விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்!
இந்தியாவிலும் ஐரோப்பியாவிலும் ஒரே வெப்பநிலைதான்... ஆனால், அங்கு அதிக உயிர் பலி ஏற்படுவது ஏன்?!
பிரான்ஸில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது வரலாறு காணாத வெப்ப அலை. தெர்மாமீட்டரின் முள் இந்தியாவைப் போலவே ஐரோப்பாவிலும் 43 டிகிரி செல்ஷியஸைக் காட்டலாம். ஆனால், அந்த வெப்பத்தின் தாக்கம் மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது?
கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கு இந்த வெப்பம் அந்நியமானதாகவும், இரக்கமற்றதாகவும், மிக முக்கியமாக, உயிரைக் குடிக்கும் எமனாகவும் மாறியிருக்கிறது. தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டி எகிற, கண்டம் முழுவதும் வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
அனைவர் மனதிலும் ஒரே கேள்விதான், "இந்தியாவில் உணரும் 43 டிகிரி வெப்பத்திற்கும், ஐரோப்பாவின் 43 டிகிரி வெப்பத்திற்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?"
இதற்கான பதில், வெறும் தெர்மாமீட்டர் காட்டும் எண்களில் இல்லை. பூகோள அமைப்பு, சூரிய ஒளியின் கோணம், கட்டட வடிவமைப்பு, ஈரப்பதம், காற்றின் தரம், நகர திட்டமிடல், ஏன் கலாசார பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் ஒரு மனிதன் வெப்பத்தை எப்படி உணர்கிறான் என்பதைத் தீர்மானிக்கின்றன.

ஒரே வெப்பநிலை; வெவ்வேறு உணர்வு - காரணம் என்ன?
சூரியனின் கோணமும், நீளும் பகல்பொழுதும்: மிகப்பெரிய வித்தியாசமே பூகோள அமைப்பில்தான் தொடங்குகிறது. ஐரோப்பாவின் பெரும்பகுதி இந்தியாவை விட வடதுருவத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. உதாரணத்திற்கு, பிரான்ஸின் தலைநகர் பாரிஸ், கனடாவின் டொராண்டோவை விட வடக்கில் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வளையத்திற்குள் வருகிறது. இதன் விளைவாக, கோடையில் ஐரோப்பாவை அடையும் சூரியக் கதிர்கள் சாய்வான கோணத்தில் விழுந்தாலும், மிக நீண்ட நேரம் வானில் நிலைத்திருக்கின்றன. உச்சகட்ட கோடையில், பல ஐரோப்பிய நகரங்கள் 15 முதல் 17 மணி நேரம் வரை பகல் பொழுதைக் காண்கின்றன. இதனால், கட்டடங்களும், சாலைகளும் நாள் முழுவதும் சூரிய ஆற்றலை உறிஞ்சி, இரவு வரை அந்த வெப்பத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் சூரியன் செங்குத்தாக உச்சியில் இருந்தாலும், பகல்பொழுது ஒப்பீட்டளவில் குறைவு.
பாதகமாகும் தெளிந்த வானம்: இந்தியாவின் நகரங்களில், குறிப்பாக பருவமழைக்கு முன்பு, காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் (Particulate Matter) அளவு அதிகமாக இருக்கும். இந்தத் துகள்கள் சூரிய ஒளியைச் சிதறடித்து, அதன் தீவிரத்தை தரையில் குறைத்துவிடுகின்றன. ஆனால் ஐரோப்பாவின் வானமோ பொதுவாக மிகத் தெளிவாக இருக்கும். சூரிய ஒளியைத் தடுக்க காற்றில் துகள்கள் இல்லாததால், சூரியக் கதிர்வீச்சு நேரடியாகத் தரையைத் தாக்குகிறது. இதனால், ஒரே வெப்பநிலையாக இருந்தாலும், ஐரோப்பாவில் வெயிலின் தாக்கம் தோலில் சுளீரென உறைக்கிறது.
