கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album
புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், `தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக, நேற்று (15.11.2025) வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அதனால் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அத்துடன், மணிக்கு 55 கி. மீ. வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசியத் தேவைகள் இருந்தால் தவிர, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், இப்படியான பேரிடர் காலங்களில் அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதுடன், தேவையற்ற வதந்திகளை நம்பாமல் அரசு வெளியிடும் செய்திகளை பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களுக்கு 1077, 1070, 112 என்கிற இலவச எண்களிலும், 9488981070 என்கிற வாட்ஸ்-அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


















