குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செ...
பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் என கூறப்படுகிறது.
பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் 71.6% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அதற்கு காரணம் நிதிஷ் குமார் செயல்படுத்திய பெண் வாக்காளர்களைக் கவரும் விதமான திட்டங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் இந்தியா கூட்டணித் தலைவர்களில் சிலர், `தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் அரசு ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் செலுத்திய ரூ.10,000 தான் இந்த வெற்றிக்கு காரணம்' என்றக் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்கள்.
அப்படி என்னதான் அந்த திட்டம்? எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
மகிளா ரோஜ்கர் யோஜனா
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் `முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா'. செப்டம்பர் 26, 2025 அன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சிறு தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவது, புலம் பெயர்வதை தடுப்பது போன்ற நோக்கங்களும் அறிவிக்கப்பட்டன.
இந்த திட்டத்துக்கான அளவுகோல்?
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் பீகாரில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும், 18-60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் ஒரு சுய உதவிக்குழுவுடன் (SHG) தொடர்புடையவராகவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கையும் வைத்திருக்க வேண்டும். பிற சுயதொழில் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற்ற பெண்களின் விண்ணப்பங்கள் இதில் பரிசீலிக்கப்படாது.
என்ன திட்டம்?
ஒரு குடும்பத்தில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டும் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியைப் பெறலாம்.
இந்தத் திட்டம் கிராமப்புற மேம்பாட்டுத் துறை மூலமும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூலமும் செயல்படுத்தப்படுகிறது.
பணம் செலுத்துவதற்கான காலக்கெடு
விண்ணப்பப்படிவம் பெறப்பட்ட பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும். முதல் தவணை விண்ணப்ப தேதியிலிருந்து 7-15 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.
செப்டம்பர் 2025 முதல், இதுவரை சுமார் 75 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். 15 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
டிசம்பர் 2025-க்குள் அனைத்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கும் தொகையை அனுப்பப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.
பெண்களுக்கான நலத்திட்டம்:
பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய எம்.பி-களில் ஒருவர் நிதிஷ் குமார். 2005-ம் ஆண்டு அவர் பீகார் முதல்வரானபோது, முன்னாள் பீகார் முதல்வரும் சோசலிச சின்னமான கர்பூரி தாக்கூரிடமிருந்து பல விஷயங்களை எடுத்துக்கொண்டார்.
அதில் ஒன்று, முதல்வராக தனது முதல் பதவிக்காலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்துவதும், பின்னர் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதும் ஆகும்.
அதைத் தொடர்ந்து சீருடைகள், பெண் மாணவர்களுக்கு மிதிவண்டித் திட்டம், பிற கல்வி மற்றும் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
தனது முதல் பதவிக்காலத்திலேயே சுயஉதவிக்குழுக்கள் (SHGs) என்ற கருத்தை முன்வைத்தார். இப்போது, "ஜீவிகா தீதிகள்" என்று அழைக்கப்படும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்கள், மக்களுக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கும் இடையே ஒரு பாலமாக மட்டுமல்லாமல், JD(U)-ன் அரசியல் சார்பற்ற பிரிவாகவும் மாறிவிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு பெண்களை சுய உதவிக் குழுக்கள் அணிதிரட்டிய விதமே, தேர்தலில் பெண்களின் அதிக வாக்குப்பதிவிற்கு (71.6%) முக்கிய பங்களிப்பு.
நிதிஷ் குமார் கலந்துகொண்ட கூட்டங்கள் பெண்களால் நிரம்பியிருந்தன. இப்படி பெண்களின் படையை நிதிஷ் குமார் பலமாக திரட்டியதின் ஒரு பகுதிதான், முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம் என்கிறது அரசியல் வட்டாரம்.













