மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - ப...
நாளை சூரிய கிரகணம் - கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதா? - மருத்துவர் விளக்கம்!
கிரகண நேரத்தில் வெளியே செல்லக் கூடாது, சாப்பிடக் கூடாது, தண்ணீர் குடிக்கக் கூடாது என்று காலம் காலமாக பல அறிவுரைகளைக் கேட்டு வருகிறோம். இதில் அதிகமான எச்சரிக்கைகள் சொல்லப்படுவது கர்ப்பிணிகளுக்குத்தான்.
ஆம்... கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் கண்டிப்பாக வெளியே போகக் கூடாது. அப்படி சென்றால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையும் உண்டு.
இது உண்மை தானா... இந்தப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டுமா என்கிற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார் திருப்பத்தூரை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

"கிரகணம் என்பது அன்றாட நிகழ்வுகளிலிருந்து மாறுபட்ட ஒரு வானியல் நிகழ்வு. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழலில் சில மாற்றங்கள் ஏற்படுவதும், குறிப்பாக கதிர்வீச்சு அலைகள், வெப்பநிலை மற்றும் வெளிச்சத்தில் மாற்றங்கள் நிகழ்வதும் நடக்கும்.
ஆன்மிகமாகவும் தத்துவ ரீதியாகவும் அந்த நாளில் ஒரு மாற்றம் இருப்பதாக கருதி, நம் முன்னோர்கள் சில கட்டுப்பாடுகளைக் கூறியிருக்கலாம்.
இவை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உறுதியான அறிவியல் ஆய்வுகள் இல்லாவிட்டாலும், முழுமையாக பாதிப்பு இல்லை என்றும் கூற முடியாது.
ஏன் உறுதியான ஆய்வுகள் இல்லை என்றால், கர்ப்பிணிகளை வைத்து இத்தகைய ஆய்வுகளைச் செய்வது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.
இதனால், கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால் கருக்கலைப்பு ஏற்படும் அல்லது குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துகளுக்கு எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. அவர்கள் வெளியே செல்வதால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது.

இருந்தாலும் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது!
கிரகண காலத்தில் அதிக வெப்பநிலை, வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் இருக்கலாம். அதனால், அந்த நேரத்தில், கர்ப்பிணிகள் அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இன்னொரு பக்கம், இதற்கு மனநிலை காரணமும் உள்ளது. உதாரணத்திற்கு, கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால், 'இந்த நேரத்துல ஏன் வெளிய வந்த... குழந்தைக்கு எதாவது ஆச்சுனா என்ன பண்ணுவ?' மாதிரியான பேச்சுகள் எழும்.
இது அந்தப் பெண்ணுக்கு மன அழுத்தம், பயம், பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இது அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும்.
சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று, 'அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது'. அதாவது வெளி உலகில் ஏற்படும் மாற்றங்கள் மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாகும்.
கிரகண நேரத்தில் தண்ணீர்கூட குடிக்கக் கூடாதா?
அடுத்ததாக, கிரகண காலத்தில் தண்ணீர் குடிப்பதாலோ, உணவு சாப்பிடுவதாலோ கர்ப்பிணிகளுக்கும், மற்றவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான மருத்துவ அல்லது அறிவியல் ஆய்வு சான்றுகள் இல்லை.
மொத்தத்தில், கிரகண காலத்தில் ஏற்படும் மாற்றங்களை பயத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது. அப்போது உடல்நலம் மற்றும் மன அமைதியை கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியம்".
குறிப்பு: நாளை (பிப்ரவரி 16) கிரகண நாள். அது குறித்த கட்டுரையைப் படிக்க இங்கே க் \ளிக் செய்யவும்.



















