'Vijay Votes' Amit shah-வுக்கு பறந்த ரிப்போர்ட்ஸ், EPS-க்கு கொடுத்த மெசேஜ்! | El...
இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
இந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கை மறந்திருக்கமாட்டோம்.
2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்டார். பல கட்ட முயற்சி செய்தும், அரசியல் அழுத்தங்களால் குற்றவாளியின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் பெயரை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடுமாறு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்போதே, எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் தம்பி அதுல் சிங், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தினார். சிறுமியின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி, காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தன் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பானது.
இதற்கிடையில், நீதிமன்றக் காவலில் இருந்த சிறுமியின் தந்தை, சிறையில் உயிரிழந்தார். சிறுமியின் தந்தையைத் தாக்கியதற்காக அதுல் சிங் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர். சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கும், அவரின் தந்தை கொலை வழக்கும் தனித்தனி வழக்குகளாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.
சிறுமிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய அவரின் சித்தப்பா, 19 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலை மிரட்டல் குற்றத்துக்காக, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, ரேபரேலி சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுல் சிங் உட்பட ஐவர் மீது சிறுமியின் தந்தையைக் கொலை செய்ததாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிறுமியின் தந்தையைப் பொய் வழக்கில் கைதுசெய்ததற்காக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் உட்பட 9 பேர் மீதும், காவல் துறையினர் நால்வர் மீதும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது குடும்பமும் தங்கள் பாதுகாப்பு குறித்தும், குல்தீப் சிங் செங்கரின் ஆள்களால் தொடரும் அச்சுறுத்தல் குறித்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அந்தக் கடிதம் நீதிபதிக்குச் சென்று சேரவில்லை.
இந்தச் சூழலில், ஜூலை 28, 2019 அன்று உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரிலிருந்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி, தன் சித்திகள் இருவருடனும், வழக்கறிஞருடனும் ரேபேராலி சிறைக்கு வாக்குமூலம் கொடுக்கப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கார் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில், அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியது. லாரி ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு, தப்பி ஓடினார்.

உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் வழக்கறிஞரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டனர். காரில் பயணித்த அவரது இரண்டு சித்திகளும், விபத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த இருவரும் உடனடியாக, லக்னோ கே.ஜி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், அவரது உடலின் வலது பக்கத்தின் பல எலும்புகள் முறிந்திருந்திருந்தது.
காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. லாரியின் நம்பர் பிளேட்டில் கறுப்பு மை பூசப்பட்டிருந்தது, சந்தேகத்தை வலுப்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி, "நடந்தது விபத்து அல்ல, சதி!" எனக் கூறினார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். லாரியின் தவணைத்தொகை கட்டாததால், நம்பர் பிளேட்டில் மை பூசியுள்ளதாக, காவல் துறையிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதுகாப்பாக இரண்டு பெண் காவலர்களும், ஓர் ஆண் காவலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் விபத்து நடந்தபோது, சிறுமியுடன் யாரும் இல்லை. இது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அன்று பணியில் இருந்திருக்க வேண்டிய காவலர் சுரேஷ் குமார், காரில் இடமில்லாததால் செல்லவில்லை என்றும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்குப் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறியதாகவும் விளக்கம் கொடுத்தார்.

இந்த விபத்துக்குப்பின்தான், சிறுமியின் குடும்பம் நீதிபதிக்கு எழுதியக் அந்தக் கடிதம் நீதிபதியிடம் இரண்டு வாரத் தாமதத்துக்குப்பின் சேர்பிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, "இந்தக் கடிதத்தை என்னிடம் சமர்ப்பிக்க இரண்டு வாரகால அவகாசம் எடுத்துக்கொண்டது ஏன்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார். அதற்காக ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்தார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, சிறுமிக்கு `உச்சபட்ச அச்சுறுத்தல்' இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனால், இந்த வழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக உத்தரப்பிரதேச மாநில அரசு 25 லட்ச ரூபாய் பணம் வழங்கியது. ரேபரேலி சிறையில் இருந்த சிறுமியின் சித்தப்பா, பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அப்போதைய உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், குல்தீப் சிங் செங்காரை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு தற்போது 2்4 வயதாகிறது. திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

இதற்கிடையில், குல்தீப் சிங் செங்கார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``விசாரணை நீதிமன்றத்தால் 2019 டிசம்பரில் வழங்கப்பட்ட தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ள காலம் வரை, அவரது தண்டனையை நிறுத்திவைக்கப்படுகிறது.
ரூ.15 லட்சம் தனிநபர் பிணை மற்றும் அதே தொகைக்கான மூன்று ஜாமீன்தாரர்களை வழங்குவதற்கு உட்பட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வசிப்பிடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் குல்தீப் சிங் செங்கார் நுழையக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஜாமீன் ரத்து செய்யப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரணம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான குல்தீப் சிங் செங்காரின் மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
ஏற்கெனவே உத்தரப்பிரதேச கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இந்த வழக்கின் ஜாமீனும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.



















