செய்திகள் :

Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?

post image

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத, ஒரு காலத்தில் மோடியை கடுமையாக எதிர்த்த நதிஷ் குமார் இன்று அதே மோடி மற்றும் பாஜகவின் ஆதரவுடன் 10 வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.

நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் பெரும் ஆச்சர்யங்களையும் நேரெதிர் முரண்களையும் கொண்டது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கிய அவரின் அரசியல் பயணத்தை அசைபோடுவதன் மூலம் இதை உணர முடியும்.

முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு

ஜெயபிரகாஷ் நாராயணன்

நிதிஷின் அரசியலை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் அவரைக் கடந்து இன்னும் சிலரின் பயணத்தையும் நாம் அறிந்தாக வேண்டும். அதில் முக்கியமானவர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். அதற்காகவே பலமுறை சிறைக்கும் சென்றவர். சுதந்திர இந்தியாவின் வரலாறில் கறுப்புப் பக்கமாக நிரம்பியிருக்கும் எமெர்ஜென்சியை இந்திரா காந்தி அமல்படுத்தியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜெ.பிதான். 1970 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தார்.

வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை பெருகியிருந்த நிலையில் பீகாரில் மாணவர்களை திரட்டி அவர் செய்த போராட்டம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் வழியேதான் டெல்லியில் 1975-ல் மக்கள் பெருமளவில் திரண்டு அதிகார வர்க்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டமும் நடந்திருந்தது.
இந்திரா காந்தி

இந்த சமயத்தில்தான் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வென்றதற்கு எதிராக ராஜ் நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூன் 12, 1975 இல் தீர்ப்பு வெளியானது. ஜூன் 25 இல் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஜெபி நடத்திய போராட்டமே. அரசுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்புணர்வு உருவாகியிருந்த இந்த நிலையில்தான் பீகாரை சார்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரும் ஜெபியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். லாலு பிரசாத் எளிய பின்னணியை கொண்டவர்.

நிதிஷின் அப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரர். நிதிஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. இருவருமே அவசரநிலை காலத்தில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அந்த அவசரநிலை காலத்தில் தனக்கு பிறந்த மகளுக்கு 'மிசா பாரதி' என்றே லாலு பெயரும் சூட்டியிருக்கிறார்.
லாலு பிரசாத் யாதவ்

1977-ல் அவசரநிலை முடிவுக்கு வருகிறது. தேர்தலில் வென்று ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஜனதாவுடன் கூட்டாக இருந்த பாரதிய ஜன சங்கத்தின் தொண்டர்களின் இரட்டை உரிமையை சரண் சிங் கேள்வி கேட்க, ஜனதாவின் கூடாரம் காலியாகி மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்தார். மத்தியில் ஜனதா கட்சி வீழ்ந்திருந்தாலும் அரசியல் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு லாலுவும் நிதிஷூம் பீகாரில் பரபரவென இயங்கினர். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகினர். ஆயினும், வசீகரமாக பேசக்கூடிய லாலுவின் கரமே பீகாரில்ஓங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக லாலு பார்க்கப்பட்டார். அந்த மக்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதே தன்னுடைய நோக்கமென லாலு முழங்கினார். லாலுவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.

இந்த சமயத்தில்தான் 90களின் தொடக்கத்தில் சக சோஷலிஸ்ட்டான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து சமதா என்கிற கட்சியை தொடங்கினார் நிதிஷ். லாலுவை தாண்டி வளர வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ் புதிய கட்சி தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், லாலுவினால் யாதவ் இன மக்களுக்கே நன்மை கிடைக்கும். எண்ணிக்கையில் சிறியதாக இருக்கும் குர்மி இனத்தவருக்கு எந்த பலனுமில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதனால் குர்மி இனத்தைச் சேர்ந்த நிதிஷ் இயல்பிலேயே லாலுவை விட்டு விலகி நிற்க வேண்டிய தேவையும் எழுந்தது. மாநில அளவில் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்கிற புதிய கட்சியை லாலு தொடங்கினார். லாலு தனியாக விலகி சென்றதால் நிதிஷ் குமார் மீண்டும் ஜனதா கட்சியை நோக்கி நகர்ந்தார். தனது சமதா கட்சியை ஜனதா கட்சியுடன் இணைத்து ஐக்கிய ஜனதா தளம் என பெயரை மாற்றினார்.

