில் ஊற்றிக் 'மடக் மடக்' கென குடித்துவிட்டான். இந்த பெரிய அசம்பாவிதத்தில்(!) தொடங்கிய சண்டை, நாள் முழுக்கத் தொடர்ந்தது.
இரவு 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக, டி.வி. யை ஆன் செய்த போது, 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சியே இன்னும் முடியவில்லை என்று உணர்ந்தோம். சற்று நேரத்தில் டி.வி. யில் கருப்பு வெள்ளை நிறத்தில் அலை அலையாய் வந்து கொண்டிருந்தது. பொதுவாக 'தடங்கலுக்கு வருந்துகிறோம் (சாரி ஃபார் தி இன்டரப்ஷன்) போன்ற வாசகங்கள் காண்பிக்கப்படும் போது, திரையில் வானவில் நிறங்கள் நேர்கோடுகளாய்த் தெரியும். அது தூர்தர்ஷன் தரப்பில் கேட்கப்படும் மன்னிப்பு. ஆனால் இந்த கருப்பு வெள்ளை வந்தால் எங்கள் தொலைக்காட்சியிலோ அல்லது மேலே ஆண்டெனாவிலோ ஏதோ பிரச்சனை என்பதையே சில நாட்களுக்குப் பிறகு தான் புரிந்து கொண்டோம்.
காலையிலிருந்து பேசிக்கொள்ளாமலிருந்த அண்ணனும் நானும் மாலை ஆண்டனாவால் இணைய வேண்டும் என்பது விதி. வழக்கம்போல் மானத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு, "நீ கீழ இருந்து பாத்து சொல்லு. நா மேல போய் திருப்புறேன்", என்று சொல்லிக் கொண்டே மாடி ஏற ஓடினான் அண்ணன்.
டி.வி. ரூமில் இருந்து எப்படி சிக்னல் கிடைக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு, நடுவாசலுக்கு நான் ஓடிச் செல்ல வேண்டும். மொட்டை மாடியில் பாராபெட் வாலில் ஏறி நின்றோ, அல்லது குரங்கு விரட்ட வைத்திருக்கும் குச்சியைக் கொண்டோ லாவகமாக ஆண்டெனாவைத் திருப்பும் அண்ணனுக்கு நடுவாசலிலிருந்தே உரக்க சிக்னல் கொடுக்க வேண்டும். அதைக் கேட்டு அவன் திருப்பத் திருப்ப, மீண்டும் டி.வி. அறைக்கு ஓடு வந்து பார்த்துவிட்டு மீண்டும் சென்று அவனுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
"ஒன்னுமே தெரில" என்பதில் துவங்கி, "ஆ...வந்துட்டு வந்துட்டு போகுது" எனத் தொடர்ந்து, "கொஞ்சம் லைட்டா முன்னாடி திருப்புன மாதிரியே திருப்பு" என முன்னேறி...இறுதியில் "ஆஆஆ இப்போ நல்லா தெரியுதுடா. சீக்கிரம் வா. 'புது வசந்தம்' பாட்டு வந்திருச்சு" என வசந்தம் திரும்பும் எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும்!
இப்போது தட்டினால் டி.வி. யில் ஓடிடியில், யூட்யூபில் எந்தப் படத்தை வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் பார்க்க முடிகிறது! ஆனால், 'ரீஜினல் லேங்குவேஜ் ஃபிலிம்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிராந்திய மொழித் திரைப்படம் தான் அப்போது எங்களுக்கு
கிடைக்கும் அரிய வரம்!
ஒவ்வொரு வாரமும், வியாழன் விகடனுக்கும், வெள்ளி ஒளியும் ஒலியுமிற்கும், ஞாயிறு காலை இராமாயணத்திற்கும், ஞாயிறு மாலை தமிழ்த்திரைப்படத்திற்கும் காத்திருந்த கூட்டம் நாங்கள்!
ஒளியும் ஒலியுமாவது ஓரளவிற்கு புதுப்பாடல்களை பல விளம்பரங்களுக்கு இடையில் காட்டும். ஆனால் ஞாயிறு திரைப்படங்கள் மிகப் பழமையானதாக இருக்கும்! பெரும்பாலும் கருப்பு-வெள்ளைப் படம் தான்!
தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம், ப்ராந்திய மொழித் திரைப்படம் என்ற பெயரில், இந்திய மாநில மொழிகளில் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் அல்லது சிறந்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மொழி. ஆகவே, இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்பாவதற்கான வாய்ப்பு இருக்கும்!
அந்த திரைப்படம் என்னவாக இருக்கும்?! என்று நாங்கள் மண்டையை உடைத்துக் கொள்வதிலும், எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் ஒளிந்திருந்தது அவ்வளவு மகிழ்ச்சி! எல்லாம் கைக்கு சுலபமாக எட்டுவதால், 'தேடல்' என்ற பெரும் ஸ்வாரஸ்யத்தை இழந்து நிற்கிறது... இன்றைய தலைமுறை!
அப்படி ஒரு முறை, விஜயகாந்த் நடித்து 1980 யில் வெளிவந்த "தூரத்து இடி முழக்கம்" என்ற திரைப்படம் ஒளிபரப்பானது. 1981 ஆம் ஆண்டு 'இந்தியன் பனோரமா'வில் அகில உலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான 21 படங்களில் இப்படமும் ஒன்று என்பதும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது!
தியம் 1:30 மணிக்கு, நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெருங்கூட்டமாய் காத்திருந்தோம்.
அந்த சாதாரண திரைப்படத்தை 2.5 மணித்துளிகள் போராடிப் பார்த்த நினைவுகள் இன்றும் என் மனதை விட்டகலவில்லை.
மே மாத மதிய வெயிலையும் பொருட்படுத்தாது,
நான்கு முறை ஆண்டெனாவைத் திருப்பி, இரண்டு முறை கரண்ட் கட் ஆகி, கரண்ட் படம் முடிவதற்குள் வருமா? வருமா? எனத் தவமிருந்து,
ஒன்றும் புரியாவிட்டாலும் ரசித்து, சிரித்து மகிழ்ந்திருந்தோம்!
எங்களுக்கு ஏங்கிக் காத்திருப்பதில் இருந்த சுகமும், சின்னச் சின்ன விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சியும், அதை அடைந்த நொடி கிட்டிய பேரானந்தமும் மற்றற்றது.
ஏகமாய் இருந்தும், எதைத் தேர்வு செய்வதென்று திணறி, எல்லாம் அனுபவித்தும், எதிலும் திருப்தி அடையாத இந்தத் தலைமுறையினரைப் பார்த்தால் வியப்பாகத் தான் இருக்கிறது எங்களுக்கு!
- இப்படிக்கு,
'ப்ளெஸ்டு வித் த லீஸ்ட்' (Blessed with the least)
- 90-ஸ் கிட்!
- அலமேலு இராமநாதன்,
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.














