செய்திகள் :

BB TAMIL 9: DAY 40: காமிரா முன் அடம்பிடிக்கும் திவாகர் - வக்கிரம் யாருக்கு பாருவுக்கா விக்ரமுக்கா?

post image

உணவு,  காமம், சுதந்திரம் போன்ற சில ஆதாரமான விஷயங்களைப் பிடுங்கிக் கொண்டு ஒரு மனிதக் குழுவை அடைத்து வைத்தால் அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? 

அவர்களுக்குள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் மெல்ல மெல்ல வெளியே வருமா? அல்லது நாகரிக பரிணாம வளர்ச்சியின்படி சகிப்புத்தன்மையோடு இயங்குவார்களா?

இதுவே பிக் பாஸ் விளையாட்டின் அடிப்படை பரிசோதனையாக இருக்கிறது. இந்த ஷோ வணிக வடிவமாக இருந்தாலும் கூட இதில் நமக்கான சமூகப் பாடங்களும் இருக்கின்றன. 

BB TAMIL 9: DAY 40

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 40


குப்பைக்கூடையில் சபரி சில விஷயங்களைக் கண்டெடுத்திருக்கிறார். ‘வேற ஒரு மேட்டரும் இருக்கு. யார் பண்ணுதுன்னு தெரியாம வெளில சொல்லக்கூடாது…. தப்பா போயிடும்” என்று சூசகமாக சொல்கிறார். “அடிச்சுக்கூட கேப்பாங்க வெளில சொல்லிடாதீங்க’ என்று வினோத் மற்றும் கம்ருதீனிடம் சொல்கிறார். 

சபரி சொன்ன போது மண்டையை பலமாக ஆட்டிய  கம்ரூதீன், அன்று இரவே சாண்ட்ராவிடம் இதைப் பற்றி சொல்லி குப்பை கவரையும் மெனக்கிட்டு தூக்கி வந்து காட்டுகிறார். வீக்கெண்ட் ஷோவில் சீன் போடுவதற்காக சபரி எதையோ பிளான் செய்வதாக இவர்கள் நினைக்கிறார்கள். சபரி உண்மையிலேயே அந்த நோக்கத்தில்தான் செயல்படுகிறாரா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும். 

“எல்லாத்தையும் சரியா யோசிப்பா.. ஆனா செயல்படுத்த மாட்டா. ரேங்கிங் டாஸ்க்ல அவளுக்கு ரெண்டாவது இடம் ரொம்பவே ஓவர்”  - சுபிக்ஷா தனது தோழியாக இருந்தாலும், ரேங்கிங் டாஸ்க்கில் வியானா வெளிப்படையாக சொன்ன அபிப்ராயம் இது. 

பிக் பாஸ் ஆட்டத்தை இப்படித்தான் ஆட வேண்டும். நெருக்கமான நண்பராக இருந்தாலும் கூட டாஸ்க் என்று வரும் போது பாரபட்சம் காட்டக்கூடாது. இது குறித்தான புரிதல் இரு தரப்பிடமும் இருக்க வேண்டும். ‘பிரெண்டுன்னு கூட பார்க்காம என்னை சொல்லிட்டல’ என்று ஒருவர் கசப்புடன் விலகினால் அது உண்மையான நட்பு அல்ல. ஆதாயம் எதிர்பார்த்து இயங்குகிற சுயநல உறவு மட்டுமே. 

இந்த வகையில் வியானா செய்ததது சரி. ஆனால் சுபிக்ஷாவிற்கு இது குறித்து மனத்தாங்கல் வந்திருக்கிறது போல. “பிரெண்டுன்னு நெனச்சு உன் கிட்ட சில விஷயங்களை ஓப்பனா சொல்றேன். இனிமே டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவோம்” என்று சுபிக்ஷா சொல்ல, ‘ஓகே’ என்று அதை ஆமோதிக்கிறார் வியானா. 

BB TAMIL 9: DAY 40

நாள் 40.

‘வக்ரம்.. வக்ரம்’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை பாரு தன்னை சொல்வது குறித்து விக்ரமிற்கு வருத்தம். இது பற்றி அரோராவிடம் வருந்திய விக்ரம், பிறகு பாருவிடம் “அப்படிச் சொல்லாத.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. விக்ரம், வக்ரம்ன்னு ரைமிங்கா சொல்ற போல. அதை மட்டும் நிறுத்திக்கோ” என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்க, பாரு அதை சட்டை செய்யவில்லை. 

