தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' - எச்சரிக்கும் குழந்தைகள் ...
தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' - எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!
தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளை உணர்வு ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் அக்கட்சியின் பிரசாரப் பிரிவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு ஆணையம் கடந்த 28-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ``நடிகர் விஜய் தனது உரையின் மூலம் குழந்தைகளை உணர்வு ரீதியாகத் தூண்டி, அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களைத் தனது கட்சிக்கும், "விசில்" சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தச் செய்திருக்கிறார். இந்த உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் குழந்தைகள் அழுவதும், உணவு உண்ண மறுத்து அடம் பிடிப்பதும் போன்ற காட்சிகள் பரவின. இது குழந்தைகளைத் தேர்தல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தும் செயல்.
இது இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் பிரிவு 75 மற்றும் 83-ன் கீழ் ஒரு விதிமீறல். 'கொடுமை' என்பது உடல் ரீதியான பாதிப்பை மட்டும் குறிக்காது, மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகளையும் உள்ளடக்கியது. மேலும், தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு இது முற்றிலும் முரணானது.

எனவே, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம் 2005-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளை அரசியல் செல்வாக்கிற்காகப் பயன்படுத்தும் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சாரப் பிரிவினர் மீது இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் உரியக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காகத் தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளின் நலனைக் காக்க இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஆணையம் விடாது." என மிகக் கடுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ``பெற்றோர்களே... தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில் குழந்தைகளுடன் இருங்கள். தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு சில குழந்தைகள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்.
தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த படி அமையவில்லை எனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பாதுகாப்பது நமது கடமை. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாய் இருந்திட பெற்றோர்களே மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். உதவிகள் தேவைப்பட்டால் குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-ஐ உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்" என எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.














