சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ர...
Deva: ``இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' - உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்பாளர் தேவா!
சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.
கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது' என இளையராஜா வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது முதல் தொடர்ந்து இந்தக் காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவாவிடம், `நீங்கள் இசையமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் தேவா, ``காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. ஆனால், நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.
90-களில் நான் இசையமைத்த நிறையப் பாடல்கள் இப்போது வைரலாகின்றன. 1992-ல் இசையமைத்த கரு கரு கருப்பாயி பாடல் மீண்டும் ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டு வைரலானது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
சமீபத்தில் ஒரு பொருள் வாங்குவதற்காக மாலுக்குச் சென்றிருந்தேன். அப்போது சிறுவன் ஒருவன் அவனுடைய அப்பாவுடன் வந்திருந்தான்.

அப்போது அந்த தந்தை என்னைக் காண்பித்து, ``உனக்கு பிடிச்ச கரு கரு கருப்பாயி பாட்டுக்கு மியூசிக் போட்டது இவங்கதான்' னு என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த சிறுவன், அப்படியானு "சூப்பர் அங்கிள்" எனக் கை கொடுத்தான். 'நான் அங்கிள் இல்லடா தாத்தா' எனக் கூறி அவனிடம் பேசினேன்.
நான் எப்போதோ இசையமைத்த ஒரு பாடல் இந்த தலைமுறைக்கும் சென்று சேர்கிறது. அதுவும் நான்தான் இசையமைப்பாளர் என்பதும் தெரிகிறது. இந்த திருப்தி போதும்." என்றார்.
















