'இந்தியாவின் ஆன்மாவைப் புகைப்படம் எடுத்தவர்.!' - ரகுராய் நினைவலைகள்
கவிதையிலோ, கதையிலோ சொற்கள் உண்டு. கவிஞரோ, புனைகதை ஆசிரியரோ தம் எண்ணங்களைச் சொற்களின் வழியாக வாசகரிடத்தில் கடத்திவிடுகிறார். ஆனால் புகைப்படக் கலையில் சொற்கள் இல்லை. காட்சிதான் சொற்கள்; காட்சிதான் மொழி, காட்சிதான் ஊடகம்; எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.
காட்சியின் வழிதான் வாசகர் ஒரு புகைப்படத்தை அர்த்தப்படுத்திக் கொள்கிறார். இன்பம், துன்பம், காதல், பிரிவு என மனித உணர்வின் அனைத்து நிலைகளும் காட்சிவழிதான் புகைப்படத்தில் கடத்தப்படுகின்றன.
இப்போது அனைவரிடமும் கைப்பேசிகள் உள்ளன. உண்மையில், ஓர் ஆய்வின்படி புகைப்படங்கள் எடுக்க மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருவி கேமிரா இல்லை; கைப்பேசி தான். நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் நின்று தாம் கண்ட காட்சிகளை அப்படியே கைப்பேசி வழியே படம் பிடிக்கலாம். இது இப்போது வந்த வசதி. ஆனால், புகைப்படக்கலை இந்தியா வந்த வரலாறு வேறு. தங்களுடைய ஆட்சியாளர்களைப் படம் பிடித்துக் கொள்வதற்காக ஐரோப்பியர்கள் கொண்டு வந்த கருவியே கேமிரா. ஐரோப்பியர்கள் இந்திய மக்களை மானுடவியல் அடிப்படையில் பிரித்துக் காட்டவும், இங்குள்ள வளங்களைப் புகைப்படம் எடுக்கவும்தான் கேமிராவைப் பயன்படுத்தினார்கள். பிறகு, மெல்ல இந்தியாவைச் சேர்ந்த உயர்வர்க்கத்தினர், செல்வந்தர்கள் கேமிராவை வாங்கிப் பயன்படுத்தினார்கள். அதன்பிறகுதான் அது பத்திரிக்கை, அரசியல் முதலிய துறைகளில் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்தியாவை அதன் பண்பாட்டுச் சூழலோடு படம் பிடித்துக் காட்டியவர்
இந்தியாவை மேற்கத்திய புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்விதம் வேறு. இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும்விதம் வேறு. இந்தியாவை, இந்தியப் பண்பாட்டை, இந்திய மக்களை இந்தியப் புகைப்படக் கலைஞரால்தான் அதன் அசல்தன்மையுடன் பிடித்துக் காட்ட இயலும். அந்த வகையில் இந்தியாவை அதன் பண்பாட்டுச் சூழலோடு படம் பிடித்து வெளியுலகிற்குக் காட்டியவர் புகைப்படக் கலைஞர் ரகுராய்.
சாதாரணங்களிலிருந்து அசாதாரணத்தை நோக்கி…
இவருடைய புகைப்படப் பயணம் ஒரு குட்டிக் கழுதையுடன் தான் தொடங்கி உள்ளது. ஆம். புகைப்படத்துறைக்குள் தான் வந்தவிதம் மிகவும் தற்செயலானது என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் ரகுராய். அசாதாரணங்கள் எல்லாமே சாதாரணங்களில் இருந்து தானே தொடங்குகின்றன.
ஒரு மாலை நேரத்தில் ரகுராயும் அவரது நண்பரும் ஒரு கிராமத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது ரகுராய் புகைப்படம் எடுப்பதற்குப் பழக்கம் ஆகவில்லை. அவரது நண்பர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அவருடைய கேமிராவில் புகைப்படம் எடுத்தாராம்.
அதைப் பார்த்த ரகுராய் தன்னிடமும் அந்தக் கேமிராவைக் கொடுத்தால் தானும் புகைப்படம் எடுப்பேன் எனக் கூறியுள்ளார். அவருடைய நண்பரும் கேமிராவை அவரிடம் தருகிறார். ரகுராய் சுற்றிலும் பார்க்கிறார். அங்கு ஒரு கழுதைக் குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதன் முகத்தருகே கேமிராவை வைத்து ஒரு புகைப்படம் எடுக்கிறார் ரகுராய். இரவு வீட்டிற்கு வந்ததும் தாம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரது நண்பர். அப்போது ரகுராய் எடுத்த கழுதைக்குட்டியின் புகைப்படம் அவருக்கு எதிர்ப்படுகிறது.

