5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!
`அறிகுறியே இல்லை, பரிசோதனையில்தான் தெரிந்தது'- புற்றுநோயிலிருந்து மீண்டதை குறித்து நடிகை மஹிமாசெளதரி
Cgபாலிவுட் நடிகை மஹிமா செளதரி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இளம் பெண்களின் மாநாட்டில் கலந்து கொண்டு மஹிதா செளதரி தான் எப்படி புற்றுநோயிலிருந்து மீண்டேன் என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் மாநாட்டில் பேசுகையில்,''எனக்கு மார்பக புற்றுநோய்க்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கும் சென்றதில்லை. வழக்கமாக நான் செல்லக்கூடிய வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன்.
எனக்கு மார்பக புற்றுநோய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. புற்றுநோயை உங்களால் ஆரம்பத்தில் கண்டறிய முடியாமல் இருக்கலாம். சோதனைகள் மூலமே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். எனவே நீங்கள் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு செல்லுங்கள்.

அதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதற்கு சிகிச்சையளிக்க முடியும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் மார்பக புற்றுநோய் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டில் புற்றுநோய் சிகிச்சையில் பல மாற்றங்கள் வந்துள்ளது. பல ஜெனிரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.
நான் புற்றுநோய் பாதித்து இருந்தபோது அதிகமான நேரம் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் அனுபவத்தை கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்'' என்றார். 2022ம் ஆண்டு மஹிமா செளதரிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டுள்ள மஹிமா செளதரி சிகிச்சையின் போது மொட்டை போட்டுக்கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதோடு அப்பதிவில், நடிகர் அனுபம் கெர்தான் என்னிடம் சிகிச்சையின் போது தலையில் மொட்டை போட்டுக்கொள்ளும்படி கூறி ஊக்கப்படுத்தினார். மொட்டையும் ஒரு அழகுதான்.
ஆனால் சிலர் விக் (செயற்கை முடி)களை விரும்பலாம். அதை அணியுங்கள். இயற்கையான தோற்றத்தை கொடுக்கும். சமீபத்தில் என்னைச் சந்தித்த பலர் நான் விக் அணிந்திருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை என்று சொன்னார்கள்''என்றும் தெரிவித்தார்.
மஹிமா தொழிலதிபர் பாபி முகர்ஜியை மார்ச் 19, 2006 அன்று திருமணம் செய்தார். 2007ம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தார். அதன் பிறகு அவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்போது மஹிமா செளதரி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
















