செய்திகள் :

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

post image

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் சூடு பரவியிருக்கிறது.

தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பதவிக்காலம் மே 7, 2026 அன்று முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. ஆளுநர் மாளிகை மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகிய இரு உயரிய அரசியலமைப்பு பதவிகளும், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜக இடையிலான அரசியல் மோதலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மம்தா பானர்ஜி - ஆனந்த போஸ்
மம்தா பானர்ஜி - ஆனந்த போஸ்

கடந்த மார்ச் 5-ம் தேதி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் யாரும் எதிர்பாராத விதமாகத் தனது ராஜினாமாவை அறிவித்தார். இது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருக்குப் பதிலாக, தமிழ்நாட்டில் தி.மு.க அரசுடன் தொடர் மோதல்களை உருவாக்கிய ஆளுநரும், முன்னாள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த மாற்றம் நடந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தன் திடீர் ராஜினாமா குறித்து பேசிய ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், ``என் ராஜினாமா தனிப்பட்ட முடிவு. காரணங்கள் ரகசியமானவை. பொருத்தமான நேரத்தில் காரணத்தைக் கூறுவேன்" என்றார்.

ஆளுநர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, ``தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, பா.ஜ.க-வின் அரசியல் லாபத்திற்காகச் செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். இதில் நான் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆளுநர் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். திட்டமிட்டபடி வடக்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டிய ஆளுநர், திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டது ஏன்? தங்களுக்குப் பணிந்து போகும் ஒரு 'சொல்பேச்சுக் கேட்கும்' ஆளுநரை நியமிக்கத்தான் இவரை நீக்கினீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்து, 'ஆளுநர் ஆனந்த போஸ் தனது உடல்நலக் காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்தார்' என விளக்கம் அளித்தது.

இதற்கிடையில் மார்ச் 7, 2026 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வடக்கு வங்காளத்தின் சிலிகுரி அருகே பிதான்நகர் பகுதியில், 9-வது சர்வதேச சந்தால் (Santhal) பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியும் திட்டமிட்டப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மேற்கு வங்க அரசு இறுதி நேரத்தில் இடத்தை மாற்றி, சிறிய இடமான பாக்டோக்ரா பகுதி, கோசைன்பூருக்கு நிகழ்ச்சியைக் கொண்டு சென்றது. இதனால் பழங்குடியின மக்கள் பெருமளவில் வர முடியவில்லை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்துகொண்டனர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு

இந்த நிகழ்ச்சிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, அமைச்சர்களோ யாரும் செல்லவில்லை. சிலிகுரி மேயர் கௌதம் தேப் மட்டுமே வரவேற்றார். அதைத் தொடர்ந்து 'வழக்கமான நெறிமுறை (protocol) பின்பற்றப்படவில்லை' என்று குடியரசுத் தலைவர் இரண்டாவது குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி முர்மு, ``பழங்குடியின மக்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவிடமல் தடுத்து நிறுத்தியது போல் தெரிகிறது. இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதால் மக்கள் வர முடியவில்லை. மாநில அரசு பழங்குடியினரின் நலனை விரும்பவில்லை போலும்.

நானும் இந்த வங்கத்தின் மகள் தான். மம்தா பானர்ஜி என் இளைய தங்கை. அவர் என்னுடன் கோபமாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் சரி, அவருக்கு நலமே விழைய விரும்புகிறேன்.” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் இந்த உரைக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ``இது தனியார் அமைப்பு (சந்தால் அமைப்பு) நடத்திய நிகழ்ச்சி. மாநில அரசின் நிகழ்ச்சி அல்ல. இதில் எங்கே நெறிமுறை மீறப்பட்டிருக்கிறது?பா.ஜ.க-வின் ஆலோசனையில் அரசியல் செய்ய வேண்டாம் என குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன். SIR மூலம் எத்தனை பழங்குடியினர் பெயர்கள் நீக்கப்பட்டன? அதைப் பற்றி ஏன் பேசவில்லை? தேர்தல் நேரத்தில் குடியரசுத் தலைவரை பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள்" என்றார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த நிகழ்வுக்குப் பிறகு பா.ஜ.க தலைவர்கள், ``குடியரசுத் தலைவரை அவமதித்து, பழங்குடியினர் மரியாதைக்கு உலை வைத்துவிட்டார்கள்" என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். பிரதமர் மோடி, இந்த சம்பவத்தை ``வெட்கக்கேடானது, குடியரசுத் தலைவருக்கு முன்னெப்போதும் இல்லாத அவமதிப்பு” என்று கண்டித்திருக்கிறார். உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கு நடுவேதான் "மேற்கு வங்கத்தில் சுதந்திரமான தேர்தல் நடத்த 'குடியரசுத் தலைவர் ஆட்சி'யே தீர்வு" என பாஜக எம்.பி. ராஜு பிஸ்தா பேசினார். அவரின் இந்த வார்த்தை மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதற்குப் பதிலளித்த திரிணமுல் காங்கிரஸ், "முதலில் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை நீக்கப் பார்த்தார்கள், பிறகு ஆளுநரை மாற்றினார்கள்; இப்போது இவை அனைத்தும் தோல்வியடைந்ததால், தேர்தலைத் திருடுவதற்காகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க துடிக்கிறது" எனச் சாடியுள்ளது.

வன்முறை - மேற்கு வங்கம்

குடியரசுத் தலைவரின் பேச்சுக்குத் திரிணமுல் காங்கிரஸ் இவ்வளவு கடுமையாகப் பதிலளிக்கக் காரணம், வடக்கு வங்காளத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகள் ஆகும். ஏற்கனவே அங்கு பழங்குடியினப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், பழங்குடியின மக்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க இரு தரப்பும் போராடி வருகிறது.

மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் மொத்த மக்கள்தொகையில் சுமார் 5.8% ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த பட்டியலின மக்கள்தொகை: 52,96,963. வடக்கு வங்கம் பகுதிகளில் பட்டியலின மக்கள் 10-25% வரை வாழ்கின்றனர்.

சில தொகுதிகளில் 20-25% வரை பழங்குடியின வாக்குகள் இருப்பதால், அங்கு அவர்கள் முடிவெடுக்கும் சக்தி கொண்டவர்களாக உள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்ட சந்தால் (Santal) இனம் மட்டும் மாநில ST மக்கள்தொகையில் 51-52% ஆக உள்ளனர். எனவே, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வடக்கு வங்கத்தில் பழங்குடியின வாக்குகள் முக்கியமானவை. அதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க என இரு தரப்பும் அந்த மக்களைக் குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போதைய சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையும், குடியரசுத் தலைவரின் கருத்தும் வங்காளத் தேர்தலை ஒரு தேசிய அளவிலான முக்கியப் பிரச்னையாக மாற்றியுள்ளது. தீதியின் அடுத்தடுத்த சம்பவங்கள் என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேற்காசியாவில் ... மேலும் பார்க்க

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இர... மேலும் பார்க்க