கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album
Kaantha: "என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்" - 'காந்தா' நினைவுகள் பகிர்கிறார் நாகேஷின் பேரன் பிஜேஷ்
துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சினிமாக் கதையில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் ஐயாவுக்கு (சமுத்திரக்கனி) உதவி இயக்குநராக பாபு கேரக்டரில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார்.
விரிந்த கண்கள், ஆக்ஷன் - கட் சொன்னதும் துறுதுறுவென பிடிக்கும் ஓட்டம் என பாபு கேரக்டருக்கு கணகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் பிஜேஷ்.
'தாத்தாவை ஞாபகப்படுத்திட்டீங்க தம்பி!' என பாராட்டுகளைப் பெற்று வரும் பிஜேஷுக்கு வாழ்த்துகள் சொல்லி நாமும் பேசினோம்.
'காந்தா' பட அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்த நடிகர் பிஜேஷ் நாகேஷ், "எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்கணும்ங்கிறதுதான் ஒவ்வொரு நடிகனுடைய விருப்பமாக இருக்கும். அப்படியான எண்ணத்தோடுதான் நானும் 'காந்தா' படத்துக்குள்ள வந்தேன்.
உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கதாபாத்திரத்திற்கு நானாகதான் போனேன். ஆடிஷன்கள் பல செய்திட்டுதான் படத்துக்குள்ள வந்தேன்.
நான் நடிச்சிருக்கிற பாபு கதாபாத்திரத்துல நாகேஷ் தாத்தாவுடைய சாயல் தெரியும். அதனால என்னை நடிக்க வைக்கலாம்னு யாரும் திட்டமிடலங்கிறதுதான் உண்மை.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் என்னுடைய பாபு கதாபாத்திரத்தைப் பற்றி ரொம்ப தெளிவான விஷயங்களை எனக்கு எடுத்துச் சொல்லிட்டார்.

என்னுடைய கதாபாத்திரத்துல 70 சதவிகிதம் பாபு தெரியணும். 30 சதவிகிதம்தான் அதுல நாகேஷ் சார் தெரியணும்னு சொல்லிட்டார்.
அவர் சொன்ன விஷயங்களை நான் அப்படியே பாபு கேரக்டருக்கு செய்திருக்கேன்னு சொல்லலாம்.
'காந்தா' படத்துக்கு ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப முக்கியமானதுன்னு துல்கர் அண்ணாவும், ராணா அண்ணாவும் விரும்பினாங்க. பிறகு எனக்கே இந்த கேரக்டர் வந்திடுச்சு.
இந்தப் படத்துக்குள்ள நான் வந்தப்போ இரண்டு பொறுப்புகள் என் கண் முன் இருந்ததுனு சொல்லலாம். முதலாவதாக, தாத்தா பெயரைக் காப்பாற்றணும்னு எண்ணம் எனக்குள்ள இருந்தது.
ஏன்னா, பெரிய லெகசி இருக்கு. அவருடைய பெயரை எந்தச் சூழலிலும் கெடுத்திடக்கூடாதுன்னு நான் ரொம்ப கவனமாக இருந்தேன்.
மற்றொரு பக்கம், பிஜேஷ்ங்கிற பெயரையும் மக்களுக்கு பரிச்சயமாக்கணும்னு எண்ணினேன்.
நான் இப்போதான் சில படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். சில விமர்சனங்கள்ல என் பெயருக்கு பதிலாக என் தம்பியுடைய பெயரைப் போட்டிருக்காங்க.
அது அவங்க தப்பு கிடையாது. என்னை பரிச்சயப்படுத்திக்கிற மாதிரியான விஷயங்களை நான் செய்தாகணும். " என்றவர், "இந்தப் படத்துக்கு நான் கமிட்டான பிறகு தாத்தாவுடைய படங்கள் நான் எதுவும் பார்க்கல. வேணும்னே நான் தாத்தா படங்கள் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.

இந்தப் படத்துக்கான கேரக்டருக்கு தயாராகிற முறைக்கு நான் தாத்தா படங்களைப் பார்த்தால் அவரைப்போல நடிக்கத் தொடங்கிடுவேன். என்னுடைய பாபு கதாபாத்திரத்திற்குள்ள தாத்தா வந்துவிடுவார்.
அவருடைய விஷயங்களை நான் காபி பண்ணிடுவேன். அதனாலதான், இது போன்ற முடிவை நான் எடுத்தேன். தாத்தா இல்லாமல் நான் இன்னைக்கு இங்க இல்ல. அதுதான் உண்மை.
சொல்லப்போனால், நான் நாகேஷ் தாத்தாவுடைய பேரன்னு தெரியாமல் பலரும் என் நடிப்பைப் பார்த்துட்டு அவங்களாகவே 'இவர் நடிக்கிறது நாகேஷ் மாதிரியே இருக்கு'னு சொல்லியிருக்காங்க.
அந்த சமயத்துல நம்மை யாரும் அடையாளப்படுத்தல, நம்ம நடிப்பைப் பற்றி யாரும் பேசலன்னு கொஞ்சம் வருத்தம் இருக்கும்.
ஆனா, மக்கள் சொல்ற வார்த்தைகள், என் மூலமா தாத்தா உயிரோட இருக்கார்னு மகிழ்ச்சியான உணர்வையும் தரும். படத்தை ராணா அண்ணனுடைய ஸ்டுடியோவுலதான் ஷூட் செய்தோம்.
தாத்தாவும் தெலுங்குல சில முக்கியமான படங்கள் செய்திருக்காரு. அங்க வேலை பார்த்த தெலுங்கு மக்களும் படப்பிடிப்பு சமயத்துல என்னுடைய நடிப்புல தாத்தா சாயல் இருக்குன்னு அடையாளப்படுத்தி பேசினாங்க." என்றார்.

