விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்ற...
கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!
ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில்
நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத் தெம்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க இறைவழிபாடு நிச்சயம் தேவை.
அப்படி ஓர் ஆலயம் ஒன்றை தரிசனம் செய்வோம். எப்படிப்பட்ட ஜுரமாக இருந்தாலும் இந்த ஆலய விநாயகரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஜுரம் குறையும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதக் கோயில் குறித்துப் பார்ப்போம்.
கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில். இந்த ஆலயத்தின் ஈசன் நாக தோஷங்களை நீக்கி அருள்பவர். இங்கு நடைபெறும் ராகு கால வழிபாடுகள் விசேஷமானவை. அந்த ஆலயத்தில் அருள்பாலிப்பவர்தான் ஜுரஹர விநாயகர்.

ஜுரஹர விநாயகர்
சுமார் 1,500 வருடங்கள் பழைமையானது இந்தக் கோயில். சூரியபகவான் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்து சுவாமியைத் தன் ஒளிக்கரங்களால் தழுவி சூரியபகவான் வழிபடும் காட்சி அற்புதமானது.
சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரஹர விநாயகர்.
சூரியன் என்றாலே வெப்பம். அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால், அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார்.
கடுமையான காய்ச்சல் கண்டவர்கள் தங்கள் மனதிலேயே இந்த ஜுரஹர விநாயகரை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். முடிந்தவர்கள் அல்லது காய்ச்சல் கண்டவர்களின் உறவினர்கள் இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும்.
அப்படி விசேஷ பிரார்த்தனையின் பேரில் அபிஷேகம் செய்தால் அப்போது மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படும். இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு.
அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.
அப்படி வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டவர்களின் காய்ச்சலை இந்த விநாயகப்பெருமான் உடனே நீக்கிவிடுவார் என்கிறார்கள். இதற்கு சாட்சி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே.

பிரளயகால ருத்ரர்
இங்கே பிரளயகால ருத்ரர் சந்நிதி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை.
எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும்.
இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள்.
மேலும் இந்தத் தல மூலவரான பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியில் ஆதிசேஷனே வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம்.
சர்ப்பதோஷம் நீக்கும் தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு கேது தோஷங்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவற்றில் இருந்த தடைகளும் உடனடியாக விலகுகின்றன என்கிறார்கள்.
இங்கே ஆயில்ய நட்சத்திர தினத்தில் வந்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்துக்கு ஒருமுறை வாருங்கள். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற அந்த நாகேஸ்வரரையும் வணங்கி பூரண ஆரோக்கியமும் மன அமைதியும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும்.

















