IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு...
’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்.

நம் நாட்டில் எத்தனையோ விமான நிலையங்கள் இருந்தும், இன்னும் எளிய மக்களுக்கு விமானத்தில் பயணம் செய்கிற வாய்ப்பு எளிதாகக் கிடைப்பதில்லை. பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்யாமலேயே விமானம் குறித்த பாடங்களைக் கற்கின்றனர். விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் நெல்சன் பொன்ராஜ். தன்னுடைய மாணவர்களின் பாடப்புத்தகத்தில் விமானம் பற்றி இடம்பெற்றிருந்தும், அவர்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததே இல்லை என்பதால், அவர்களை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்திருக்கிறார். இவர் நல்லாசிரியர் விருதுப்பெற்றவர்.

நெல்சன் பொன்ராஜ் அவர்களிடம் பேசியபோது, ‘’என்னுடைய மாணவர்களின் பாடத்திட்டத்தில் தரைவழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து சார்ந்த பாடம் இடம்பெற்றிருந்தது. அதை நான் நடத்திக் கொண்டிருந்தபோது, ’விமானத்தை நாங்கள் அருகில் இருந்து பார்க்க ஆசைப்படுகிறோம்; எங்களை அழைத்துச் செல்வீர்களா சார்’ என்று மாணவர்கள் கேட்டார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. இரவெல்லாம் சிந்தித்தேன். மறுநாளே விமான நிலையம் சென்று மாணவர்கள் செல்வதற்கான தொகை அனைத்தையும் கணக்கு பார்த்தேன். ஒன்றரை லட்சம் தேவைப்பட்டது. பிறகு என் சொந்த செலவில் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற 11 மாணவர்கள், சென்ற ஆண்டு என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் 6 பேர், என்னுடன் சேர்த்து 3 ஆசிரியர்கள் என 20 பேர் விமானத்தில் பயணம் செய்தோம்.
எங்கள் பள்ளி மிகவும் சிறியது. நாங்கள் விமானப்பயணம் செய்ய விரும்பியதை அறிந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாணவர்களைச் சந்தித்து அவர்களது எதிர்கால கனவுகள் குறித்துப் பேசினார். எங்களை வழி அனுப்ப பல அரசு அதிகாரிகளும் வந்திருந்தார்கள். நாங்கள் சென்னை வந்து இறங்கிய போது சென்னை வாழ் வக்கீல் சங்கத்திலிருந்து வந்து குழந்தைகளுக்கு காலை உணவு தந்தனர். தூத்துக்குடியின் முன்னாள் ஆட்சியர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் அவர்கள்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

பிர்லா கோளரங்கம், மெரினா கடற்கரை, முன்னாள் முதலமைச்சர்களின் சமாதிகள் என மாணவர்களுக்கு சென்னையைச் சுற்றி காண்பித்தோம். கன்னிமாரா நூலகம், அருங்காட்சியகம் எனப் பல இடங்களுக்குச் சென்றோம். அருங்காட்சியகத்திற்குச் செல்கையில் அருங்காட்சியக காப்பாளர்கள் எங்களை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். தெரியாத இடத்தில் பலரும் எங்களை வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது’’ என்றார். கடந்த மார்ச் மாதமும், இவர் இதேபோல சில மாணவர்களின் விமானப்பயண கனவையும், சென்னையைப் பார்க்கும் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறார்.
விமானத்தில் பயணம் செய்த எட்டாம் வகுப்பு மாணவி த. ரீனாவிடமும், ஐந்தாம் வகுப்பு மாணவி தி. கெசிதாவிடமும் பேசினோம்.
“சார் எங்க எல்லார் கிட்டேயும் செல்லமா இருப்பார். அவர் கிட்ட விமானத்துல எங்களை கூட்டிக்கிட்டுப் போறீங்களா; நாங்க சென்னையைப் பார்க்கணும்னு கேட்டோம். ஒரு டிக்கெட் 7,100 ரூபாயாம். நாங்க ஒரு ரூபா செலவு செய்யல. சாரே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார். நாங்க வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம். நாங்க விமானத்துல போறப்போ மேல இருந்து பூமியை பார்த்தோம். மேகத்தையும் பார்த்தோம். சந்தோஷமா இருந்துச்சு. நாங்க இதுவரை மெட்ரோ ரயில்ல போனதே இல்ல. அதுலேயும் போனோம்” என்று உற்சாகமாகப் பேசினார்கள்.


















