விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக...
Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?
வங்கதேச தந்தையின் மகள்
ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன்.
பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப் பிரிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.

அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினர் ராணுவ சதியால் கொலை செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் ஷேக் ஹசீனாவும், அவருடைய தங்கையும் வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொண்டிருந்ததால் உயிர்தப்பினர்.
பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனா
தந்தையும், குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1981-ம் ஆண்டு வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருந்தார். அதன் பிறகு, அவர் சொந்த நாட்டுக்கு சென்று அங்கு, தனது தந்தையின் கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். 1996 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக பதவியேற்றார்.
அவரது ஆட்சியில் ஏற்பட்ட பல திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஷேக் ஹசீனா, ஒரு கட்டத்தில் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வெடித்த கலவரம்
அந்தவகையில் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பெரிதாகி, பெரும் வன்முறையாக மாறியது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததோடு 1,500க்கும் மேலானோர் இந்த வன்முறையால் உயிரிழந்தனர்.
போராட்டம் எல்லை மீறி வன்முறையானதால் ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறினார். வங்கதேசத்தைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவில் தான் தஞ்சம் புகுந்தார். இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு வழிநடத்தி வருகிறது.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக, வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

`நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன்’
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சமூக வலைதளப்பக்கங்களில் ஷேக் ஹசீனாவின் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது ``எனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. வங்கதேசத்தின் அவாமி கட்சியை அழிக்க முயற்சிக்கிறார் யூனுஸ். அது அவ்வளவு எளிதல்ல. அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக். அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது.
எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். ஊழல்வாதியும், அடக்குமுறையாளரும், கொலைகாரருமான யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். நான் உயிரோடு உள்ளேன், உயிரோடு இருப்பேன். மக்களின் நலனுக்காக மீண்டும் பாடுபடுவேன். வங்கதேச மண்ணில் நீதியை நிலைநாட்டச் செய்வேன்.
இது இறைவன் கொடுத்த உயிர்
கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றோம். இருப்பினும் தொடர்ந்து புது புது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். அமைதியற்ற பதற்றம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.
நான் மனித உரிமைகளை மீறியவளா? என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் எனது நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
என் பெற்றோரையும், என் உடன்பிறப்புகளையும் இழந்துவிட்டேன். என் வீட்டையும் எரித்துவிட்டார்கள். இது இறைவன் கொடுத்த உயிர். அதை அவனே எடுத்துக்கொள்வான். எனக்கு இன்னும் மக்களின் தீர்ப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மரண தண்டனை
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT-BD) மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று (நவ.17) தீர்ப்பு வழங்கியது. அதாவது “ முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர்.
அவர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார். என்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாகத் தெரிகிறது. ஆதாரமாக வழங்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் AI-ஆல் மாற்றப்படவோ, உருவாக்கப்படவோ இல்லை. எனவே, ஷேக் ஹசீனா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதே நேரம், தூண்டுதல், கொலை செய்ய உத்தரவிடுதல், அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஷேக் ஹசீனா குற்றவாளி என்பது உறுதியாகிறது. எனவே அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்படுகிறது" என வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசினாவிற்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறது.

ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கை
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஷேக் ஹசீனா, “ கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்கவோ சரியான தீர்ப்பு வழங்கும் நோக்கத்தையோ இந்த தீர்ப்பாயம் கொண்டிருக்கவில்லை. மாறாக எங்களின் அவாமி லீக் கட்சியை பலிகடா ஆக்குவதையும் யூனுஸ் அரசின் தோல்விகளை உலகத்தின் கவனத்தில் இருந்து மறைப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவரது தலைமையில் வங்கதேசத்தில் நீதித்துறை சீர்குலைந்துள்ளது.
வங்கதேசத்தில் நடந்த வன்முறை அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அவரது ஆட்சியில் சிறைக்கைதிகள், தீவிரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாறாக, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர்.
எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒருதலைப்பட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு எதிரான, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழங்கப்படவில்லை. மாறாக மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு அரசின் தலைமையிலான மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. அவை ஒருதலைபட்சமானவை” என்று கூறியிருக்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம்
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம். நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வங்காளதேச மக்களின் சிறப்பான நலன்களுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. அந்நாட்டில் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை நிலவ விரும்புகிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை கொடுத்ததால் வங்க தேசத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் வங்கதேசம் போராட்ட களமாகியிருக்கிறது.