1990 முதல் 2005 வரைக்குமே பீகார் லாலுவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

நிதிஷ் குமார்
இடையில் 2000-ம் ஆண்டு தேர்தல் முடிந்த சமயத்தில் மட்டும் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பெரும்பான்மை இல்லாத போதும் நிதிஷ் முதலமைச்சரானார். ஆனால், இந்த ஆட்சி வெறும் 7 நாள்களுக்கு மட்டுமே நீடித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே நிதிஷ் ராஜினாமா செய்தார். இந்த 15 ஆண்டு காலத்தில் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரவைகளில் விவசாயத் துறை அமைச்சராகவும் ரயில்வேதுறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியையே நிதிஷ் ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து பல பேர் பலியான சமயத்தில் நிதிஷ் குமார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் தன்னைப்போலவே தற்போதைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும் என காட்டமாக கூறினார் என்பதும் கூடுதல் தகவல்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிக்கிய போது தனது மனைவியான ராப்ரி தேவியை முதலமைச்சராக்கி ஆட்சியை நடத்தி சென்றார். ஜங்கிள் ராஜ் என லாலுவின் ஆட்சியை விமர்சித்த நிதிஷூக்கு 2005-ல்தான் பலன் கிடைக்கத் தொடங்கியது. 2005-ல் மட்டும் பீகாரில் இரண்டு முறை சட்டமன்ற தேர்தல் நடந்தது. மார்ச்சில் நடந்த அந்த தேர்தலில் வாஜ்பாய் அரசுடன் நல்ல உறவில் ஏற்கனவே இருந்திருந்ததால் பா.ஜ.க-வுடன் இணைந்து நிதிஷ் களமிறங்கியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. நிதிஷின் ஐஜக 55 இடங்களையும் பாஜக 37 இடங்களையும் வென்றிருந்தது. காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்து 85 தொகுதிகளில் வென்றிருந்தனர்.

243 தொகுதிகளை பீகாரில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. எட்டு மாதங்கள் கழித்து நவம்பரில் மீண்டும் தேர்தல்.
வாஜ்பாய்

இந்த முறை ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி 143 இடங்களை அள்ளியது. நிதிஷின் ஐ.ஜ.க மட்டும் 88 இடங்களை வென்றது. கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் என எல்லாவிதத்திலும் லாலுவை முந்தும் வகையில் நல்லாட்சியை நிதிஷ் வழங்கியிருந்தார். இதன் பலனாக 2010-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்றார். ஐ.ஜ.க + பா.ஜ.க கூட்டணி மட்டும் 206 இடங்களை வென்றது. மாபெரும் வெற்றி. ஆனால், இதன்பிறகு நிதிஷ் பல இடங்களில் சரியத் தொடங்கினார். பல இடங்களுக்கு பல்டி அடித்தார்.

மாநிலத்தில் நிதிஷ் கை ஓங்கியிருந்த சமயத்தில், லாலு காங்கிரசுடன் இணைந்து மத்திய அரசில் இரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதாவது தனது நண்பரும் எதிரியும் முன்பு கையில் வைத்திருந்த அதே இரயில்வே துறை என்பதுதான் சுவாரஸ்யம்.

2014 நாடாளுமன்ற தேர்தலை மோடியின் தலைமையில் எதிர்கொள்வதில் நிதிஷ் குமாருக்கு விருப்பமில்லை. குஜராத் கலவரங்களுக்கு காரணமே மோடிதான் என நிதிஷ் கடுமையாக விமர்சித்தார். மேலும், நிதிஷூக்கு அந்த பிரதமர் நாற்காலியின் மீதும் ஒரு கண் இருந்தது. இதனால் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். நிதிஷூக்கு படுதோல்வி. மோடி அலையில் நிதிஷ் காணாமல் போனார். 40 தொகுதிகளில் வெறும் இரண்டே இரண்டை மட்டுமே நிதிஷால் வெல்ல முடிந்தது.

தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஜித்தன் ராம் மாஞ்சி எனும் தன் சகாவை முதல்வராக்கினார். இந்த ஜித்தன் ராம் மாஞ்சி இப்போது ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற பெயரில் ஒரு தனிக்கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்திலும் பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காரணமாக இருந்தது.

இந்தச் சமயத்தில்தான் நிதிஷூடன் இன்னொரு முக்கியமான நபர் கரம் கோர்த்தார். 2014 தேர்தலில் பாஜகவின் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் நிதிஷை நோக்கி வந்தார். வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாததால் பாஜகவை விட்டு பிரசாந்த் கிஷோர் விலக தொடங்கியிருந்தார். நிதிஷ் அவரை பீகாருக்கு அழைத்து வந்தார். ஐஜக வுக்காக தேர்தல் வியூகங்களை பிரசாந்த் வகுத்தார்.

