மார்க்கெட் பார்த்து பயமா? ஏன் தைரியமானவர்களுக்கு மட்டுமே பங்குச்சந்தை லாபம் தரும...
ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! - மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!
ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த ஒருவாரத்திற்குள் மிக முக்கியமான சில அதிகாரிகளும் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், "தேர்தல் பாரபட்சமற்ற முறையில் நடைபெற, அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் தீரஜ் குமார், அமுதா, ககன்தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் மாற்றிட வேண்டும்" என்று கோரியிருக்கிறார்.
அதேசமயம், அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளிடமிருந்தும் சில அதிகாரிகளை மாற்றிட தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை சென்றுள்ளது. இந்தச்சூழலில், தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி டெல்லிக்கு கொடுத்த பட்டியலின் அடிப்படையில்தான், தற்போது அதிகாரிகள் மாற்றம் நடைபெறப் போவதாகச் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், "தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தற்போது மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தமிழகத்திலிருந்து கிளம்பும் முன்பாக, ஒரு பெரிய பட்டியலையே டெல்லிக்கு அனுப்பிவிட்டார்.
அதில், 'எந்தெந்த அதிகாரிகளெல்லாம் தி.மு.க அரசுக்கு சார்பாக இருக்கிறார்கள், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் என்னென்ன பாதிப்புகள் வரும்' என்பதைத் தெளிவாக டெல்லி உள்துறைக்கு 'நோட்' போட்டிருக்கிறார் ஆளுநர் ரவி. கிட்டத்தட்ட மூன்று மாதம் பல்வேறு தரப்பினரிடமும் கலந்தாலோசித்துதான் அந்தப் பட்டியலைத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆளுநர் ரவி அனுப்பியிருக்கும் அந்தப் பட்டியலில் ஆளும் தரப்புக்கு நெருக்கமான ஐ.ஏ.எஅஸ் அதிகாரியும், பிளஸ்ஸிங் அதிகாரியும், முருக கடவுள் பெயர் கொண்ட அதிகாரியும், சென்னை்யின் மாநக உச்ச அதிகாரி ஒருவரின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றன என்கிறார்கள்.
இதுபோக, இரண்டு மண்டல ஐ.ஜி-க்கள், சென்னையிலுள்ள ஒரு கூடுதல் ஆணையர், இரண்டு இணை ஆணையரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. மூன்று மாநகர காவல் ஆணையர்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
மாவட்ட அளவில், 12 எஸ்.பி-க்களின் பெயர்களை மாற்றத்துக்குப் பரிந்துரை செய்திருக்கிறார் ஆளுநர் ரவி. வழக்கமாக, தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகளைத்தான் தேர்தல் ஆணையம் பந்தாடும். அதை தன்னுடைய நோட்டில் குறிப்பிட்டிருக்கும் ஆளுநர் ரவி, 'தேர்தலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத சில அதிகாரிகள்தான், திறைமறைவில் இருந்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்' என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம்.

ஆளுநர் ரவி அனுப்பிய பட்டியலை சீரியஸாகவே பார்க்கும் மத்திய உள்துறை, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமிருந்தும் லிஸ்ட் பெற்றிருக்கிறது. இதனடிப்படையில்தான், அதிகாரிகள் மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. ஆளுநரின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும் சில அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை" என்றனர் விரிவாக.
ஆளுநரின் ரிப்போர்ட் ஒருபுறம் புழுதியைக் கிளப்பும் நிலையில், யார் யாரெல்லாம் மாற்றப்படப்போகிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த சூழலில், அண்ணாசாலைக் கட்சியின் சில தடாலடி வேலைகள் மத்திய உளவுத்துறை வரையிலும் 'ஜெர்க்'கைக் கொடுத்திருக்கிறதாம்.
சமீபத்தில், ஐந்து மாநிலங்களுக்கும் 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமித்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது தேர்தல் ஆணையம். அதன்படி, தமிழகத்துக்கு 136 தேர்தல் பொதுப் பார்வையாளர்களும் 40 காவல்துறை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செலவின பார்வையாளர்களாக 151 பேர் நியமனம் ஆகியுள்ளனர். இந்த செலவீன பார்வையாளர்கள்தான், வேட்பாளர்களின் செலவுக்கணக்கைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும்.
த.வெ.க-வின் அரசியல் வருகையால், இந்தத் தேர்தலில் கடுமையாக பணம் விளையாடுமென்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வருகிறது. ஏற்கெனவே, பல்வேறு தொகுதிகளில் பரிசுப்பொருள் விநியோகம் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டன. இதையெல்லாம் ரிப்போர்ட்டாக செலவின பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தலே ரத்தாகிவிடும். கடந்த 2016 தேர்தலில், அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் அந்தவகையில்தான் தேர்தல் ரத்தானது.

அதற்காகவே, ஒரு முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியை கையிலெடுத்து 'லாபி' செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் அண்ணாசாலை கட்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விருப்ப ஓய்வுப்பெற்ற அந்த 'பரம்பொருள்' ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மேலிடத்து புள்ளிக்கு நெருக்கமான ஒருவரை, ஒரு சிக்கலான வழக்கிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.
தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய அந்த வழக்கு, இன்று நீர்த்துப் போய்விட்டதற்கு அந்த அதிகாரிதான் காரணம் என்கிறார்கள். அவருடைய 'திறமை'யைப் பார்த்துவிட்டுத்தான், செலவீன பார்வையாளர்களைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் பெரிய அசைன்மென்ட் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
அவருமே, தனக்கு நெருக்கமான சில வருமானவரித்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு 'லாபி' செய்ய ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மத்திய உளவுத்துறைக்கு தெரியவந்திருப்பதால், அந்த 'பரம்பொருள்' அதிகாரி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.