“நான் ரைமிங்கா சொல்லலை. அதன் அர்த்தம் தெரிஞ்சுதான் சொல்றேன்.  உள்ள ஒண்ணை வெச்சிக்கிட்டு வெளியே ஸ்வீட்டா பேசறது வக்ரம்” என்று பாரு சொல்லும் அர்த்தம் தவறு. அதற்குப் பெயர் பாசாங்கு. உள்ளே இருக்கும் தவறான எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவதற்கு பெயர்தான் வக்கிரம். 

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.

பிக் பாஸின் அனைத்து சீசன்களிலும் அடாவடியான போட்டியாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விடும். “அவர்கள்தான் ரியலாக இருக்கிறார்கள்.. நடிக்கவில்லை. டிப்ளமாட்டிக்காக செயல்படவில்லை. மனதில் இருப்பதை நோ்மையாக சொல்லி விடுகிறார்கள். மாறாக உள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு நல்லவர் போல் நடிப்பவர்கள்தான் மோசமான போட்டியாளர்கள்”... என்று இதற்கான நியாயங்களைக் கற்பிக்கிறார்கள். 

இது ஒரு வகையில் உண்மை. ‘கோவம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்’ என்பது போல முன்கோபம் அதிகமிருக்கிறவர்கள், அப்போதைக்கு திட்டினாலும் மனதில் வைத்து பழிவாங்க மாட்டார்கள். ஆனால் வெளியே இனிமையாகப் பேசி உள்ளுக்குள் பழிவாங்கும் எண்ணத்தை ஒளித்து வைத்திருப்பவர்கள்தான், கோபக்காரர்களை விடவும் மிக ஆபத்தானவர்கள். ஆனால் இதுவும் ஒரு பொதுவான கற்பிதம்தான்.

BB TAMIL 9: DAY 40

சற்று யோசித்துப் பாருங்கள். மனிதர்கள் எல்லோருமே மனதில் உள்ளதையெல்லாம் அந்தக் கணத்திலேயே வெளிப்படுத்தி, செயல்படுத்தினால் உலகம் எப்படியிருக்கும்? அது காட்டுமிராண்டி உலகமாக இருக்கும். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமே இருக்காது. மிருகங்கள்தான் மனதில் தோன்றியதை உடனே செயல்படுத்தி விடும். 

காட்டுமிராண்டி உலகத்திலிருந்து நாம் மெல்ல நகர்ந்து வர எத்தனையோ வருடங்கள் ஆகியிருக்கின்றன. ஆன்மீகம், கல்வி, பக்தி போன்றவைகளின் மூலம் நல்லொழுக்க உபதேசங்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. மனிதன் என்கிற சமூக விலங்கு கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு இத்தகைய ஒழுக்கமும், கலாசாரமும், பண்பாடும், கலையும், இலக்கியமும் ஆதாரமான காரணங்களாக இருக்கின்றன. 

இன்னமும் கூட நாம் மனிதர்களாக மாறி விடவில்லை. பழைய காட்டுமிராண்டிததனங்கள் உள்ளே பதுங்கியிருக்கின்றன. என்றாலும் சமூகம், குடும்பம், சட்டம், தண்டனை போன்ற விஷயங்களுக்காக நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இதையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் நோ்மறையான மாற்றங்களும் நம்மை நல்லவர்களாக இயங்கச் செய்கிறது. 

நாகரிகம் கருதி கோபம், வன்மம், குதர்க்கம் போன்றவற்றை உள்ளே ஒளித்து வைத்துக் கொள்வதால்தான், வன்முறையின் சதவீதம் குறைந்து உலகம் ஓரளவிற்காவது இயங்குகிறது. இந்த ஒளித்து வைத்தலும் ஒரு கட்டத்தில் மாறி, மனிதன் உள்ளுக்குள் உண்மையாகவே மனித நேயத்தை நோக்கி நகர்வதுதான் உண்மையான வளர்ச்சி. ஆக, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதின் மூலம் நாகரிகத்தின் பாதையில் இன்னமும் நகர முடியும். 

