கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
SIR: ``இவ்வளவு நாள் கோமாவில் இருந்ததா தேர்தல் ஆணையம்" - சீமானின் அடுக்கடுக்கான கேள்விகள்!
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே தி.மு.க, த.வெ.க சார்பில் SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைப்போல, நேற்று (நவம்பர் 17) நாம் தமிழர் கட்சி சார்பாக SIR-ஐ உடனடியாக நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையிலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டுவந்து, இவ்வளவு வேகமாக செய்துமுடிக்கத் துடிக்கிறது என்றக் கேள்வி எழுகிறது. போலி வாக்காளர்கள், இறந்தவர்களை நீக்குவது போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.
சரி... ஒருவர் இரு இடத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றால் அது தவறுதான். ஆனால், இந்தப் போலி வாக்காளர் எப்படி வந்தார்? அவர்களைப் பதிவு செய்தது யார்? இறந்தோரின் பெயரை நீக்குவது என்றால், இறப்புச் சான்றிதழைப் பார்த்து அப்போதே அந்தப் பெயரை நீக்கியிருக்க வேண்டுமே.
இதையெல்லாம் அப்போதே செய்யாமல், திடீரென போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வந்து குதிக்கிறீர்களே... போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என எப்போது கண்டுபிடித்தீர்கள் இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீர்களா? நிர்மலா சீத்தாராமன் கொளத்தூரில் 8,000 போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
அப்படியானால் அந்த வெற்றி செல்லாது என அறிவித்தீர்களா? இந்த ஆட்சியே முடியப்போகிறதே... அவர் முதல்வராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போலி வாக்காளர்களா? வேறு எங்கும் போலி வாக்காளர்கள் இல்லையா?

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? வாக்குக்கு காசு கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்ததா? இதையெல்லாம் செய்யாது... ஆனால், எங்களின் வாக்கைச் சரியாக எண்ணிச் சொல்லும் என்பதைமட்டும் நாம் நம்ப வேண்டும்.
போலி வாக்காளர்களை அடையாளம் காணும் பணிகளையும், இறந்தவர்களை நீக்கும் வேலையையும் மட்டும்தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாக்காளர் சோதனை எதற்காக நடத்துகிறீர்கள்? 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரே மாதத்தில் எப்படி எல்லாம் சரிபார்த்து கொடுப்பீர்கள்?
அந்தப் படிவத்தில் கூட, உங்கள் பிறப்புச் சான்றிதழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் தகுதியில்லாத அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறதா? நவம்பர் 4 தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் இந்த SIR பணி முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சரி, இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஊழியர்கள் எல்லோரும் யார்? அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சிகளில் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள். அவர்கள் எங்களின் பாமர மக்களுக்கு அந்தப் படிவத்தைக் கொடுத்து புரியவைத்து எழுதி வாங்கிவிடுவார்களா... ஜனநாயக நாட்டில் வாக்குரிமைதான் பெரும் அதிகாரம். அதற்கு இந்தளவுதான் மரியாதை கொடுக்கிறது தேர்தல் ஆணையம்." எனப் பேசினார்.
