அதை எடுத்த ரகுராயை அழைத்து ‘இது மிகவும் அழகாக உள்ளது. அருமையாக எடுத்திருக்கிறாய்’ எனப் பாராட்டுகிறார். அத்தோடு நிற்காமல் அந்தப் புகைப்படத்தை டைம்ஸ் லண்டன் பத்திரிக்கைக்கு அனுப்புகிறார் ரகுராயின் நண்பர். அந்த வாரத்தின் இறுதியில் டைம்ஸ் லண்டன் பத்திரிக்கையில் ரகுராய் எடுத்த அந்தக் கழுதைக் குட்டியின் புகைப்படம் அரைப்பக்கத்திற்கு வெளியாகிறது. அந்தப் புகைப்படத்தையும் அதற்குக் கீழ் தன் பெயரையும் பார்த்த ரகுராய் ஏன் புகைப்படத் துறையிலேயே பயணிக்கக் கூடாது எனச் சிந்திக்கிறார். அப்படியாகத்தான் ரகுராய் புகைப்படத் துறைக்குள் வருகிறார்.
பிறப்பில் அல்ல முயற்சியால் வருவது தான் கலை
நம்முடைய இந்திய மரபில் ‘கலைஞர்கள் கருவிலே திருவுடையவர்கள்’ என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், அந்த நம்பிக்கை ரகுராய்க்கு இல்லை. எது ஒன்றும் பயிற்சியால்தான் வருகிறது என்கிறார் ரகுராய். ஒரு நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில், ‘எந்தத் தாயும் தன் பிள்ளையை அறிவாளியாகப் பெற்றெடுப்பதில்லை. அறிவு என்பது பிறப்புடன் தொடர்புடையது இல்லை. அது முயன்று பெறுவது; கலையும் அவ்வாறுதான். சிலர், தங்கள் வாழ்க்கையில் ஒன்றைச் சீக்கிரமே தொடங்கிவிடுகிறார்கள். அதனால் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். சிலர் நேரங்கழித்துத் தொடங்குகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்குச் சற்று நாளாகும். அவ்வளவு தான்’ என்கிறார். ரகுராயைப் பொறுத்தவரை ‘கலை என்பது ஒன்றைப் பார்த்து அப்படியே போலி செய்வதல்ல. அப்படிப் போலி செய்யும் கலைகளும் வரலாற்றில் நிலைப்பதில்லை. நாம் யாரைப் பார்த்தும் போலி செய்யக் கூடாது. நம்மை நாம் தான் கண்டடைய வேண்டும்’ என்கிறார்.

புகைப்படம் என்பது வெறுமனே பார்ப்பதல்ல; அது ஒரு தரிசனம்
அந்தந்தச் சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப வரலாற்றை மாற்றி அமைக்கலாம். வரலாறும் அப்படித்தான் வாசிக்கப்படுகிறது. ஆனால், புகைப்படம் அப்படியல்ல. அது எடுக்கப்பட்ட கணத்தை மீண்டும் மாற்ற முடியாது. “Photography can’t be rewritten” என்கிறார் ரகுராய். வேறொரு நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நான் இந்த உலகத்தைக் கேமிராவின் வழிதான் பார்க்கிறேன். ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கும்போது என் கையில் கேமிரா இல்லையென்றால் அந்நிகழ்வைப் பார்ப்பதே நான் பாவம் என்று கருதுகிறேன்’ என்கிறார். ரகுராயைப் பொறுத்தவரை புகைப்படம் என்பது வெறுமனே பார்ப்பதற்கு உரியது அல்ல. அது ஒரு தரிசனம். அதனால்தான் மனிதர்களின் பல்வேறு உணர்வுகளைப் புகைப்படங்கள் வழியாக அவரால் கடத்த முடிந்தது.
கோட்பாடுகளைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்
ரகுராய்க்குப் புகைப்படக் கலை என்பது தொழில்நுட்பத்தைச் சார்ந்தது அல்ல. உள்ளுணர்வைச் சார்ந்தது. நீங்கள் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அந்தக் காட்சிக்காகக் காத்திருக்க வேண்டும். அந்தக் காட்சியை நீங்கள் ஆத்மார்த்தமாக மனதில் உணர வேண்டும். அது தான் சிறந்த புகைப்படத்தை உங்களுக்குத் தரமுடியும். மேலும், உங்களுக்குள் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் இருக்கலாம். புகைப்படம் எடுக்கும்போது அதெல்லாம் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்துவிட வேண்டும். கலை என்பது அனுபவம். நீங்கள் என்ன உணர்கிறீர்களோ அது தான் முக்கியது. நீங்கள் தான் இங்கு முக்கியம் என்கிறார் ரகுராய். அதைப்போலவே, புகைப்படத்திற்குச் சூழலும் முக்கியம். சூழல் என்பது வேறொன்றுமில்லை. அது தமிழ் மரபில் சங்க இலக்கியத்திலே அழுத்தமாக உண்டு. எல்லாக் கவிதைகளும் குறிப்பிட்ட சூழலைச் சார்ந்தவை தான். காதல் கவிதையை மலை சார்ந்த பின்புலத்தில் குறிஞ்சித் திணையில் பாட வேண்டும் என்பது தான் சூழல். பிரிவுக் காட்சியை வறண்ட பாலை நிலத்தில்தான் பாட இயலும்.

