கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
`காய்கறி வியாபாரம் டு சர்வதேச கிரிக்கெட் வீரர்' - இந்தியா அணியில் சாதித்த `அசுதோஷ் மஹிதா'
இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் புதிதாக இடம் பிடித்தவர் அசுதோஷ் மஹிதா.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மஹிதா, இந்திய ஏ அணியில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இவரது தந்தை திரைப்பட நடன இயக்குனர் ஆவார். கொரோனா காலத்தில் மஹிதாவின் தந்தைக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார்.
மஹிதாவும் தனது தந்தைக்கு துணையாக, அவர் வியாபாரம் செய்த காய்கறிகளை விற்று உதவி செய்தார். ஆனாலும், கிரிக்கெட் வீரராகவேண்டும் என்ற கனவு மஹிதாவுக்குள் தொடர்ந்து இருந்தது.

இது குறித்து மஹிதா கூறுகையில், "கொரோனா காலத்தில் எனது தந்தைக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் பிழைப்புக்காக காய்கறி வியாபாரம் செய்தார். நானும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே அவருக்கு துணையாக காய்கறி வியாபாரம் செய்தேன்.
அந்த நெருக்கடியான நேரத்திலும் எனது கிரிக்கெட் கனவை நான் கைவிடவில்லை. கஷ்டமான நேரத்திலும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த எனது தந்தை என்னை ஊக்கப்படுத்தினார். படிப்படியாக எங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
எனக்கு 9 வயதாக இருந்தபோது, எனது தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினேன். அப்போதே அவர் என்னை ஊக்கப்படுத்தினார். இதனால் என்னை கிரிக்கெட் பயிற்சிக்காக ஜிம்கானாவில் சேர்த்தார்.
ஆரம்பத்திலேயே நான் வேகப்பந்து வீச்சை தேர்வு செய்தேன். அதன் பிறகு அதனிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கிளப்புகளில் விளையாடினேன்.

2022ஆம் ஆண்டு பரோடா அணியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டேன். 2024ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி 5 போட்டிகளில் 16 விக்கெட் எடுத்தேன்.
இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன். சர்வதேச போட்டி எனக்கு எந்த வித பதட்டத்தையும் ஏற்படுத்தவில்லை. அணி வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் என்னிடம் இருந்தது'' என்றார்.
மஹிதாவின் பயிற்சியாளர் திக்விஜய் கூறுகையில், “கடந்த ஆண்டு எச்.டி. ஜவேரி லீக்கில் ரிலையன்ஸ் அணிக்கு எதிராக அவர் வீசிய ஏழு ஓவர் பந்துவீச்சு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த ஓவர்கள் விளையாட்டின் போக்கையே மாற்றிவிட்டது.
மஹிதா தனது பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மோதிபாவ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வேகமான பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களின் இதயங்களில் பயத்தை ஏற்படுத்தக்கூடியவர்'' என்றார்.
















