காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வ...
'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``எஸ்.ஐ.ஆர் பணி மோசடி என குற்றம் சாட்டினார்கள். ஆனால் உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு பெற வேண்டும் என்றுதான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெறுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் செய்தன. அதையெல்லாம் மீறி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து தெரியவருவது, உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
அதேபோல தமிழகத்தை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் எதிர்க்க காரணம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. அதேபோல மாநகராட்சி, நகராட்சி போன்ற நகரப் பகுதிகளிலே வசிக்கிறவர்கள் அந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்கிறார்கள். குடிபெயர்ந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ளும் போது, இறந்தவர்கள் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள், போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்கப்பட்டு உண்மையான நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒரு நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெற எஸ்.ஐ.ஆர். பணி மிகவும் முக்கியம். 21 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், தற்போதுதான் நடைபெறுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று விட்டது" என்று கூறினார்.
பி.எல்.ஓ க்கள் வீடுவீடாக சென்று படிவத்தை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்தப் பணி சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பி.எல்.ஓ வாக நியமிக்கப்பட்டவர்கள் நான்காம் வகுப்புதான் படித்துள்ளனர். இதை நாங்கள் தெரிவித்தும் மாற்றாமல் உள்ளனர். வேண்டும் என்றே திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் பணி முறையாக நடைபெறக்கூடாது என சில அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
அரசாங்கம் வாய்மொழி உத்தரவாக இவ்வாறு சொல்லி இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நேரடியாக அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து அலுவலர்களை நியமிக்கின்றனர். அப்படி நியமிக்கும்போது, தகுதியானவர்களை நியமிக்காததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு மேலாவது தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு எஸ்.ஐ.ஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிவத்தில் குழப்பமில்லை. சரியான பி.எல்.ஓ-க்களைத் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் நியமிக்க வேண்டும். பி.எல்.ஓ-க்கள் சரியாக பணியாற்ற வேண்டும். ஒரு மாதத்தில் தேர்தலையே நடத்தி முடித்து விடுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு, வேட்புமனுத் தாக்கல், வாக்குப்பதிவு வாக்கு, எண்ணிக்கை என ஒரே மாதத்தில் முடித்து விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பி.எல்.ஓ நியமிக்கப்பட்டுள்ளனர் 300 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்பு 5 நாட்களில் அடையாள சிலிப் வழங்கப்பட்டு விடுகிறது. எனவே ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை நிச்சயம் செய்து விட முடியும்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் வாக்காளர்களாவது இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை வாக்குரிமை ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து எஸ்.ஐ.ஆர் தொடங்குவதற்கு முன்பே அதிமுக சார்பில் தொகுதி வாரியாக விவரங்களை கொடுத்துள்ளோம். பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் நீக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று ஆர்.கே. நகரில் 30 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இப்படி பல்லாயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. இதனை பயன்படுத்தி, திமுக தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்து வருகிறது. திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்துக் கொடுத்ததற்காக 15 நாள் சிறையில் அடைத்தார்கள். அப்படிப்பட்ட நிலை வரும் சட்டமன்றத் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காகத்தான் எஸ்.ஐ.ஆர்.-ஐ நாங்கள் ஆதரிக்கிறோம். எஸ்.ஐ.ஆர். எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பல்வேறு காரணங்களை கூறிவருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாத காலம் போதுமானது. முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்தகலை. எஸ்.ஐ.ஆர் மூலம் சதிசெய்து பீகாரில் ஜெயித்தார்கள் என்பது சரியல்ல.. வாக்காளர்களை சேர்க்கலாம். ஆனால் அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது. ஆர்.கே நகர் தொகுதியில் மட்டும் 31 ஆயிரம் வாக்குகள் நாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இவ்வளவு என்றால் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம். இதில் எந்த தவறும் கிடையாது.. இந்த கட்சி அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெற வேண்டும்.

திமுக எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பி.எல்.ஓ. உடன் திமுகவினர் சென்று வருகின்றனர். மற்ற கட்சியினரை விட திமுகவினர்தான் அதிகம் சென்று வருகின்றனர். இதை நாங்கள் கவனித்து கொண்டுதான் உள்ளோம்.” என்றார். அண்ணாமலை சொத்துகள் வாங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என பதிலளித்தார்.














.jpg)

