தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!' - தவ...
வைகோ: ``ரூ.250 கோடி சொத்தா? என் நேர்மை உலகறிந்தது'' - மல்லை சத்யா குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், நேற்று (நவம்பர் 17) காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்துக்கு ரூ.250 கோடி சொத்து இருப்பதாக பேசியுள்ளார்.

வைகோவால் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவம்பர் 20-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், வைகோ குடும்பத்துக்கு குறிப்பாக அவரது மகன் துரை வைகோவுக்கு இருக்கும் பல்வேறு சொத்துகள் வருமானங்கள் பற்றி பேசிய மல்லை சத்யா, "ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுகிறார். அதே போல் ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ," என்றும் கூறியிருந்தார்.
மல்லை சத்யாவின் கருத்துக்களுக்கு அன்றைய தினமே பதிலளித்த வைகோ, அவரை ஆலகால நஞ்சை கக்கும் பாம்பு என விமர்சித்துள்ளார்.

வைகோ பேசியதாவது, "ஜமக்காலத்தில் வடிகட்டிய அப்பட்டமான அபாண்டமான பொய்கள். கோயபெல்ஸ் கூட இந்த பொய்களுக்கு முன்னால் கடுகாக போய்விடுவான். என் நேர்மை உலகறிந்தது, என் நாணயம் ஞாலமறிந்தது, என் ஜென்ம எதிரிகள் கூட இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் நேர்மை என்கிற கவசம்தான், வைகோவினுடைய நாணயம் தான் அவனை அரசியல் உலகத்திலே பாதுகாத்து வருகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவார்கள்." எனப் பேசியுள்ளார்.
கோயபெல்ஸ்?
பொய்க்கு எடுத்துக்காட்டாக வைகோ கூறிய கோயபெல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சார அமைச்சராக இருந்தவர். ஹிட்லரின் கூட்டாளியான இவர் வரலாற்று ரீதியாக பொய்களுக்காக அறியப்படுகிறார். இவரது பொய்கள் மூலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு ஜெர்மனி முழுவதும் பரவியது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்று வருவதாகவும் ஹிட்லரிடம் ரகசிய ஆயுதங்கள் இருப்பதாகவும் மக்களை நம்பவைத்திருந்தார். வானொலி, செய்தித்தாள், திரைப்படம், போஸ்டர்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லா ஊடகங்களையும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தி நாஜிக்களின் பொய்களைப் பரப்பினார். "பெரிய பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்" என்ற வாசகமே இவர் சொன்னதுதான் என்ற கருத்தும் உண்டு.


















