கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை...
``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன்" - மனம் வெதும்பி பேசிய வைகோ
ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், "கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்கு நூறாக்கியது. அதிமுக பொதுச் செயலாளரான மறைந்த ஜெயலலிதா என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதே அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தததை போன்ற பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு.
நாம் திமுக-வுடன் கூட்டணி அமைத்தால் ஒரு இடம்கூட ஜெயிக்க முடியாது என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 205 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க போகிறது. அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏ-க்களுக்கு குறையாமல் நாம் சட்டசபைக்குள் பிரவேசிக்கலாம். கட்சி புத்துயிர் பெறும். இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும், மீண்டும் நம் கதவை தட்டாது. இந்த வாய்ப்பை விட்டு விட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அதிமுக-வினர் ஆணித்தரமாக சொன்னபோது, திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்காக எனது குறிப்புகளை பெட்டியிலே வைத்து, மலைக்கோட்டை ரயிலுக்கு பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, தலைமை நிர்வாகிகள் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.

அப்போதுதான் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது. கலை உலகிலே பிரமாண்டமான திரைப்படங்கள் தந்த பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி போல ஆகிவிட்டேன். என் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று நான் சொன்னேன். இன்று இமயமாய் நிமிர வேண்டிய நான், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் படு பாதாளத்திற்கு போனேன். மீண்டும் அப்படி நான் ஆளாகி விடக்கூடாது என்பதற்காக திமுக-வுடன் கூட்டணியுடன் வலுவான தோழமை சக்தியாக உள்ளேன்" என்றார்.



















