IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு...
"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம், குடியிருப்பு வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாம் என்ன தான் சத்துணவு, டயட், உடற்பயிற்சி என்று இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை தான். சென்னை மாநகரம் வெள்ளம், புயல் போன்ற எந்த பேரிடரையும் எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டுவர தூய்மைப் பணியாளர்களின் பணி தான் மிகவும் முக்கியமான ஒன்று.

தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும், வாழ்க்கை தரம் உயர்ந்து, நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இது தான் சமூகநீதி. இந்த சமூக நீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து அவர்களின் பசியை போக்குவதற்காகத்தான் இந்த முதலமைச்சர் உணவு திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
உடல் பரிசோதனை, மாற்று வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்கும் வகையில், ரூ.50 கோடிக்கு அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வளவு செய்தாலும் உங்களுக்கான தேவை இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்.

நீங்கள் செய்வது வேலை அல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். உங்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பார்த்து நான் மட்டுமல்ல இந்த மாநாகரமே நன்றியுடன் உங்களை வணங்குகிறது" என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

















