ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
வாணியம்பாடி: பள்ளி வேனில் சிக்கி குழந்தை பலி; தாயின் கண்ணெதிரே நடந்த சோகம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. பெண் பிள்ளைகள் இருவரும் சத்திரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயில்கிறார்கள். பள்ளி வேன் தினமும் வீட்டுக்கே வந்து அவர்களை அழைத்துச் செல்லும்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பெண் பிள்ளைகள் இருவரையும் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்ப முயன்றார் தாய் திலகவதி.

அப்போது, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை திடீரென பள்ளி வேனின் பின்புறமாக வந்திருக்கிறது. இதை யாரும் கவனிக்கவில்லை.
வேனை ரிவர்ஸ் எடுத்து திருப்பியபோது, சக்கரம் ஏறி இறங்கியதில் குழந்தை உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்து தாயும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இது பற்றி தகவலறிந்ததும், காவலூர் போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண்ணெதிரே நேர்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
















