IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு...
பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை
“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலையோ, 'கோயிலைச் சுற்றியும் தண்ணீர், கருவறைக்குள்ளும் தண்ணீர்' என்பது போல அவலத்தின் உச்சமாக காட்சியளிக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் என பலரின் அறிவுப் பசிக்குத் தீனி போட வேண்டிய இந்த நூலகம், இன்று தனக்கே அடிப்படை வசதிகள் இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நூலகக் கட்டிடத்தில் சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடத்தின் உள்ளேயே தண்ணீர் கசிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாகும் பேராபத்தில் உள்ளன. "அறிவை வளர்க்க வந்த இடத்தில், புத்தகங்கள் நீரில் நனைந்து கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது" என்று கண்ணீர் வடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கழிவறை, குடிநீர் - அடிப்படை வசதிகளுக்கே அவதி!
பர்கூர் நூலகத்தில் அடிப்படைத் தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதி கூட இல்லாமல், வாசகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அடுக்கடுக்கான அவலங்கள்:
நூலகத்தின் அவல நிலை இத்துடன் முடியவில்லை.
கட்டிடத்தின் மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.
நூலகத்தைச் சுற்றி புதர்கள் மண்டி, சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காட்சியளிக்கின்றன.
கட்டிடத்திற்கு வண்ணம் பூசப்படாததால், ஒரு பாழடைந்த கட்டிடம் போல பொலிவிழந்து நிற்கிறது.
நூலகத்தின் முன்பகுதி சுத்தம் செய்யப்படாமலும், தரை போடப்படாமலும் கரடுமுரடாக உள்ளது.
நூலகத்தின் முதல் தளம் இருந்தும், அது செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. அங்கு குழந்தைகளுக்கான பிரிவில் உள்ள பொருட்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சிதைந்து வருகின்றன.

மாணவர்களின் கனவில் விழும் இடி!
இன்றைய போட்டி மிகுந்த உலகில், அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம் இந்த நூலகங்கள் தான். ஆனால், இங்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களே இல்லை என்பது வேதனையின் உச்சம்.
மேலும், இந்த நூலகம் பகுதி நேரமாக மட்டுமே இயங்குகிறது. நிரந்தரப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், சந்தாதாரர்களை அதிகரிக்கவோ, நூலகத்தை முறையாக நிர்வகிக்கவோ வழியில்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
"சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு நூலகத்தின் நிலையே இப்படி என்றால், எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது?" என்று பர்கூர் தொகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
அறிவை வளர்க்கும் இந்த நூலகத்தை இனியும் தாமதிக்காமல், போர்க்கால அடிப்படையில் முழுமையாகச் சீரமைக்க வேண்டும். நிரந்தரப் பணியாளர்களை நியமித்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களும், போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களும் முழுமையாகப் பயனடையும் வகையில், நூலகத்தை முழு நேரமும் இயக்கவும், தேவையான அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி நிரப்பவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும், பர்கூர் நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பர்கூர் மக்களின் கோரிக்கையாகும்.
இது குறித்து நாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, "இப்படி ஒரு விவகாரம் தன் கவனத்திற்கு வரவில்லை" என்றும், "நிச்சயமாக நூலகத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும்" அவர் உறுதியளித்துள்ளார்.













