ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய `எமிரேட்ஸ் தொழிலாளர் விருது' வென்ற கேரள இளைஞர் - ய...
Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி!
'202 இடங்களில் பா.ஜ.க கூட்டணி'
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இரட்டை அதிர்ச்சியைச் சந்தித்துள்ளார். ஒருபுறம், அவரது மகன் தேஜஸ்வி தலைமையிலான 'மகாகட்பந்தன்' படுதோல்வியைச் சந்தித்தித்திருக்கிறது.
மறுபுறம், தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் தேஜஸ்வி யாதவ் நூலிழையில் வெற்றிபெற்றிருக்கிறார். மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வியடைந்திருக்கிறார்.
பீகார் சட்டமன்றம் மொத்தம் 243 இடங்களை கொண்டது. இதற்கான வாக்குப்பதிவு நவம்பர் 6, 11 தேதிகளில் நடைபெற்றது. முடிவு 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தே.ஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாகட்பந்தன் கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால் மகாகட்பந்தன் கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர். குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகள் லாலு பிரசாத் யாதவுக்கு மிகப்பெரிய, தனிப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாகட்பந்தனின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் அவரது குடும்ப கோட்டையான ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அங்கு பா.ஜ.க வேட்பாளர் சதிஷ் குமார் யாதவை விட 14,532 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று போராடி வெற்றிபெற்றிருக்கிறார். மஹுவா தொகுதியில் போட்டியிட்ட மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வெறும் 35,703 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த பின்னடைவு சில மாதங்களுக்கு முன்பு லாலு குடும்பத்தில் நடந்த பிளவின் நேரடி விளைவுதான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி. இந்த பிரச்சினைக்கான அடித்தளம் கடந்த மே மாதத்தில்தான் தொடங்கியது. அப்போது தேஜ் பிரதாப் யாதவ் தனது தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்புகள் குறித்து சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு வெளியானது. அந்தப் பதிவில், 37 வயதான அனுஷ்கா யாதவ் என்ற இளம் பெண்ணுடன் தனக்கிருந்த நீண்டகால உறவைப் பற்றிப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது லாலு குடும்பத்தின் பழமைவாத விழுமியங்கள், தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை மீறுவதாகக் கருதப்பட்டது.
ஃபேஸ்புக் பதிவும்.. வெடித்த சர்ச்சையும்!
மேலும், அந்தப் பதிவில் அனுஷ்கா யாதவ் தொடர்பான சில புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது, ஆர்.ஜே.டி கட்சி மற்றும் லாலு குடும்பத்தினருக்குள் பெரும் சலசலப்பையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது. இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உடனேயே, தேஜ் பிரதாப் யாதவ் "எனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. என்னைப் பற்றியும் எனது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறு பரப்பும் நோக்குடன், புகைப்படங்கள் திருத்தப்பட்டு தவறான தகவல்களுடன் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தேஜ் பிரதாப் யாதவ் தனது விளக்கத்தை அளித்தும், அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்தச் சம்பவத்தை "பொறுப்பற்ற நடத்தை, குடும்ப விழுமியங்களுக்கு இணங்கத் தவறிய செயல்" எனக் கருதி கடுமையான நடவடிக்கையை எடுத்தார். அதாவது தேஜ் பிரதாப் யாதவ் ஆறு ஆண்டுகளுக்கு ஆர்.ஜே.டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் லாலு பிரசாத், தனது மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் ஜனசக்தி ஜனதா தளத்தை உருவாக்கினார். அவர் மேலும் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மஹுவா தொகுதியில் போட்டியிட்டார். தேஜ் பிரதாப் பெற்ற 35,703 வாக்குகள், ஆர்.ஜே.டி வேட்பாளருக்குச் சென்றிருந்தால், அத்தொகுதியில் மகாகட்பந்தன் வெற்றிபெற்றிருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும் லாலுவின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு, மாநிலம் முழுவதும் கட்சியின் தலைமை மீது ஓர் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியது. உடல்நலக் குறைவால் லாலு பிரசாத் யாதவ் அரசியலில் இருந்து சற்று விலகி இருக்கும் நிலையில், மகன்களுக்கு இடையேயான இந்தப் பிளவு, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தேஜஸ்விக்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக் குறியாக்கியது.

இது தேஜஸ்வியின் தலைமைப் பண்புக்கு வலு சேர்க்கவில்லை. தேஜஸ்வி யாதவ், முழு நேரமும் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழலில், அவரது மூத்த அண்ணன் தனியாகப் போட்டியிட்டது குறித்த ஊடகங்களின் கேள்விகள் மற்றும் குடும்பப் பிளவு பற்றிய செய்திகளால் அவரது கவனம் சிதைந்தது.
தேஜஸ்வி தன்னைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி விளக்கமளிக்கும் நிலை உருவானது. இது அவரது பிரசாரத்தின் வேகத்தையும் செய்தியையும் மழுங்கடித்தது. மேலும் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் இருவரும் போட்டியிட்ட தொகுதிகள் வைஷாலி என்ற மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. இதனால் தேஜஸ்வியும் பெரும் போராட்டத்தை சந்தித்துதான் வெற்றிபெற முடிந்தது. இப்படியாக தேர்தல் தோல்வியும், மகன்களின் பின்னடைவும் சேர்ந்து லாலு பிரசாத் யாதவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது" என்றனர்.



















