"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல...
பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?
பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.
அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், என்.டி.ஏ கூட்டணியின் வியூக வலிமையையும், மகாபந்தன் கூட்டணியின் போதாமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

அதே நேரம், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணிதான் வெற்றிபெரும் என்ற பாரம்பரிய அரசியல் சிந்தனையையும் உடைத்து எறிந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் ஓட்டு எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக அலசினாலே, என்.டி.ஏ- கூட்டணியின் வெற்றிப் எப்படி சாத்தியமாகியிருக்கிறது என்பது புரிந்துவிடும்.
சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் சீமாஞ்சல் பகுதியை எடுத்துக்கொள்ளலாம்.
சீமாஞ்சல்:
இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மாவட்டங்களில் 'பூர்னியாவில் 38.46%, அராரியாவில் 42.95% , கதிஹாரில் 44.47%, கிஷன்கஞ்சில் 67.89% என முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்' என்கிறது சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம்.
இந்த நான்கு மாவட்டங்களில் மொத்தம் 24 தொகுதிகள் இருக்கின்றன. எனவே, 2020-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 12 (BJP 8, JD(U) 4) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 7 (காங்கிரஸ் - 5, RJD - 1 CPI(ML) (L) 1) இடங்களிலும், AIMIM 5 இடங்களிலும் வென்றன.

ஆனால், தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ கூட்டணி 14 (BJP 7, JD(U) 5, சிராக் பஸ்வானின் LPJ 2) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 5 (காங்கிரஸ் 4, RJD 1)இடங்களிலும், அசாதுதீன் ஊவைசியின் AIMIM கட்சி 5 இடங்களிலும் வென்றிருக்கிறது.
இந்தத் தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக்கான பின்னடைவுக்கு இரண்டு காரணங்களைப் பட்டியலிடலாம்.
1. மகாபந்தனின் வாக்குப் பிரிவு:
சீமாஞ்சல் பகுதியில் மகாபந்தனுக்கு யாதவர்கள், முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என்ற சாதகமான சூழல் இருந்தாலும், யாதவர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறின.
குறிப்பாக மகாபந்தன் கூட்டணியில் AIMIM கட்சி இணைந்துகொள்வதற்கானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தும். ஆர்.ஜே.டி தலைமை அதை பொருட்படுத்தவில்லை.
எனவே, கூட்டணி தெளிவின்மையால் AIMIM கட்சி, முஸ்லிம்களுக்கான பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இறங்கியது. அதனால், முஸ்லிம்களின் வாக்குகள் மகாபந்தன் கூட்டணி - AIMIM என இரண்டாகப் பிரிந்தது.
2. என்.டி.ஏ வாக்குகளை ஒருங்கிணைத்தது:
முஸ்லிம்களின் வாக்குப் பிளவுபட்ட நிலையில், என்.டி.ஏ கூட்டணிக்கு அது சாதகமானது. குறிப்பாக பா.ஜ.க சாதிப் பிளவுகளைக் கடந்து இந்து வாக்களர்களின் வாக்கையும், சிராக் பஸ்வானின் வாக்கு பலத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அணியில் திரட்டியது.

இதன் மூலம் கடந்த தேர்தலை விட 2 தொகுதிகளை அதிகம் வென்று, சவாலான பகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணியால் வெற்றிப்பெற முடியும் என நிறுவியிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவு உணர்த்தும் முக்கியமான செய்தி, பிளவுபட்ட சிறுபான்மை வாக்குகளும், ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மை வாக்குகளும் இணைந்து, மக்கள்தொகை புள்ளிவிவரங்களுக்கு முரணான தேர்தல் வெற்றியை எப்படி உறுதிப்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன.
குறையும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்:
குறைவான பிரநிதித்துவம், வாக்கு சிதறல், ஒருங்கிணைப்பு போதாமை போன்ற பல அரசியல் காரணங்களால், பீகார் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1990 முதல் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது.
2022-23 மாநில சாதி கணக்கெடுப்பின்படி, பீகாரின் 13.07 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகம் 17.7% (2,31,33,900) இருக்கின்றனர். ஆனால், என்.டி.ஏ கூட்டணியும் சரி, மகாபந்தன் கூட்டணியும் சரி மிகக் குறைவான முஸ்லிம் வேட்பாளர்களையே தேர்தலில் முன்னிறுத்தியது.

இந்த தேர்தலில், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM கட்சி, 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி 5 இடங்களை வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 18 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, மூன்று இடங்களிலும், காங்கிரஸ் 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் ஜனதா தளம் (ஐக்கிய) 4 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. CPI(M), பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜன் சுராஜ் கட்சி போன்ற பிற கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், அதில் யாரும் வெற்றி பெறவில்லை.
அதன் பலனாக படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சட்டமன்றத்தில் குறைந்து வருகிறது. 2015-ம் ஆண்டின் பீகார் சட்டமன்றத்தில் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். 2020-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 19 எனக் குறைந்தது.
இந்த தேர்தலில் மேலும் 8 முஸ்லிம் பிரதிநிதிகள் குறைந்து 11 என சுருங்கியிருக்கிறது. இந்தச் சூழல், பீகார் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் நிலப்பரப்பை பிரதிபலிப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பல கட்சிகள் மற்றும் சமூகங்களிடையே வாக்குகள் பிரிக்கப்பட்டு விளையாடப்பட்ட இந்த அரசியலில், ஒருங்கிணைத்தலில் வெற்றிப்பெற்றக் குழுவே ஆட்சியை தக்கவைத்திருக்கிறது.