காற்றோட்டமற்ற நகரங்கள்: சமீபத்திய ஐரோப்பிய வெப்ப அலைகள், அசைவற்றுத் தேங்கி நிற்கும் வளிமண்டல சூழலுடன் சேர்ந்தே வருகின்றன. பாதிக்கப்பட்ட பல பகுதிகளில், சிறிதளவுகூட காற்று வீசவில்லை. மரங்கள்கூட அசையாமல் நிற்கும்போது, வெப்பக் காற்று நகரங்களுக்கு மேல் ஒரு போர்வை போல சிக்கிக்கொள்கிறது. காற்றின் ஓட்டம் இல்லாததால், வியர்வையை ஆவியாக்கி உடலைக் குளிர்விக்கும் இயற்கையான செயல்முறை முடக்கப்படுகிறது. இதுவே வெப்பத்தை மேலும் மூச்சுத் திணற வைப்பதாக மாற்றுகிறது.
குளிருக்காக கட்டப்பட்ட கட்டடங்கள்: ஐரோப்பாவின் வீடுகளும், கட்டடங்களும் நீண்ட, கடுங்குளிர்காலத்தைச் சமாளிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டன; 40 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் கோடையைச் சமாளிக்க அல்ல. தடிமனான காப்புப் பொருள்கள் (Insulation), குறைந்த காற்றோட்ட வசதி, வெப்பத்தை உள்ளிழுக்கும் மரத் தளங்கள், அடர் நிறக் கூரைகள் என அனைத்துமே குளிர்காலத்தில் வெப்பத்தை வீடுகளுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், அதே அம்சங்கள்தான் இன்று கோடைக்காலத்தில் அவர்களை வதைக்கின்றன. கட்டடங்கள் வெப்ப உலைகளாக (Ovens) மாறி, இரவிலும் குளிர்ச்சி அடைய வாய்ப்பளிக்காமல் செய்கின்றன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பாரம்பர்ய கட்டடக்கலை, உயரமான மேற்கூரைகள், குறுக்குக் காற்றோட்ட வசதிகள், முற்றங்கள் என வெப்பத்தை வெளியேற்றும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலாசாரத்தில் இல்லாத ஏசி (AC): சமீபகாலம் வரை, ஐரோப்பிய நகரங்களில் ஆண்டுக்கு ஓரிரு நாள்கள் மட்டுமே வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால், வீடுகளில் ஏர் கண்டிஷனர் பொருத்தும் பழக்கம் பரவலாக இல்லை. ஏசி என்பது ஓர் அத்தியாவசியத் தேவையாகப் பார்க்கப்படவும் இல்லை. ஆனால், காலநிலை மாற்றம் இந்த நிலையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இன்று, வெப்ப அலைகள் நீண்டதாகவும், தீவிரமாகவும் இருப்பதால், அரசுகளும், மக்களும் குளிரூட்டும் உள்கட்டமைப்பை பற்றி மறுசிந்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில், "இந்தியர்களை விட ஐரோப்பியர்களால் வெப்பத்தைத் தாங்க முடியாது" என்று சொல்வது இந்தச் சிக்கலான யதார்த்தத்தை எளிமைப்படுத்துவதாகும். இந்தியாவில் ஈரப்பதத்துடன் கூடிய 43 டிகிரி வெப்பம் வியர்வையை ஆவியாக விடாமல் செய்து மூச்சுத் திணற வைக்கும். அதே சமயம், ஐரோப்பாவின் வறண்ட 43 டிகிரி வெப்பம், இடைவிடாத சூரிய ஒளி, அசைவற்ற காற்று மற்றும் வெப்பத்தை உமிழும் கட்டடங்களுடன் சேரும்போது, கடுமையான நீரிழப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. குளிருக்காகத் தங்களைப் பாதுகாத்துக்கொண்ட ஒரு சமூகம், இன்று வெயிலின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பது காலநிலை மாற்றத்தின் கொடூரமான முரண்நகைகளில் ஒன்று.















