வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வா...
வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் ரமேஷ் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் ரமேஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடித்துள்ளது. வளர்ப்பு நாய்தான் என்று அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரமேஷ் அலட்சியமாக இருந்துள்ளார்.
ஆனால், அந்த வளர்ப்பு நாயை கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்துள்ளன. அதில், அந்த வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ப்பு நாய் கடித்ததில் ரமேஷுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அவர் சரியாக கவனிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

