BB TAMIL 9: DAY 40

இந்த லாஜிக்கின்படி பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் இயன்றவரை சகிப்புத்தன்மையோடு இயங்குபவர்கள்தான் சிறந்த போட்டியாளர்கள். இவர்கள்தான் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். சக மனிதனின் மீது அப்போதைக்கு கோபம் வந்தாலும் அதை ஒத்திப் போட்டு, அதனை சற்று ஆராய்ந்து பிறகு மன்னிக்கவோ, மறக்கவோ செய்வதுதான் மனிதம். மாறாக ‘டாய்.. ‘ என்று களத்தில் இறங்கி அப்போதே சண்டையை ஆரம்பித்தால், பிக் பாஸ் வீடு போலவே நம்முடைய வீடும் சந்தைக்கடையாகி விடும்.  

எதற்கு எடுத்தாலும் சண்டை போடுகிற பாரு, திவாகர், எஃப்ஜே போன்ற மனிதர்களால் சமகால உலகம் நிரம்பியிருந்தால் எப்படியிருக்கும்? ஏன் இம்மாதிரியான போட்டியாளர்களால் கணிசமான பார்வையாளர்களால் வெறுக்கப்படுகிறார்கள்?! 

சிலருக்கு காலையில் காஃபி குடிக்கவில்லையென்றால் கழிப்பறை போகத் தோன்றாது. அது போல் திவாகருக்கு ரீல்ஸ் போடவில்லையென்றால் பாத்ரூம் வராது போலிருக்கிறது. ஒவ்வொரு காமிரா முன் நின்று “சார்.. ப்ளீஸ்.. ஜூம் பண்ணுங்க.. தமிழக மக்களுக்கு நான் செய்தி சொல்லணும்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். காமிரா 360 டிகிரிக்கு திரும்பி ஒரு கட்டத்தில் முனையில் ஒட்டிக் கொண்டாலும் கூட திவாகர் விடவில்லை. தனது நடிப்புத் திறமையைக் கொட்டி விட்டுத்தான் போனார். 

திவாகருக்கு அடிப்படையில் நடிப்பார்வம் இருக்கலாம். பிக் பாஸ் போன்ற பெரிய மேடையில் அவருக்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர் என்கிற மிகப் பொிய பாத்திரம் தரப்பட்டது. நடிப்பு ஆர்வம் உள்ள ஒருவர், இந்த வாய்ப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கலாம். மாறாக ஜோக்கர் போல நடந்து கொண்டு அந்த வாய்ப்பை ஒரே நாளில் இழந்தார். ஆக, அவருக்குள் இருப்பது நடிப்புத் திறமையோ அல்லது ஆர்வமோ இல்லை. ‘என்ன செய்தாவது இந்த உலகத்தை கவனிக்க வைக்க வேண்டும்’ என்கிற 'Attention seeking' பிரச்சினை மட்டுமே.

BB TAMIL 9: DAY 40

“காமிரா ஜூம் ஆனாத்தான் ரெக்கார்டு ஆகுமா.. இல்லைன்னா ஆகாதா?” என்று காமிரா பற்றிய எளிய விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார் நடிப்பு அரக்கன். 

காலையில் இருந்து வீட்டு நாயை ஓவர் டைம் பார்க்க வைத்த பெருமை எஃப்ஜேவை சேரும். அவ்வப்போது படுத்து உறங்கி விடும் அவரை எழுப்பவே நாய்க்கு நேரம் சரியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பிக் பாஸிற்கே பொறுக்காமல் உள்ளே அழைத்து விசாரிக்க “ஜெயில்ல கொசுத் தொல்லை, திவாகர் குறட்டை தாங்கலை. தூக்கம் சரியா இல்ல” என்கிற காரணத்தைச் சொன்னார். ஆனால் இந்தப் புகார் எஃப்ஜே மீது நீண்ட நாட்களாகவே இருக்கிறது. 

“இன்னிக்கு முழுக்க நீங்க உக்காரவே கூடாது. நின்னுக்கிட்டேதான் இருக்கணும்” என்கிற தண்டனையைக் கொடுத்த பிக் பாஸ், பின்குறிப்பாக சொன்னதுதான் காமெடி. “அஃப்கோர்ஸ்.. தூங்கக்கூடாது”. 

