"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' ...
Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ - `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது.
விஜய் - சூர்யா காம்போ, ஆக்ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ வைக்கும் ப்ரண்ட்ஸ் செண்டிமெண்ட் என கம்ப்ளீட் கமர்சியல் சினிமாவான 'ப்ரண்ட்ஸ்', இப்போதும் பலருக்கு க்ளோஸ்!

இன்று, அப்படம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும் முழுப் படத்தையும் அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது.
நவம்பர் 21-ம் தேதி திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருவதால் படத்தில் கிருஷ்ணமூர்த்தியாக நடித்த நடிகர் ரமேஷ் கண்ணாவிடம் பேசினோம்.
கலகலப்பாக நினைவுகளைப் பகிரத் தொடங்கியவர், "இத்தனை வருஷத்துக்குப் பிறகு 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மறுபடியும் ரிலீஸ் ஆகுது.
குழந்தைகளுக்கு அந்தப் படம் ரொம்ப பேவரிட். டி.வி-யில் அந்தப் படத்தை இப்போ போட்டாலும் பலரும் ஆர்வத்தோட பார்ப்பாங்க.
25 வருஷங்களுக்குப் பிறகு இப்போ ரீ ரிலீஸ் ஆகுது. டி.வி-யில் பார்த்து மகிழ்ந்த குழந்தைகளுக்கு தியேட்டர்ல பார்க்கிறதுக்கான வாய்ப்பு அமைஞ்சிருக்கு. இந்த ரிலீஸும் பெருசா படம் ஹிட்டாகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
எனக்கும், கிருஷ்ணமூர்த்தி கேரக்டர் ரொம்பவே நெருக்கமானதுனு சொல்லலாம். அந்தப் படம் வெளியானதுக்குப் பிறகு ஒரு நகைக் கடைக்கு விளம்பரம் எடுத்தாங்க. அதுல நான் நடிச்சிருந்தேன்.

அந்த விளம்பரத்துல சில வடஇந்திய குழந்தைகளும் பெண்களும் நடிச்சிருந்தாங்க. அங்கிருந்த பெண்ணொருவர் குழந்தைகள்கிட்ட 'அங்கிள் நேம் போலோ'னு சொன்னாங்க.
நானும் அவங்ககிட்ட 'குழந்தைகளுக்கு எப்படி என்னைத் தெரியும்'னு சொன்னேன். ஆனா, அடுத்த நொடியே தமிழ் தெரியாத குழந்தைகள்கூட 'கிச்சனமூர்த்தி'னு கத்திட்டு ஓடினாங்க.
அந்த சம்பவம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இன்னைக்கு வரைக்கும் அதை மறக்காமல் நினைவுல வச்சிருக்கேன். சொல்லப்போனால், இப்போ வரைக்கும் கிச்சனமூர்த்தி ரொம்ப பேமஸ் (சிரிக்கிறார்).
இயக்குநர் சித்திக்கிற்கு நான் இப்போதும் ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். முதல் பாகத்தின் ரிலீஸுக்குப் பிறகு பார்ட் 2 எடுப்பதற்கான திட்டங்கள் வச்சிருந்தோம்.
நானும் இயக்குநர் சித்திக் கிட்ட பேசினேன். பிறகு அது நடக்கவே இல்ல. நானும் விஜய்கூட சேர்ந்து நடிச்சப் படம் அது ஒண்ணுதான். 'ப்ரண்ட்ஸ்' படத்துக்கு முன்னாடி வரைக்கு நான் டிராக் காமெடி பண்ணினது கிடையாது.
ஆனா, இயக்குநர் சித்திக்கிற்கு எமோஷனலாகவும் நடிக்கக்கூடிய ஒரு கேரக்டர் தேவைப்பட்டது. அவர்கிட்ட கேரளாவுல பலரும் என்னைப் பத்தி சொல்லியிருக்காங்க.
மலையாள திரைத்துறையைச் சேர்ந்தவங்க 'படையப்பா' படம் பார்த்துட்டு இந்தக் கேரக்டருக்கு நான் பொருந்திப் போவேன்னு இயக்குநர்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்படிதான் நான் படத்துக்குள்ள வந்தேன்.