2015 இல் பாஜகவை தவிர்த்து ஐஜக + ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகள் கூட்டாக மகாகத்பந்தன் கூட்டணி உருவானது. எதிரிகளாக முறுக்கிக் கொண்டு நின்ற லாலுவும் நிதிஷூம் கைகோர்த்தனர். ஐஜக 71, ஆர்ஜேடி 80, காங்கிரஸ் 27 இடங்களை வெல்ல இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது.
நிதிஷ் குமார் - மோடி

ஆனாலும், முழுமையாக 5 ஆண்டுகளை இந்த கூட்டணியால் நிறைவு செய்ய முடியவில்லை. ஆர்ஜேடியை விட குறைவான தொகுதிகளை வென்ற போதும் நிதிஷ்தான் முதல்வராக இருந்தார். லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதல்வர். இதுவே நிதிஷை உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய பதவிக்கு ஆர்ஜேடி உலைவைக்கக்கூடும் என நினைத்தார். தன்னுடைய பிடியை இறுக்க நினைத்தார். ஊழல் வழக்கு ஒன்றில் தேஜஸ்வியை சிபிஐ விசாரிக்க துணை முதல்வர் பதவியிலிருந்து அவரை விலகுமாறு நிதிஷ் நெருக்கடி கொடுக்கிறார். தேஜஸ்வி விட்டுக்கொடுக்கவில்லை. நிதிஷ் தலைகீழாக பல்டி அடித்தார். எந்த மோடியை எதிர்த்தாரோ அந்த மோடியிடமே தஞ்சம் புகுந்தார். கூட்டணியை உடைத்து பாஜகவுடன் புது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வரானார்.

2020 சட்டமன்ற தேர்தலையும் பாஜகவுடன் சேர்ந்தே எதிர்கொண்டார். தனது கடைசி தேர்தல் இதுதான் என சொல்லி நிதிஷ் வாக்கு கேட்டார். ஆனாலும், ஐஜக 43 இடங்களை மட்டுமே வெல்ல, பாஜக 74 இடங்களை வென்றிருந்தது. ஆனாலும் முதல்வர் பதவியை அடம்பிடித்து வாங்கினார். அவரால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. பாஜக தனக்கு நெருக்கடி கொடுக்குமோ என்கிற உறுத்தல் அவரிடம் இருந்து கொண்டே இருந்தது. வாக்குப்பதிவு சமயத்திலேயே இந்த அச்சம் நிதிஷூக்கு!

ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி பாஜக நிற்கும் தொகுதிகளை தவிர்த்து அத்தனை தொகுதிகளிலும் நின்றது. அதன் தலைவரும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான் நிதிஷூம் தேஜஸ்வியும் இல்லாத ஆட்சி வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுவே பாஜகவின் உள்ளடி வேலைதான் என்கிற சந்தேகம் நிதிஷூக்கு இருந்தது. லோக் ஜன சக்தி பிரித்த வாக்குகளால் தாங்கள் வெல்ல வேண்டிய 20-30 தொகுதிகள் கைவிட்டுப் போனதாக ஐஜக எண்ணியது. ஐஜகவை பலவீனப்படுத்த பாஜக முயல்வதாக நிதிஷ் எண்ணினார். மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பாஜகவை உதறிவிட்டு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸூடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து 8 வது முறையாக முதல்வரான நிதிஷ்.

நிதிஷ் குமார்

2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் கட்டமைத்துக் கொண்டிருந்த இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் மிக முக்கியமான நபராக பார்க்கப்பட்டார். 'இந்தியா' என பெயர் வைத்ததிலேயே நிதிஷின் பங்கு பெரிதாக இருந்திருந்தது. ஒரு கட்டத்தில் நிதிஷை இந்த கூட்டணி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் என்றும் செய்திகள் வெளியானது. இப்படியான சூழலில்தான் திடீரென இந்தியா கூட்டணி சந்திப்புகளைத் தவிர்த்த நிதிஷ் மீண்டும் ஒரு பெரிய பல்டியை அடித்தார். இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவுடன் சேர்ந்தார். 9 வது முறையாக முதல்வரானார்.

2005 லிருந்து இப்போது வரைக்கும் இடையில் இருந்த மஞ்சியைத் தவிர்த்து பீகாரில் முதலமைச்சர் பதவியில் நிதிஷ் மட்டும்தான் அமர்ந்திருக்கிறார். எப்போதெல்லாம் அந்த பதவிக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய பல்டிக்களை அடித்து பதவியை தக்கவைத்துக் கொள்கிறார்.

இத்தனை கூட்டணிகள் மாறினாலும் பீகார் மக்கள் நிதிஷ் குமார் நம்பிக்கையிழக்காமல் இருப்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவர் கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. மேலவை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். அப்படியும் மக்களின் நம்பிக்கைகையை பெறுகிறார்.

அதிகாரம் வலியது!

Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி!

'202 இடங்களில் பா.ஜ.க கூட்டணி'பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இரட்டை அதிர்ச்சியைச் சந்தித்துள்... மேலும் பார்க்க

`ஜப்பானுக்கு செல்லாதீர்கள்' - தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்?

'தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான 'அச்சுறுத்தலாக' பார்க்கப்படும்?''தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்'.இது ... மேலும் பார்க்க

`வாஷ்அவுட்' ஆன பிரசாந்த் கிஷோர் கட்சி; அதிர்ச்சியில் உயிரிழந்த வேட்பாளர் - என்ன நடந்தது?

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், இந்த சட்டமன்றத் தேர்தலில... மேலும் பார்க்க

'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெ... மேலும் பார்க்க

US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார். இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதி... மேலும் பார்க்க