வண்ணங்கள் செய்யும் அரசியல்
வண்ணம் குறித்து ரகுராய் சொல்லும் கருத்து மிகவும் முக்கியமானது. வண்ணங்கள் வெவ்வேறு உணர்வுகளைக் கடத்தும் சக்தி மிக்கவை. ஒரு புகைப்படத்தில் வண்ணங்கள் வாசகருக்குப் பல்வேறு கலவையான உணர்வுகளைக் கடத்தி விடலாம். புகைப்படக் கலைஞர் கடத்த விரும்பாத வண்ணங்களைக் கூடக் கடத்திவிடலாம். ஆனால், கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அப்படி அல்ல. வண்ணப் புகைப்படத்தை எங்குப் பயன்படுத்த வேண்டும், கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை எங்குப் பயன்படுத்த வேண்டும் எனப் புகைப்படக் கலைஞருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் ரகுராய்.
புகைப்படத்தின்வழி உரையாடியவர்
ரகுராய் எடுத்த புகைப்படங்கள் எல்லாமே அதி அற்புதமானவை. அவர் எடுத்த முதல் புகைப்படமே அதற்குச் சாட்சி. அந்தக் குட்டிக் கழுதையின் புகைப்படத்தில் கழுதையின் சுட்டித்தனமும் பரிவிற்கான ஏக்கமும் அதன் கண்களில் வெளிப்படுவது போல அந்தப் புகைப்படத்தை எடுத்திருப்பார் ரகுராய். இந்தியாவையே துயரத்தில் ஆழ்த்தியது போபால் விஷ வாயுக் கசிவு. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழி கொண்டது அந்நிகழ்வு. அங்குச் சென்று அவர் எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் மண்மூடிய ஒரு சிறுவனின் புகைப்படம் முக்கியமானது. அந்தச் சம்பவத்தின் கோரத்தை விளக்க அந்தச் சிறுவனின் ஒற்றைப் புகைப்படமும் அவனது கண்களுமே சாட்சி. ரகுராய் பல்வேறு பத்திரிக்கைகளில் பணிபுரிந்துள்ளார். பத்திரிக்கைகளுக்காக அவர் எடுத்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் மிக முக்கியமானவை. இந்திராகாந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் மட்டும் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் அவரது கட்சியைச் சேர்ந்த ஆண்கள் நின்று கொண்டிருப்பார்கள். அரசியல் வரலாற்றில் ஒரு பெண்ணின் ஆளுமையைக் காட்டுவது அந்தப் புகைப்படம். எம். எஸ். சுப்புலட்சுமி, தலாய் லமா, அன்னை தெரஸா என மிகப் பெரும் ஆளுமைகளை அவர்களது அசலிலிருந்து புகைப்படம் எடுத்தவர் ரகுராய்.

இந்தியாவின் ஆன்மாவைப் புகைப்படம் எடுத்தவர் மறைந்தார்
இந்தியாதான் புகைப்படத்திற்கான மிகச்சிறந்த இடம் என அசராத நம்பிக்கைக் கொண்டிருந்தவர் ரகுராய். நீங்கள் வெளியில் வந்தாலே அதி அற்புதமான காட்சிகளைப் பண்பாடுகளை, வேறுபட்ட மனிதர்களைக் காண முடியும். புகைப்படத் தேர்விற்கான இடம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் தான் அவர் எடுத்த காலத்தைச் சுழற்றிக் காட்டும் ஒரு மெட்ரோ ஸ்டேசன் புகைப்படம் மிகப் பிரபலமானது.

இந்தியாவை அதன் முரண்களோடும், அதன் உள் அழகோடும் புகைப்படம் எடுத்தவர் இன்று நம்மோடு இல்லை. இரண்டு வருடமாகப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரகுராய் தன் 83-வது வயதில் 26.04.2026 அன்று காலமானார். அவர் மறைந்த நாளில் “இந்தியாவின் ஆன்மாவைப் புகைப்படம் எடுத்தவர் மறைந்தார்” என்றார் ராகுல் காந்தி. ஆம். அது உண்மைதான். ரகுராய் இல்லாமல் இந்தியப் புகைப்படக் கலை வரலாறு இல்லை.