'ப்ரண்ட்ஸ்' படத்தோட மலையாள வெர்ஷன்ல நான் நடிச்சிருந்த கதாபாத்திரத்துல ஶ்ரீனிவாசன் சார் நடிச்சிருந்தார்." என்றவர், "தமிழ் வெர்ஷனை இளையராஜா சார் பார்த்துட்டு 'விஜய், சூர்யாவை நடிக்க வைத்தது முக்கியமான விஷயம் கிடையாது. படத்துக்கு ரமேஷ் கண்ணாதான் சரியான செலக்ஷன்'னு பாராட்டினாரு.
அவரே அப்படியான பாராட்டைத் தந்தது பெரிய ஆசீர்வாதம்ங்க எனக்கு. சொல்லப்போனால், 'ப்ரண்ட்ஸ்' படத்துல காமெடி, ஆக்ஷன், டிராமா, செண்டிமெண்ட்னு அத்தனை விஷயங்களும் இருக்கும்.
இப்போலாம் அப்படியான திரைப்படங்களைப் பார்க்க முடியலைங்க! என்கிட்ட பேசுற என்னுடைய நண்பர்கள் பலரும் இதே விஷயத்தைதான் சொல்றாங்க." என்றார்.
"இன்னொரு முக்கியமான விஷயம். இந்த ரீ ரிலீஸ் சமயத்துல சித்திக் சார் நம்மகூட இல்ல. அவரை நான் பர்சனலா ரொம்ப மிஸ் பண்றேன்.
அவருடைய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு நான் டைலாக்ஸ்கூட எழுதியிருந்தேன். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.
நாங்கள் இருவரும் மாத்தி மாத்தி கவுண்டர் போட்டு ஜாலியாக பேசுவோம். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத மனிதர் அவர். அவர் இப்போ நம்மகூட இல்லாதது காலத்தின் கொடுமை!

அதே மாதிரிதான் மதன் பாபு பேசுற வசனமும் படத்துல ரொம்ப பேமஸ். அவரும் இப்போ நம்மகூட இல்லைங்கிறது வருத்தமான விஷயம். சித்திக் சார் பொறுத்தவரைக்கும் அவர் பேப்பர்ல எழுதுறதுதான் பைனல்.
அதுக்கு மேல எதுவும் மாத்த முடியாது. 'ப்ரண்ட்ஸ்' படத்துல நான் எதேச்சையாக 'ஆடு நடக்குது மாடு நடக்குது' டைலாக் போட்டேன்.
அவருக்கும் பிடிச்சுப் போய் அதை அப்படியே வச்சுக்க விட்டுடாரு. சிம்புவுக்கு நான் போட்ட டைலாக் ரொம்ப பிடிக்கும்.
அவர் 'ஆணியே புடிங்க வேணாம் டைலாக் பலருக்கும் பிடிக்கும். ஆனா, எனக்கு உங்க ஆடு மாடு டைலாக்தான் ரொம்ப பிடிக்கும்'னு சொல்வாரு.
முக்கியமாக, வடிவேல் சார்தான் அந்தப் படத்துக்கு மிக முக்கியமான ப்ளஸ்னு சொல்லலாம்.
அவருடைய நேசமணி கேரக்டருக்கும், 'ப்ரண்ட்ஸ்' படத்தின் அத்தனை கேரக்டர்கள் பற்றியும் மீம்ஸ் வரும். எதையும் நான் மிஸ் பண்ணிட மாட்டேன்.
அத்தனையையும் நான் பார்த்துடுவேன்." என்றவர், "படத்துல பலருக்கும் பல காட்சிகள் மறக்க முடியாதளவுக்கு பேவரிட்டாக இருக்கலாம்.

ஆனா, எனக்கு கடிகாரம் உடையும் காட்சிதான் மறக்க முடியாததுனு சொல்வேன். ஏன்னா, அந்தக் காட்சியில கடிகாரம் கீழ விழுந்து உடைஞ்சிருச்சுனா அதை ஒட்டுறதுக்கு மறுபடியும் 1 மணி நேரம் ஆகும்.
அந்தக் காட்சியில விஜய்யும் சூர்யாவும் சிரிச்சுட்டே இருந்தாங்க. மறுபடியும் கடிகாரத்தை ஒட்ட வச்சு ரீ டேக் எடுத்துட்டே இருந்தோம்.
இப்போ நீங்க பார்த்தாலும் அந்தக் காட்சியில விஜய்யும், சூர்யாவும் திரும்பி நின்னு சிரிச்சுட்டுதான் இருப்பாங்க." என்றபடி முடித்துக் கொண்டார்.

.jpg)
















