சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ர...
விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!
சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல, அவை ஆவணப் பெட்டகங்கள்.
தங்கள் ஆட்சிக்காலத்தில் எவை எப்படி நிகழ்ந்தன ஏன் நிகழ்ந்தன என்பன குறித்த தகவல்கள் கல்வெட்டுகளாகப் பதியவைத்தனர். இதன்மூலம் இவை காலத்தில் நிலைத்து நிற்கும் வரலாற்றுப் பேரேடுகளாகவும் அமைந்துள்ளன. அப்படி ஓர் ஆலயம்தான் எசாலம் என்ற ஊரில் நிலைத்துநிற்கிறது.
திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊரைக் கடந்து சென்றால் எசாலம் செல்லலாம். இங்குதான் அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இந்த ஈசனை விராமீஸ்வரமுடைய மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பல்வேறு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. குறிப்பாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை ஏன் அமைத்தான் என்பது குறித்த வரலாற்றுத் தகவலும் அடக்கம்.
மேலும் முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் மூலம், இந்த மன்னர்களின் காலத்தில் இங்கு வெகுசிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்த ஊர், ஸ்ரீராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமநாதேஸ்வரா்
இந்தத் திருக்கோயிலை அமைத்தவர் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதா் ஆவார். ராஜேந்திரன் தனது 15-ம் ஆட்சியாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் நன்னாடு, ஏா்ப்பாக்க மான விக்கிரசோழநல்லூா் ஆகிய ஊர்களை இந்தக் கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தி தெரியவருகிறது.
இக்கோயிலின் கருவறை விமானம் முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தள விமானமாக வட்ட வடிவில் திகழும் விமானத்தின் கற்சிற்பங்கள் மிக அழகு. விமானத்தின் மேல்பாகம் இதழ் விரித்த தாமரை போல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் தூங்கா விளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் லிங்க மூர்த்தியான ஸ்ரீராமநாதேஸ்வரா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்மச்சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன.
அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம்
இந்த சுவாமிக்குப் பாலும் எண்ணெயும் கொண்டு அபிஷேகம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அரசியலில் வெற்றி, பதவி யோகம் வேண்டுபவர்கள் மேலும் உயர் பதவிகள் அடைய விரும்புபவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் நிச்சயம் வேண்டும் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீதிரிபுரசுந்தரி
கோயில் மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவாரச் சாளரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் அன்று சூரியக் கதிர்கள் இந்தச் சாளரத்தின் வழியே உள்நுழைந்து ஸ்வாமியின் மீது விழுந்து வணங்கும்படி நிர்மாணித்துள்ளார்கள். சாளரத்தின் மேலேயுள்ள மூன்று துவாரங்களுக்கு அருகில் கூப்பிய கரத்துடன் சிற்பம் ஒன்று திகழ்கிறது. இக்கோயிலை நிர்மாணித்த சர்வசிவ பண்டிதராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சுவாமி சந்நிதி பலிபீடமும் சிற்ப நுட்பத்துடன் திகழ்வது சிறப்பு.
மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்பிகையைக் கேதாரி அம்மன் என்றும் வணங்குகின்றனா். சதுர்புஜங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியும் அருள்கிறாள் அம்பிகை. இவளின் விழிகளில் தவழும் அன்பும் கருணையும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.
சுமாா் 1,000 ஆண்டுகள் புராதனப் பெருமையுடன் திகழும் இக்கோயிலுக்கு பாண்டியர், விஜயநகர மன்னர்கள், செஞ்சி நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் ஆகியோர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்புறத்தில் சாலையில் ஒரு சிலை காணப்படுகிறது. உருவத்தில் ஐயனாரைப் போன்று திகழும் அந்த மூர்த்தியை `கல்வராயன் சிலை’ என்கிறார்கள் மக்கள்.
ஒருமுறை எசாலம் ஊரிலுள்ள கால்நடைகளை இனம் காண இயலாத நோய் தாக்கியதாம். எவ்வித மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில், ஊரில் ஒருவருக்கு அருள் வந்தது. `கோயிலுக்கு வெளியிலுள்ள சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அபிஷேக நீரைக் கால்நடைகளுக்கு அருந்தக் கொடுத்தால் நோய் நீங்கும்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னார்.
மக்களும் அப்படியே செய்து அபிஷேக தீர்த்தத்தைக் கால்நடைகளுக்கு அளிக்க, நோய் குணமானது. அதுமுதல் இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து கல்வராயனை அபிஷேகித்துத் தீர்த்தம் கொண்டு சென்று கால்நடைகளுக்குத் தருவது வழக்கமாகிவிட்டது.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை எசாலம் சென்று அருள்மிகு திரிபுரசுந்தரியையும் அருள்மிகு ராமநாதேஸ்வரரையும் வணங்கி வரம்பெற்று வாருங்கள். மேலும் சோழர்கால வரலாற்றுச் சிறப்புகளையும் தொல்பொருள் சிறப்புகளையும் அறியலாம்.