"பாபு கேரக்டருக்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் முதல்ல சில விஷயங்களைச் சொல்லிட்டாரு. நானுமே அந்தக் கேரக்டர்ல சில விஷயங்கள் வொர்க் பண்ணி 'இதை இப்படி பண்ணலாமா? அதை அப்படி பண்ணலாமா'னு அனுமதிக் கேட்பேன்.
அந்தக் கேரக்டருக்கு சரியாகப் பொருந்திப் போகக்கூடிய விஷயங்களுக்கு இயக்குநர் ஓகே சொல்லிட்டாரு.
இந்த பாபு கேரக்டர் சில காமெடிகள் செய்யும் கதாபாத்திரம். ஆனா, முழுமையாக காமெடி மட்டுமே செய்யும் கேரக்டர் கிடையாது. ஐயா, டி.கே. மகாதேவன்கூட தொடர்ந்து பயணிக்ககூடிய கேரக்டர்.
அதற்கேற்ப விஷயங்களைத் திட்டமிட்டோம்." எனத் தொடர்ந்து பேசியவர், "தொடர்ந்து நானும் வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நானாகவே நடிப்பில் முன்னேறிப் போகணும்னு ஆசைப்படுறேன். இப்போ இந்தப் படத்துல எனக்கு பிரேக் கிடைச்சிருக்கு.
இனி வாய்ப்புகள் வரும்னு நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனா, இந்தப் படத்துக்கு முன்பே என்னை நம்பி 'சர்வர் சுந்தரம்' படத்துல பெரியக் கேரக்டர் ஆனந்த் பால்கி சார் கொடுத்தாரு.
அந்தப் படம் இப்போ வரைக்கும் வெளிவரல. ஆனா, வரும்!" என்றவரிடம், "தாத்தா, அப்பாவைத் தவிர்த்து, உங்களுடைய சினிமா வாழ்க்கையில் நீங்கள் ஐயாவாக, ஆசான் இடத்தில் வைத்துப் பார்க்கும் நபர் யார்?'' எனக் கேட்டோம்.

பதில் தந்த பிஜேஷ், "அதாவது தாத்தாவை கமல் சார் ஐயாவாகப் பார்ப்பாரு. நான் கமல் சாரை ஐயாவாகப் பார்க்கிறேங்க!
ஆனா, இன்னைக்கு வரைக்கும் அவரைச் சந்திக்கிறதுக்கு சூழல் அமையல. தள்ளிப் போய்கிட்டே இருக்கு. அவரை நான் இதுவரைக்கும் ஒரு முறைதான் நேர்ல பார்த்திருக்கேன்.
ஆமாங்க, என் தாத்தா இறந்த அன்னைக்குதான் அவரை நான் நேர்ல பார்த்தேன். அன்னைக்கு அவர்கிட்ட பேச முடியாத சூழல். கமல் சார் தமிழ் சினிமாவுக்கு அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கார்னு சொல்லலாம்.
அவர் பண்ணாத விஷயங்களே கிடையாதுங்க! இப்போ 'காந்தா' வந்திருக்கு. இனிமேல்தான் எங்க வீட்டுல இருக்கிற அனைவரும் படம் பார்க்கப் போறாங்க. 'என்கூட பார்க்காதீங்க, தனியாவே போய் படம் பாருங்க'னு சொல்லியிருக்கேன்.
சமுத்திரக்கனி சாருக்கும் தாத்தாவை ரொம்ப பிடிக்கும். எனக்காக நிறைய அட்வைஸ் அவர் சொல்வாரு.
'உன்னுடைய திறமையாலதான் இன்னைக்கு இங்க நீ வந்திருக்க. தாத்தாவுடைய ஆசீர்வாதங்கள் மூலமாக அவர் உனக்காக செய்யணும்னு நினைக்கிற பல விஷயங்கள் நிகழும். நல்லதே வரும். பாருன்னு பேசித் தெம்பூட்டுவாரு. அவர் தாத்தாவைப் பத்தி ஒரு பர்சனலான கதை இருக்கு சொல்றேன்னு படப்பிடிப்பு தளத்துல சொல்லிட்டே இருந்தாரு.

ஆனா, இருவரும் சேர்ந்து ரிலாக்ஸாக அமர்ந்து பேசுறதுக்கு வாய்ப்புகள் அமையல. ஆனா, உங்களுடைய விகடன் நேர்காணல்ல, கனி சார் தாத்தாவைப் பற்றி என்கிட்ட சொல்லணும்னு நினைச்ச கதையைச் சொல்லிட்டாரு.
அதையும் நான் பார்த்து அவர்கிட்ட பேசினேன். துல்கர் அண்ணாவும் பாராட்டுகள் தருவார். படம் முடிச்சதுக்குப் பிறகும் நான் அவர்கிட்ட பேசினேன்.
'நம்முடைய லெகசிக்கு நியாயம் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை'னு அவர் சொன்னாரு. அது எப்போதும் என் நினைவுல இருக்கும்." நம்பிக்கையுடன் பேசினார் பிஜேஷ். வாழ்த்துகள் ப்ரோ!







.jpg)











