கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album
பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!
சேலம் மாவட்டம், மூன்று ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
பள்ளப்பட்டி ஏரியைச் சுற்றி சுமார் 2 கி.மீ அளவுக்கு பேவர் பிளாக் கற்கள் பொதிக்கப்பட்டு நடைப்பாதை மற்றும் சைக்கிளிங் வசதியுடன் ஆங்காங்கே ஓட்டுக்கூரை அமர்விடங்கள் போன்ற வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டில் இருந்த ஏரிப் பூங்கா, இப்போது கேட்பார் இன்றி தடங்களிலே பல தடைகளை ஏற்படுத்தும் வண்ணம் முள் செடிகள் மற்றும் புல் தரைகள் ஆக்கிரமிப்பு செய்து மக்களின் உடல் ஆரோக்கிய நடைப்பயணங்களை தடை பயணங்களாக மாற்றியுள்ளது.

இ- கழிவறை ஏரிப் பூங்கா
பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் இரண்டு இடங்களில் இ- கழிவறைகள் ஆண்- பெண் என தனிதனியாக இரண்டு கழிவறைகள், புதருக்குள்ளே பசுமை கழிவறையா என ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து அங்குள்ள நபரிடம் கேட்டபோது, ``இந்த இ- கழிவறையில் பணம் செலுத்தியே பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது பணம் செலுத்தினாலும் அதை பயன்படுத்தவும் முடியாது. பணத்தை திரும்ப பெறவும் முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளது. அந்த கழிவறைகள் சுற்றிலும் புதர் செடிகளால்... பார்ப்பதற்கு ஏரிப் பூங்கா காட்டிற்குள்ளே ஒரு எளிய வடிவ இ- கழிவறையா? என்ற அளவுக்கு காட்சியளிக்கிறது" என்றார்.
ஓட்டுக்கூரை மக்கள் அமர்விடம்
ஏரிப் பூங்காவில் ஆங்காங்கே மக்கள் அமர்வதற்கு திண்ணை அமைப்புகளும் ஐந்திற்கும் மேற்பட்ட ஓட்டு கூட அமர்விடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்,ஓட்டுக்கூரை அமர்விடங்கள் எல்லாமே சுகாதாரமற்று சீட்டாட்டம் மற்றும் மது பிரியர்களின் பொழுதுப்போக்கு இடங்களாக காட்சியளிக்கின்றது. சில ஓட்டுக்கூரை அமைவிடம் புதர்கள் மண்டி சமூக விரோத செயலிடமாக காட்சியளிப்பதால் அச்சத்துடனே கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அங்கு நடக்கும் சீட்டாட்டம் மற்றும் மது பிரியர் கூட்டம் அசருவதாக இல்லை.

விபத்துக்கு உள்ளான ஏரிப்பூங்கா
கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் ₹70 லட்சம் மதிப்பிலான மலை போன்ற அமைப்பு, விலங்கினங்கள் உருவங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. அதன் பிறகு ஆணையாளர் 08.09.2025 தகவல் படி ஏரிப் பூங்கா புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்துதல் செய்யப்படுவதற்காக ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் என்ற ஒரு தகவல் மட்டுமே கிடைத்தது. ஆனால்,அது போன்ற பராமரிப்பு பணி நடந்தது பற்றிய தகவல் ஏதும் இல்லை.
இடர்களுக்கு மத்தியிலும் இனிமையா?
ஆம். குப்பைகள் தூவியது போன்ற புல் வெளிகள், பழுதடைந்த இ- கழிவறைகள், நடைப்பாதைகள் எல்லாம் முள் செடி மற்றும் புதர் செடி முளைத்திருந்தாலும் கைப்பிடி நடைப்பாதை கம்பிகள் வலுயிழந்திருந்தாலும் காலை அது நடைப்பயணம் மேற்கொள்ளும் அமைதியான பகுதியாகவும் மாலை அங்குள்ள ஊஞ்சல், சீசா மற்றும் சருக்கு மரம் போன்றவை குழந்தைகளால் நிறைந்து இருக்கும் சிரிப்பு பகுதியாகவும் காட்சியளிக்கின்றது.








இது குறித்து அங்குள்ள நபரிடம் கேட்ட போது, ``இங்கு நீங்கள் சொல்வது போன்ற பிரச்னைகள் உள்ளது. ஆனால்,நகர வாழ்வில் நெருக்கமான வீடுகளுக்கு மத்தியிலே குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் நடப்பதற்கான நடைப்பாதை இருப்பது சாத்தியமா என்ற போது இதை சகித்து மகிழ்ச்சியாக ஏற்கிறோம்" என்றார். மற்றொரு நபரிடம் கேட்டபோது, "மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் தருவாயில் படகு சவாரி பூங்காவாக மாறவுள்ளதாக கேள்விப்பட்டேன்" என்றார்.
இந்த ஏரிப் பூங்கா மறு சீரமைப்பு மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வருதல் பற்றிய அரசாங்க முன்மொழிவுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி கேட்க சூரமங்கலம் பகுதி உதவி பொறியாளரை அணுகினோம். ஆனால், தகவல்கள் தர அவர் தயாராக இல்லை. எனவே, தகவல்கள் அளிக்கும் பட்சத்தில் அதையும் சேர்த்து வெளியிட தயாராக உள்ளோம்.
காத்திருப்போம் மக்கள் கட்டாய ஏற்பு ஏரிப் பூங்கா, விருப்பமான பொழுதுப்போக்கு ஏரிப் பூங்காவாக மாறுமா?!

















