Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?
"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" - K.K.S.S.R. ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும்" என்றார்.
மேலும், "வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர்.
மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார்.













