நெல்லை பாய்ஸ்: ``நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" - திருமாவளவன் ...
தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவறு நடந்தது எங்கே?
தூத்துக்குடி, கிருபாநகரைச் சேர்ந்தவர் ராகுல். இவர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் ராகுலை கடந்த மார்ச் 9-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர், பேரூரணியில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ராகுல் மீது வேறு சில வழக்குகள் இருந்ததால் கடந்த மார்ச் 28-ல் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது.

இந்த நிலையில், சிறையில் இருந்த ராகுல், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த நவம்பர் 15-ம் தேதி ராகுலுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பேரூரணி மாவட்ட சிறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைப்பதற்குள் பேரூரணி சிறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் போலீஸார் விடுவித்தனர்.
இதற்கிடையே மறுநாளான கடந்த 16-ம் தேதி, ஆவணங்கள் கையில் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பேரூரணி சிறை அதிகாரிகள், பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போதுதான், ராகுலுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக ராகுலின் வீட்டிற்குச் சென்று கோப்பில் கையெழுத்து போட வேண்டியுள்ளதாகக் கூறி, அவரை மறுபடியும் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்துறை அதிகாரிகளிடம் ராகுல் தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தொலைபேசியில் பேசிய அதிகாரி யார்? தொலைபேசி அழைப்பு உண்மைதானா?தவறு செய்த அதிகாரி யார்? என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உதவி ஜெயிலர் ராதாகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

