பெஸ்ட் ஃபொ்பார்மர் தேர்வில் வினோத் வந்தது ஓகே.. அவரால்தான் ராஜா - ராணி டாஸ்க் பெரும்பாலும் கலகலப்பாக நகர்ந்தது. (உருவக்கேலிகளைத் தவிர்த்து). ஆனால் எஃப்ஜே என்ன செய்தார் என்று தெரியவில்லை. கேரக்டர் பிளே சிறப்பாக செய்ததாக வீட்டார் சொல்கிறார்கள். ஆக, அடுத்த வார தல போட்டியில் வினோத் மற்றும் எஃப்ஜே தோ்வு. கூடவே சுபிக்ஷாவும் சபரியும் இருப்பார்கள். 


வொர்ஸ்ட் ஃபர்பார்மராக திவாகர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. டாஸ்க்கில் பாதிலேயே வெளியேறினார். தன் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால் விக்ரம் மற்றும் கனிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது ஆச்சரியம். அன்பு கேங்கை உடைப்பதற்காக எதிர் அணி செய்த க்ரூப்பிஸம்தான் இதற்கு காரணமாக இருக்கும். 

BB TAMIL 9: DAY 40

விக்ரமிற்கும் கனிக்கும் சமமான வாக்குகள் கிடைத்த நிலையில் மறுவாக்கெடுப்பில் கனி தேர்வானார். எனவே அவரும் திவாகரும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. “ஏன்.. மூணு பேரு கூட போகலாமே.. நாங்க அப்படித்தானே போனோம்?” என்று வன்மத்தைக் கொட்டினார் பாரு. டாக்ஸிக் என்று சொல்லப்பட்டதற்கு பாருவுடன் கடுமையாக மோதினார் கனி. “காலைலதான் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனேன்.. மறுபடியுமா?” என்று திவாகர் அனத்த சிரிப்பலை எழுந்தது. 

அடுத்ததாக ‘ஆபாசக் குறியீடு’ பிரச்சினை எழுந்தது. கோட்டை கட்டும் டாஸ்க்கின் போது கற்களை வில்லங்கமான பாணியில் அடுக்கி திவாகரை அரோரா கேலி செய்தார் என்பது புகார். ‘இதை விடக்கூடாது. ஆபாசக் குறியீடு செய்யறாங்க..” என்று திவாகர் ஊரைக்கூட்ட, பாரு அதற்கு பின் பாட்டு பாடினார். 

இந்த விஷயத்தை சபையில் விளக்கமாக சொன்ன பாரு, “இதை அப்பவே அரோரா கிட்ட கிளாரிஃபை பண்ணியிருக்கலாமே.. ஏன் பொதுவுல சொல்றீங்க?” என்று மக்கள் கேள்வி கேட்டவுடன் “இதை நான் அப்பவே விட்டுட்டுடேன். திவாகர்தான் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்” என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளி விட்டு எஸ்கேப் ஆனார் பாரு. 

“இப்படி அடுக்கினால் கற்கள் சரியாது’ என்றுதான் அடுக்கிக் காட்டினேன்” என்பதாக அரோராவின் விளக்கம் இருந்தது. எனில் பாரு மற்றும் திவாகரின் பார்வையில்தான் கோளாறோ?! கம்ரு பிரச்சினை காரணமாக அரோராவை பழிவாங்க பாரு நினைக்கிறாரோ?!

BB TAMIL 9: DAY 40

கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த பாரு, திடீரென திவாகரை வெளியே இழுத்து வந்து புறணி பேசிக் கொண்டிருந்தார். தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த கம்ரூதீ்ன் என்கிற பொம்மையை இப்போது அரோரா கைப்பற்றிக் கொண்டதாக பாரு நினைக்கிறாரா? “முதல்ல துஷார் மேல இன்ட்ரஸ்ட் காட்டினா. அது ஓகே. அது அவங்க பர்சனல். ஆனா நான் கம்ரூ கிட்ட பேசினா ஏன் பொஸஸிவ் ஆகணும்?” என்று அதிமுக்கியமான விஷயத்தை பாரு பேசிக் கொண்டிருக்கும் போது இடையூறாக சபரி வந்தார். 

“கிச்சன்ல காய் வெட்டி பாதில வெச்சிட்டீங்க.. கேக்கறாங்க” என்று சொல்ல “அஞ்சு நிமிஷம் பேசிட்டு வருவேன். அதுக்குள்ள ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு.

