இருமல் மருந்துக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
குழந்தைகள் சங்கமம்: மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்திய கலை விழா
குழந்தைகள் மத்தியில் கலை, இலக்கிய வடிவங்களைக் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலொன்றுதான் 'குழந்தைகள் சங்கமம்' நிகழ்ச்சி. பள்ளிக்கல்வித்துறை அரசு மாதிரிப் பள்ளிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த 'குழந்தைகள் சங்கமம்' நிகழ்ச்சி எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
காலை தொடங்கி மாலை வரை மாணவர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் 'எது நல்ல சினிமா?' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை ரஃபீக் இஸ்மாயில் ஒருங்கிணைத்தார்.
'சமூக மாற்றத்திற்கான கருவியாகக் கலையைப் பயன்படுத்துவது எப்படி?' என்ற தலைப்பிலான கலந்துரையாடலை முகிலன் ஒருங்கிணைத்தார். இதில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தொடர்ந்து, பாவனை நாடகம், ஒரங்க நாடகம், கானா பாடல், பறை, பரதநாட்டியம், பொம்மலாட்டம், நிழல் பொம்மலாட்டம், நாட்டுப்புற நடனம், வீதி நாடகம், விழிப்புணர்வு பாடல்கள் என்று மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
பகுத்தறிவு, கல்வியின் முக்கியத்துவம், போரின் விளைவுகள், பெண்களின் வாழ்க்கை, ஈழத் தமிழர்களின் நிலை போன்ற பல்வேறு அம்சங்களை மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் கண்முன் நிறுத்தின.
சிறப்பு குழந்தைகளுக்கான அமைப்பான Special Children Association Trust-ஐ சேர்ந்த ஜெயந்தி, மாணவர்களின் முயற்சியை பாராட்டியதுடன், சிறப்பு குழந்தைகள் மற்றும் அவர்களின் இயல்புகள் குறித்து பேசிப் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
'குழந்தைகள் சங்கமம்' என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முத்தமிழ் கலைவிழி, மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
“கலை மட்டும் இல்லாமல் கருவிகளையும் மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக, கலை ஆளுமைகளுக்கு ‘சிறப்பு கலை வழிகாட்டி விருதுகள்’ மாணவர்களின் கைகளாலேயே வழங்கப்பட்டன.



முனைவர் இரா. காலீஸ்வரனுக்கு சிறந்த கலை இலக்கிய செயல்பாட்டாளர் விருது, ரேவதிக்கு சிறந்த அரங்க செயல்பாட்டாளர் விருது, கலைமாமணி கலைவாணனுக்கு சிறந்த பொம்மலாட்டக் கலைஞர் விருது, சந்தன மேரிக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது, லெனின் பாரதிக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருது, மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது, ரூபனுக்கு சிறந்த தெருக்கூத்து கலைஞர் விருது, சுகன்யாவுக்கு சிறந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் விருது, அதிஷாவுக்கு சிறந்த எழுத்தாளர், ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டது.
மாணவர்களின் கரங்களால் விருது பெற்ற ஆளுமைகள் நெகிழ்வோடு அதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்கள்.
முழுக்க முழுக்க குழந்தைகளை முன்னிறுத்தி அவர்களைக் கொண்டாடி, மனமகிழ்வோடு நிறைவுற்றது குழந்தைகள் சங்கமம் விழா!

