“இவங்களையெல்லாம் கடவுள் பார்த்துப்பான்” என்று திவாகர் ஆறுதல் சொல்ல “கம்ரூவை கைக்குள்ள போட்டு வெச்சிருக்கா” என்று அனத்திக் கொண்டே வீட்டுக்குள் சென்றார் பாரு. உள்ளே சென்ற பாருவிற்கும் அமித்திற்கும் இடையில் மோதல். வேலையை பாதியில் நிறுத்தி விட்டு சென்றது காரணம். அங்கும் அலட்டலாகவே பதில் சொன்னார் பாரு. இது கனியுடனான மோதலாகவும் மாறியது. “இது என் வீடு.. என்னைப் பத்தி பேச உனக்கு அருகதையே கிடையாது” என்று ஆவேசமானார் கனி. 

அந்தப் பக்கம் பாரு பற்றி கம்ரூவிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “பாரு.. கலை கிட்ட சொல்லிட்டிருந்தாளாம்.. கம்ரூவை யூஸ் பண்ணிட்டு வெளியே போனவுடன் விட்ருவேன்னு.. அவன் என் கிட்ட சொன்னான்” என்று அரோரா பற்ற வைக்க “எனக்கு அப்பவே ஃபீல் ஆச்சு” என்று தாமத ஞானோதயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் கம்ரூ. 

“இந்த வாரம் அரோரா வெளிய போய் தொலைஞ்சா நல்லாயிருக்கும். அவ கம்ரூ கிட்ட பேசினா எனக்கு காண்டாகுது” என்று வெளிப்படையாகவே வயிற்றொிச்சல் பட்டுக் கொண்டிருந்தார் பாரு. 

BB TAMIL 9: DAY 40


அடுத்த வாரத்திற்கான ‘தல’ போட்டி நடந்தது. சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கொம்புகளின் மீது கால் வைத்து போட்டியாளர்கள் பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். ‘இவர் வீட்டு தல ஆக வேணாம்’ என்று நினைப்பவர்கள், அதற்கான காரணத்தைச் சொல்லி ஒவ்வொரு கம்பாக உருவி விடலாம். 

சுபிக்ஷா, சபரி, வினோத் ஆகிய மூவரும் வீட்டு தலயாகி விடக்கூடாது என்று பலர் எண்ணியதால் மூவரும் அவுட். இறுதியில் எஃப்ஜே தாக்குப் பிடித்ததால் அவர்தான் அடுத்த வார வீட்டு தல. முன்கோபியான இவர் எப்படி பாரு, திவாகரின் அலப்பறைகளை கண்ட்ரோல் செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இன்று விசாரணை நாள்.  பாருவிற்கு ஏற்பட்ட காயம், ராஜா - ராணி டாஸ்க் சொதப்பல்கள், ரேங்கிங் டாஸ்க்  அநீதி, திவாகர் - அரோரா பிரச்னை, டூத்பிரஷ் சதி உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்படலாம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். 

BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: திடீரென வெளியேற்றப்பட்ட `ஸ்டார்’ ? கடைசி நேரத்தில் நிகழ்ந்த அதிரடி

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஏழு பேர் வெளியேறியுள்ளனர்.நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல்... மேலும் பார்க்க

BB TAMIL 9: `அது வேற ஷோ இது வேற ஷோ’ இந்த வார எவிக்‌ஷன் - வெளியேறிய டைட்டில் வின்னர்?

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஏழு பேர் வெளியேறியுள்ளனர்.நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "உனக்கு எந்த அருகதையும் இல்லை" - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!

இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமி... மேலும் பார்க்க

BB TAMIL 9:DAY 39: ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ -பிக் பாஸ் டெக்னிக்; ரணகளமான ரேங்கிங் டாஸ்க்

பிக் பாஸ் பாருவின் ரசிகர் போல. பாரு சொல்லும் விஷயங்களையெல்லாம் டாஸ்க்கில் நுழைத்து விடுகிறார். பல எபிசோடுகளுக்கு முன்பே கனியை ‘ராஜமாதா’ என்று பாரு கிண்டலடிக்க, அதே பாத்திரம் கனிக்கு ராஜா - ராணி டாஸ்க்... மேலும் பார்க்க